Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல்வாதிகள் மக்களின் சொத்தை களவாடுவதே வறுமைக்கு காரணம்: ஜனாதிபதி

In இலங்கை
Updated: 11:06 GMT, Feb 5, 2018 | Published: 11:06 GMT, Feb 5, 2018 |
0 Comments
1247
This post was written by : Anojkiyan

அரசியல்வாதிகள் மக்களின் சொத்தை களவாடுவதே வறுமைக்கான காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதநதிரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கட்சி பார்த்து அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 2015ஆம் ஆண்டு என்னை ஜனாதிபதியாக்கியமைக்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அரசாங்கத்தினூடாக அபிவிருத்திகளை செய்யும் போது ஒரு கட்சி சார்ந்து வேலைத்திட்டங்களை நான் ஒரு போதும் செய்யமாட்டேன். உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன். சிங்களம், தமிழ், முஸ்லிம் என பிரித்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது பிழையான முறையாகும்.

வவுனியாவில் மாத்திரமல்ல வட பிராந்திய அபிவிருத்தி வேலைகளுக்கு ஜனாதிபதி தலைமையில் ஒரு செயலணியை உருவாக்கியுள்ளேன். அதில் அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். மக்களுக்கு சேவையாற்றுவதற்கு கட்சி ரீதியாக பிரிந்திருப்பது நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எங்களுக்கு வாக்களிக்கா விட்டாலும் வீடு, கிணறு மற்றும் பாதைகள் செய்து கொடுப்போம். நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது எனக்கு அன்ன சின்னத்தில் வாக்களித்திருந்தீர்கள். ஆகவே மதம் கட்சி இனம் பேதம் பார்க்காமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

நான் ஜனாதிபதியானதன் பின் கடந்த மூன்று வருட காலமாக நிம்மதியாக நீங்கள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். முன்னைய ஆட்சியில் வடக்கில் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் பலர் காணாமல் போயிருந்தார்கள். பலர் வெள்ளை வானில் முன்னைய அரசாங்கத்தால் கடத்தி செல்லப்பட்டிருந்தார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என தெரியாது. யுத்தத்திற்கு பிறகு கூட அதே விதத்தில் அவர்களை கொன்று குவித்திருந்தார்கள். யுத்தம் முடிந்த பின்னரும் கொலைகள் கடத்தல்கள் ஏன் நடந்தது என நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். பத்திரிகையாளர்கள் தெருவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பத்திரிகை அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக அவ்வாறான சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. எனவே எனக்கு வாக்களித்த மக்கள் பெருமைப்பட வேண்டும்.

ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நாட்டு மக்களின் சொத்துக்கள் எவ்வாறு களவாடப்பட்டது என உங்களுக்கு தெரியும். எனவே கள்வர்களை பாதுகாப்பதற்காக அவர்கள் அமைத்துள்ள கட்சிதான் புதிய கட்சி, அதற்கான சாட்சிகள் உள்ளது. உங்களுக்கு தெரியும் நான் இரண்டு ஆணைக்குழுக்களை உருவாக்கி அதன் அறிக்கைகள் வந்துள்ளது. ராஜபக்ஷ அரசாங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அதிலே பல குற்றங்கள் இருக்கிறது. மத்திய வங்கியில் 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை ஊழல் நடந்திருப்பதாக அந்த ஆணைக்குழு எங்களுக்கு தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சிகாலத்தில் தவறு செய்தவர்களுக்கும் எனது ஆட்சிகாலத்தில் தவறு செய்தவர்களுக்கும் ஒரு போதும் மன்னிப்பு கொடுக்கப்பட போவதில்லை. சட்டத்தின் முன் அவர்கள் அனைவருக்கும் நாங்கள் தண்டனை வழங்குவோம். விமான சேவைகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் களவாடப்பட்டள்ளது. அதனை கண்டுபிடிப்பதற்கும் கடந்த வாரம் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளேன்.

கட்சி, ரீதியாக மதம் ரீதியாக, இன ரீதியாக இல்லாமல் இலங்கையர் என்ற ரீதியில் நாங்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இந்த நாட்டில் வறுமை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. ஆட்சிக்கு வருகின்ற அரசியல்வாதிகள் உங்கள் சொத்தை களவாடுகின்றார்கள் அதுதான் இந்த வறுமைக்கான காரணம். லஞ்சம் பெறுகின்ற இந்த மோசமான அரசியல் வாதிகளை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் அப்போதுதான் இந்த நாட்டிலே வறுமை இல்லாமல் போகும். களவெடுக்காத நல்ல அரசியல் வாதிகளை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு நல்ல நாட்டை கட்டியெழுப்ப முடியும் நாங்கள் பிரிந்திருந்து ஒன்றும் செய்ய முடியாது ஆகவே நாங்கள் ஒன்றுபடவேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg