Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களின் அரசியல் பிரவேசம் அவசியமானது: ஹஸ்மியா

In இலங்கை
Updated: 04:57 GMT, Feb 7, 2018 | Published: 04:57 GMT, Feb 7, 2018 |
0 Comments
1143
This post was written by : Puvanes

முஸ்லிம் பெண்கள், இஸ்லாமிய வரையறைக்குள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நிந்தவூரில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

கல்வித்துறையில் மாத்திரமின்றி ஏனைய அனைத்து துறைகளிலும் இன்று ஆண்களை விட பெண்கள் சிறந்த நிலைக்கு முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

அதேபோன்று பெண்களின் அரசியல் பிரவேசம் எதிர்காலத்தில் நாட்டின் அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதுடன், பெண்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் செவிசாய்க்க வேண்டியதொரு நிர்ப்பந்தமும், தேவையும் ஏற்படப் போகின்றது.

பெண்கள் வைத்தியராகவும், வக்கீலாகவும், ஏனைய உயர் பதிவிகளிலும் வருவதற்கு நாம் அனைவரும் அதிக அக்கறையும், ஆர்வமும் காட்டிவரும் இக்காலத்தில், ஏன் அவர்கள் அரசியலில் ஈடுபட முடியாது என்பதனைப் பற்றி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அதனை எவரும் தட்டிக்கழிக்கவோ அல்லது கவனயீனமாக இருந்து விடவோ முடியாது. இதற்காகவே, ஆளுமை நிறைந்த, சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட பெண்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

தற்காலத்தில் பெண்களின் அரசியல் பிரவேசம் கேலிக்கையாகவும், வெறும் கண்துடைப்பாகவும் நோக்கப்பட்டு வருகின்றது. சில அரசியல் கட்சிகள் இவ்விடயத்திற்கு முக்கியத்துவம் வழங்காமல், எந்தவித தகைமையுமற்ற சிலரை களமிறக்கியுள்ளன. ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாத்திரமே நாடு முழுவதும் கட்சியில் மகளிர் அணியொன்றை உருவாக்கி தகுதியும் திறமையுமுள்ள பெண்களை இனம்கண்டு தேர்தலில் களமிறங்கியுள்ளது என ஹஸ்மியா மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg