Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

92 நாடுகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று ஆரம்பம்!

In விளையாட்டு
Updated: 06:31 GMT, Feb 9, 2018 | Published: 06:31 GMT, Feb 9, 2018 |
0 Comments
1283
This post was written by : Anojkiyan

92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது.

உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் ஐஸ் ஹொக்கி, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங் உள்பட 15 வகையான விளையாட்டுகள் இருபாலருக்கும் நடத்தப்படுகிறது.  இதில் அமெரிக்கா, அர்ஜென்டினா, அவுஸ்ரேலியா, பிரேஸில், சிலி, கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, இந்தியா உள்பட 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஈகுவடார், எரிட்ரியா, கோசோவா, மலேசியா, நைஜீரியா, சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகள் முதல்முறையாக களம் காணுகின்றன.

தென்கொரியாவில் நடைபெறும் இந்த போட்டியில் அதன் எதிரி நாடான வடகொரியாவும் பங்கேற்கிறது. தொடக்க விழாவில் இரு அணிகளும் இணைந்து அணிவகுத்து செல்ல இருப்பது சிறப்பம்சமாகும்.

அத்துடன் ஐஸ் ஹொக்கி பெண்கள் போட்டியில் இரு நாட்டு வீராங்கனைகளும் இணைந்து ஒரே அணியாக கொரியா என்ற பெயரில் களம் இறங்குகிறார்கள்.

தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது இது முதல்முறையாகும். இதற்கு முன்னதாக 1988ஆம் ஆண்டில் தென்கொரியா தலைநகர் சியோலில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg