Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதயங்க வீரதுங்க ஐக்கிய அரபுகள் ராச்சியத்திலிருந்து வெளியேறத் தடை

In இலங்கை
Updated: 17:33 GMT, Feb 9, 2018 | Published: 15:21 GMT, Feb 9, 2018 |
0 Comments
1246
This post was written by : poovannan

ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, ஐக்கிய அரபுகள் ராச்சியத்திலிருந்து வெளியேறத் தடை செய்யப்பட்டுள்ளார் என அந்த நாட்டுக்கான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

“சுமார் 7.833 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்ட பொதுமக்கள் நிதி மோசடி குறித்தான விசாரணைகளுக்காகவே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வீரதுங்க தொடர்பில் இலங்கை இன்டர்போலினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நீல அறிக்கையின் அடிப்படையில், அவர் இருக்குமிடத்தினை கண்டறிந்து கொள்வதற்காக பரஸ்பர சட்ட ஆதரவு ஊடாக ஒருசில நாடுகளுடன் இலங்கை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ஐக்கிய அமெரிக்காவிற்கு செல்ல முற்பட்ட வேளையில், 2018 பெப்ரவரி 4 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஐக்கிய அரபு ராச்சியத்தில் அவர் இடைமறிக்கப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கையானது, இன்டர்போலினால் வெளியிடப்பட்ட ‘நீல அறிக்கை” இன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ‘குற்றவியல் விசாரணைகளில் தேடப்படும் நபர்” ஆன வீரதுங்க இருக்கும் இடத்தினைக் கண்டறிவதே இந்த அறிக்கையின் குறிக்கோளாக அமைந்திருந்தது.

இருந்தபோதிலும், ஐக்கிய அரபு ராச்சியத்திலுள்ள சட்டம் மற்றும் இன்டர்போல் மேலாண்மை செய்யும் ‘நீல அறிக்கை” விதிமுறைகள் காரணமாக, வீரதுங்கவின் தொடர்ச்சியான தடுத்து வைப்பு நிறுத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்டார். தற்போது அவர் ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்கியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய அரபு ராச்சியத்திலுள்ள பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குறித்த விசாரணைகள் முடியும் வரை திரு.வீரதுங்க ஐக்கிய அரபு ராச்சியத்தை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கையில் வீரதுங்கவுக்கு எதிரான மோசடிகள் மற்றும் முறைப்பாடுகளை விசாரணை செய்து வரும் நிதி குற்றவியல் புலனாய்வு பிரிவானது இவ் வழக்கு குறித்து அபுதாபியில் உள்ள இன்டர்போலுடன் பணியாற்றி வருகிறது.

இவ் விடயம் தொடர்பில் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் குடிவரவு விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள வழக்கறிஞர்கள் ஆகியோர் இலங்கை அரசிற்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

மேலும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் நிதி குற்றவியல் புலனாய்வு பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த இலங்கை அதிகாரிகளைக் கொண்ட குழுவானது, திரு.வீரதுங்க அவர்களுக்கு எதிராகவுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அவர் மறுமொழிகளை அளிப்பதற்காக இலங்கைக்கு நாடுகடத்தும் குறிக்கோளுடன், ஐக்கிய அரபு ராச்சியத்திலுள்ள தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg