Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்த வென்றது எவ்வாறு? – அதிரும் இலங்கை அரசியல்!

In இலங்கை
Updated: 11:13 GMT, Feb 13, 2018 | Published: 11:13 GMT, Feb 13, 2018 |
0 Comments
2002
This post was written by : Puvanes

முத்தசாப்த யுத்தகாலத்தின் பின்னர் இலங்கையில் உருவான முதலாவது கூட்டு அரசாங்கமாகவே நல்லாட்சி அரசு அமைந்தது எனினும், அதன் வினைத்திறனற்ற செயற்பாடுகளின் பிரதிபலிப்பே தற்போது தென்பட்டுள்ளது.

நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எனப்படுவது கிராமிய மட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கை மட்டுமே. அதாவது வீதி விளக்குகளைப் பொருத்துதல், குப்பைகளை அகற்றுதல் போன்ற சிறிய அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கானதோர் தேர்தல் மட்டுமே.

எனினும் சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும், அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் காரணமாக புதிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான தேர்தலாகவே இந்தத் தேர்தல் நோக்கப்பட்டது என்பது உண்மை.

தற்போது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் முத்தசாப்த யுத்தத்தின் பின்னர் இலங்கை செல்லும் பாதையினைக் தெளிவாக எடுத்துக்காட்டும் பிரதிபளிப்பு என்றே நோக்கமுடியும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதிநிதித்துவப்படுத்தி களமிங்கிய பொதுஜன பெரமுன ஏராளமான உள்ளூர் அதிகார சபைகளை தன்வசப்படுத்திக்கொண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கனவுகளைத் தவிடுபொடியாக்கியது.

குறிப்பாக பல இலட்சம் உயிர்களைக் காவு கொண்ட இலங்கை யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள், மற்றும் போர்க்குற்றங்கள் மட்டுமல்லாது பல ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்ட மஹிந்த நாட்டில் எதிர்கால அரசியலைத் தீர்மானிப்பவர்களில் பிரதான இடத்தில் உள்ளார் என்பதை இந்தச் சிறு தேர்தல் அப்பட்டமாக வெளிக்காட்டி விட்டது.

இதன்மூலம் “மக்கள் இப்போதைய அரசாங்கத்தினை வெறுத்துவிட்டனர், நம்பிக்கைத்தன்மையில்லை அதனால் அரசாங்கத்தை மீள தேர்வு செய்யப்படவேண்டும், எனவும் இலங்கை மக்கள் நாட்டை மீள கட்டியெழுப்ப எதிர்பார்க்கின்றார்கள்” எனவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் ஊழல் மோசடி ஒழிப்பு, நீண்ட கால யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்கள் ஆற்றுப்படுத்தல், நல்லிணக்கம் போன்ற பல்வேறு வகையான நம்பிக்கைகளை எதிர்பார்த்தே 2015ஆம் ஆண்டு மைத்திரி ஜனாதிபதி பதவியில் அமர்ந்தார்.

இவ்வாறான நிலையில் சாதாரணதோர் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் மோசமான தோல்வியானது மைத்திரிக்கு மக்கள் கொடுத்த வாய்ப்பினை அவர் முறையாக பயன்படுத்த தவறிவிட்டார் என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது. எனவே மைத்திரிக்கு மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவது மிகக் கடினம் என்றே அரசியல் புத்திஜுவிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று உள்ளூராட்சி தேர்தல்கள் நெருங்கி வந்த காலகட்டத்தில் ஐ.தே.க மற்றும் சுதந்திரக்கட்சி இடையே உட்பூசல்கள் அதிகரித்தன. இந்த முறுகல் நிலையும் ஒருவர் மாற்றிய ஒருவரின் குற்றச்சாட்டுகளும் மஹிந்தவின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பினை வழங்கியது என்பதனை மறுக்க முடியாது.

மஹிந்த ராஜபக்ச சுதந்திரக்கட்சியின் உறுப்பினராகவே இருக்கின்றார் என்றாலும் பொதுஜன பெரமுனவிற்கு அவர் வழங்கி ஆதரவு மட்டுமே அக்கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆக இப்போதைக்கு மஹிந்த சுதந்திரக்கட்சியின் தலைமைப்பொறுப்பினை மீண்டும் ஏற்றுக்கொள்வாராயின் அவர் நாட்டின் அரசியலின் முக்கிய புள்ளியாக மாற்றமடைந்து அசைக்கமுடியாத பலத்தினைப் பெற்றுக்கொள்வார் என்பது மறுக்க முடியாதது.

மேலும், தற்போதைய நிலையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆகிய இணைந்த அரசாங்கம் அமைப்பு, சுதந்திர கட்சி அல்லது ஐ.தே.க தனித்த அரசு, பொதுத் தேர்தல் ஒன்றுக்கான கோரிக்கை, பிரதமரின் பதவி விலகல், உட்பட பல்வேறு திருப்புமுனைகளை எதிர்பார்த்து இலங்கை அரசியல் நகர்கின்றது.

மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி வேட்பாளராக நிற்கப்போவதில்லை என உறுதியளித்த மைத்திரிபால சிரிசேன தலைமையிலான சுதந்திரக்கட்சியின் தற்போதைய தோல்வி அக்கட்சியின் தலைமை மாற்றத்திற்கு வழிகோளாக அமையும் என்பதும் பலரது எதிர்பார்ப்பு.

அவ்வாறான ஓர் நிலை ஏற்படின் ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது மைத்திரியின் தற்போதைய ஆதரவாளர்களோ தொடர்ந்தும் அவர் பக்கம் நிற்பார்கள் என்பது கேள்விக்குறியாகும். இந்த நிலையில் மைத்திரி – மஹிந்த இணைப்பு மாத்திரமே மைத்திரியின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியதாக அமையும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg