Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் ஆப்பிரிக்க ஜனாதிபதிக்கு தொடர் சோதனை: குப்தா வீட்டில் பொலிஸார் சோதனை!

In உலகம்
Published: 16:54 GMT, Feb 14, 2018 |
0 Comments
1073
This post was written by : poovannan

தென் ஆஃப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா மீது பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், அவருக்கு நெருக்கமான குப்தா தொழில் குடும்பத்தினரின் வீட்டில் பெரும் குற்ற வழக்குகளை கையாளும் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

குப்தா குடும்ப உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இருவர் விரைவில் சரண் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள வெர்தே நகருக்கு அருகில் உள்ள எஸ்டினா கால்நடைப் பண்ணையில் ஏழை கறுப்பின விவசாயிகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதில் குப்தா குடும்பத்தினர் பல கோடி டொலர்களை மறைமுகமாக பெற்றது குறித்த விசாரணை தொடர்பாகவே இந்த சோதனை நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த குப்தா குடும்பத்தினருடனான தொடர்பும் ஜூமா பதவி விலக்கல் கோரிக்கைக்கான காரணங்களில் ஒன்றாகும். ஜூமாவுடனான  நெருக்கத்தின் மூலம் அரசியலில் கடுமையாக தலையிடுவதாக குப்தா குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

இதனிடையே, தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க நேரம் இருந்தால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவர் சிரில் ராமபோசாவை ஜனாதிபதியாக நாளை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் என்று ஆளும் கட்சியின் தலைமை கொறடா ஜேக்சன் உதேம்பு கூறியுள்ளார்.

இந்த சோதனைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு நடைபெறுகின்றன என்று எதிர்க்கட்சியான ஜனநாயக கூட்டணியின் தலைமை கொறடா ஜான் ஸ்டீன்ஹுசன் பிபிசியிடம் கூறியுள்ளார்.

“நீங்கள் பதவி விலகாவிட்டால் உங்களுக்கும் இதே நடக்கும் என்பதை ஜூமா தரப்புக்கு தெரிவிக்கவே இந்த சோதனை” என்று அவர் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் சுரங்கம், விமானப் போக்குவரத்து, ஊடகம், தொழில்நுட்பம், கணினி, எரிசக்தி உள்ளிட்ட பல தொழில்களில் குப்தா குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

அதுல் குப்தா, ராஜேஷ் குப்தா, அஜய் குப்தா ஆகிய மூவரும் 1993இல் இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் ஜூமா, அவரது மகன் மற்றும் மகளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஜூமாவின் மனைவிகளில் ஒருவர் குப்தா தொழில் குழுமத்தில் பணியாற்றியவர்.

அதேவேளை, தாங்கள் கூறுவதை கேட்டு நடக்க சுமார் 50 பில்லியன் டொலர் லஞ்சம் தர குப்தா குடும்பத்தினர் முன்வந்ததாக 2016இல் அப்போதைய இணை நிதி அமைச்சர் மேகேபிசி ஜோனாஸ் கூறினார்.

அரசின் ஒப்பந்தங்களைக் கைப்பற்ற ஜனாதிபதி ஜூமா மற்றும் குப்தா சகோதரர்கள் இணைந்து முறைகேடாக செயல்படுவதாக அந்நாட்டு ஊழல் கண்காணிப்பு அமைப்பும் அறிக்கை வெளியிட்டது.

கடந்த ஆண்டு கசிந்த சுமார் 10,000 மின்னஞ்சல்கள் குப்தா குடும்பத்தினர் அரசில் தலையிடுவதை வெளிக்காட்டியபின் மக்களின் கோபம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பல போராட்டங்களும் நடந்தன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)