Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவின் ‘வேண்டத்தகாத மனிதனாக’ பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ?

In இலங்கை
Updated: 11:28 GMT, Feb 21, 2018 | Published: 11:28 GMT, Feb 21, 2018 |
0 Comments
1590
This post was written by : Varshini

இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர் உள்ளிட்ட தரப்பினரை நோக்கி கழுத்தை அறுக்கும் சைகையைக் காண்பித்து சர்ச்சைக்குள்ளான பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, பிரித்தானிய அதிகாரிகளால் வேண்டத்தகாத மனிதனாக (Persona non grata) அறிவிக்கப்படவிருந்த நிலையிலேயே மீண்டும் இலங்கைக்கு அழைக்கத் தீர்மானித்தனரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு வருகைதந்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்துவிடம் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை திருப்பி அழைக்க முடிவு எடுத்துள்ளீர்களா என ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த இராணுவப் பேச்சாளர் ‘ஆம்’ என்று கூறினார். மீண்டும் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் விசாரணைக்காகவா பிரிகேடியர் பிரியங்கவை திரும்பி அழைக்க தீர்மானித்துள்ளீர்கள் என வினவினார். இதற்குப் பதிலளித்த இராணுவப் பேச்சாளர் “இல்லை விசாரணைகாகவல்ல, மாறாக சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அழைக்கப்படுகின்றார்” எனத் தெரிவித்தார்.

பிரிகேடியர் பிரியங்கவை நாட்டிற்கு திருப்பி அழைக்குமாறு அழுத்தமேதும் தரப்பட்டதா என ஊடகவியலாளர்கள் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தனர். இதற்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளார் “அப்படி ஒருவேளை இருந்திருக்கக்கூடும். ஆனால் எமக்குத் தெரியாது. நாம் அவரைத் திருப்தியழைப்பது கலந்துரையாடுவதற்காகவே தவிர விசாரணைக்காகவோ வேறெதற்காகவுமோ அல்ல” எனச் சுட்டிக்காட்டினார்.

இதன்போது அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்றிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், ”வேண்டத்தகாத மனிதனாக பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை அறிவிக்கப்போவதாக பிரித்தானிய அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்த நிலையிலேயே இலங்கைக்கு அவர் மீண்டும் அழைக்கப்பட்டார்” என கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

பிரிகேடியர் பிரியங்கவை மீண்டும் நாட்டிற்கு அழைக்க தீர்மானித்துள்ள விடயத்தை இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்த நிலையில் அதனை இலங்கையிலுள்ள பி.பி.சி. செய்தியாள4ர் அஸாம் அமீன் டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துகொண்டிருந்தார். இதனை மேற்கோள் காட்டி கருத்துவெளியிட்டிருந்த இலங்கையின் பிரபல அரசியல் விமர்சகர் கலாநிதி நாலக “குணவர்த்தன கழுத்தை அறுக்கும் குற்றமிழைத்த லண்டன் இலங்கைத்தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரித்தானிய அதிகாரிகளால் வேண்டத்தகாத நபராக அறிவிக்கப்பட்டாரா?” எனக் கேள்வி எழுப்பி டுவிட்டர் பதிவிட்டிருந்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பு நிறைவடைந்த நிலையில் ஆதவன் செய்தியாளர் இராணுவப் பேச்சாளரிடம் பிரிகேடியர் பிரியங்கவை நாட்டிற்கு திருப்பியழைக்கத் தீர்மானித்துள்ளதாக கூறினீர்களே அவர் ஏற்கனவே வந்துவிட்டாரா என வினவினார். இதற்குப் பதிலளித்த பிரிகேடியர் அத்தப்பத்து “இன்னமும் இல்லை இன்று இரவு அன்றேல் நாளை அவர் வருவார்” எனத் தெரிவித்தார். வேண்டத்தகாத நபராக அறிவிக்கப்போவதாக பிரித்தானிய அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்த நிலையிலேயே அவரை மீண்டும் திருப்பி நாட்டிற்கு அழைக்கத்தீர்மானித்தீர்களா என வினவியபோது “நான் கடிதத்தை தெளிவாகப் பார்த்தேன். கலந்துரையாடலுக்காகவே அழைப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது” எனக் கூறினார்.

“கடிதமா? யார் அனுப்பினார்கள்? பிரித்தானிய அதிகாரிகளா அனுப்பினார்கள்?” எனக்கேட்டபோது, “இல்லை அது இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் அனுப்பப்பட்ட கடிதம். அதில் கலந்துரையாடுவதற்காகவே அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது” என இராணுவப் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை வேண்டத்தகாதவராக அறிவிக்குமாறு இலங்கை அதிகாரிகளுக்கு பிரித்தானிய அதிகாரிகள் ஏதேனும் தகவலை அனுப்பினார்களா என இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூதரகத்திடம் எமது ஆதவன் செய்திப்பிரிவு வினவியது.

இதற்கு பதிலளித்துள்ள பிரித்தானியத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் ”பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய இராச்சியத்திற்கு இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த நடைமுறை தொடர்பாக மேலும் கருத்துகளை வெளியிடுவது ஐக்கிய இராச்சியத்திற்கு பொருத்தமற்றது” என தெரிவித்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg