Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சரவை மாற்றம் வேண்டிநிற்பவர்கள் மறந்துவிட்ட உண்மை!

In இன்றைய பார்வை
Updated: 05:49 GMT, Feb 23, 2018 | Published: 05:37 GMT, Feb 23, 2018 |
0 Comments
1119
This post was written by : Arun Arokianathan

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலைகள் தெளிவுபெற்று வருகின்றன. நல்லாட்சி கூட்டணி அரசாங்கம் தொடரும் என பிரதமரும் சபாநாயகரும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து மட்டுமே இன்னமும் நல்லாட்சி அரசாங்கத்தின் நீடிப்பு குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில் தற்போது அமைச்சரவை மாற்றம் குறித்த  பல தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த கையோடே அரசியல்வாதிகளும், இலங்கையிலுள்ள பல ஊடகங்களும் ஆருடங்களைக் கூறியிருந்தன. நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க அங்கத்தவர்களைச் சந்தித்திருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவை மாற்றம் விரைவில் நடக்கும் எனக் கூறியிருந்தார்.

அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சராக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்பாடாக கருத்து வெளியிட்டிருந்தார்.

நாட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடி மற்றும் படுகொலைகள் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் திடசங்கற்பத்துடனேயே அரசாங்கத்திலுள்ள முக்கியஸ்தர்கள் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க யோசனை முன்வைத்ததாக அவர் கருத்து வெளிப்படுத்தியிருந்தார்.

அமைச்சரவை மாற்றம் என்பது வெறுமனே ஆட்களை மாற்றுவதற்கன்று மாறாக அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே என்ற நோக்கத்துடன் மேற்பொருந்தியதாக பொன்சேகா தொடர்பாக அமைச்சர் ராஜித தெரிவித்த கருத்துக்கள் அமைந்திருந்தன.

இவ்வாறாக ஓரிரு அமைச்சர்களை மாற்றிவிட்டால் மாத்திரம் இந்த நாட்டை சரியான தடத்தை நோக்கி கொண்டுவரமுடியுமா என்பதை நல்லாட்சி அரசாங்கத்திலுள்ளவர்கள் சிந்திக்கவேண்டும்.

19வது அரசியல் யாப்பின்படி ஒரு கட்சி மாத்திரம் அரசாங்கத்தை அமைக்குமிடத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஆக மாத்திரமே இருக்க முடியும். இதனைத் தவிர பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்க முடியும்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் தற்போது நாட்டின் பிரதான இரு கட்சிகளும் இணைந்து அமைந்திருக்கும் கூட்டணி அரசாங்கத்தில் தற்போதைய நிலையில் மொத்தமாக ஜனாதிபதி பிரதமர் அடங்கலாக 46 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 23 இராஜாங்க அமைச்சர்களும் 22 பிரதி அமைச்சர்களும் உள்ளனர். தற்போது முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள அமைச்சரவை மாற்றத்தினூடாக அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும் மாத்திரமே கவனம் செலுத்திவருகின்ற தற்போதைய அரசாங்கத்திலுள்ளவர்கள் தேசிய அரசாங்கம் ஏன் அமைக்கப்பட்டது என்பதை மறந்து நடந்துகொள்வது ஏமாற்றத்தையும் விரக்தியையும் அளிக்கின்றது.

நாட்டின் வீழ்ச்சிக்கு வித்திட்ட இனப்பிரச்சனைக்கு தீர்வைக் காண்பது, அதற்கு அடித்தளமமைக்கின்ற அரசியல் யாப்பை தயாரிப்பது, போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிலைநாட்டுதல் உட்பட நிலைமாறு கால நீதியை முன்னெடுத்தல் போன்ற பிரதான நோக்கங்களுக்காகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதன் காரணமாகவே அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்கவும் வழிகோலப்பட்டது. ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துவிட்டன நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று இரண்டரை வருடங்கள் உருண்டோடிவிட்டன. இப்படியிருக்கையில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்ட உண்மையான நோக்கத்தை மறந்துவிட்டு அதிகார பீடத்தில் தமது ஆதிக்கத்தைச் செலுத்துவதிலும், அமைச்சரவையைப் பங்குபோட்டுக்கொள்வதிலும் மாத்திரமே கவனம் செலுத்திக்கொண்டிருந்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் ஐயோகேடு!

 

 

 

 

 

 

 

 

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg