Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொதிக்கும் கொழும்பு – அழிக்கப்படும் தமிழினத்தின் உயிர்நாடி!

In இலங்கை
Updated: 07:23 GMT, Feb 23, 2018 | Published: 07:23 GMT, Feb 23, 2018 |
0 Comments
1619
This post was written by : Puvanes

அடுத்து நடக்கப்போவது என்ன என்பது தெரியாததோர் நிலையில் புதுப்புது மாற்றங்களை எதிர்நோக்கி இலங்கை அரசியல்  நகர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, அண்மைய தேர்தல் முடிவுகளின் கொதிப்பு இன்னும் தென்னிலங்கையில் அடங்கிவிடவில்லை.

பல்வேறுபட்ட குழப்பநிலைகள், முன்னுக்குபின் முரண்பட்ட வாதங்கள் போன்றன அரசியல் சர்ச்சைகளாக பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கும் மறுபக்கத்தில் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகின்ற நிலையும் உருவாகியுள்ளது.

உதாரணமாக உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது. அதாவது “தமிழர்கள் தனிநாடு என உரிமை கூறிய ஈழம் தற்போது சுருங்கி விட்டது என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இலங்கையின் மூலை முடுக்கு அனைத்திலும் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது” என மஹிந்த சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தக்கருத்தினை மஹிந்த தனது அரசியல் செல்வாக்கினை பிரஸ்தாபிப்பதற்காக கூறினார் என்றாலும் கூட அதன் உள்ளர்த்தம் மட்டும் நிதர்சனமானது. காரணம், யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடமிருந்து, தொடர்ச்சியான ஆதரவை பெற்று பல வருடங்களாகப் பலத்துடன் நின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கி தற்போது வீழ்ச்சியடைந்து விட்டதனை அண்மைய தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றது.

வடக்கு – கிழக்கில் தேசிய கட்சிகளும், மஹிந்தவை முன்னிலைப்படுத்தும் பொதுஜன பெரமுன எனும் புதுக்கட்சியும் பெற்றுள்ள ஆதிக்கம் ஒருவகையில் அம்மக்கள் தமிழ் பிரதிநிதிகள் மீதான நம்பிக்கையினை இழந்து வருகின்றனரா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

அதிலும் மஹிந்தவின் ஆதிக்கம் சற்றே மேலோங்கி நிற்கின்றது என்பதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கடந்த காலத்தில் தமிழ்மக்களின் வாக்குகளின் காரணமாகவே மஹிந்த தலைமைத்துவம் மாற்றப்பட்டது என்பது அறிந்த விடயம் இந்த இடத்தில் மீண்டும் மக்கள் மஹிந்தவை நம்பத் தொடங்கி விட்டனரா? என்ற கேள்வியும் தொக்கு நிற்கின்றது.

எவ்வாறாயினும் பௌத்தத்தையும், பெரும்பான்மையையும் முக்கிய ஆயுதமாகக் கொண்டு அரசியல் செய்துவரும் மஹிந்த தமிழ் மக்களின் துயர் துடைப்பார் என தமிழர்கள் எண்ணுவது எவ்வகையில் சாத்தியம் என்பது மட்டும் புரியாத புதிர்.

2005 நடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க அப்போது விடுதலைப்புலிகள் கோரி நின்றனர். காரணம் கடும்போக்காளராக வலம் வந்த மஹிந்தவை இலகுவாகத் தோற்கடித்து விடலாம் என்று எண்ணியதே, அதேபோன்று ரணில் அதிகாரத்திற்கு வரும் போது தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என அப்போது புலிகள் எண்ணியது தவறாகிப் போனது, அது அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிந்தது.

இவை ஒரு புறம் இருக்கட்டும் சுதந்திரம் பெற்ற இலங்கையின் ஆட்சிபீடத்தில் அமர்ந்து வந்த தலைவர்களும், அரசாங்கங்களும் அப்போது முதல் தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை புகுத்துவதில் அதிசிரத்தை காட்டி வந்தனர் (வருகின்றனர்).

இந்த நடவடிக்கையினால் திட்டமிட்ட வகையில் தமிழர் பிரதேசங்கள் கரைக்கப்பட்டு வருகின்றது என்ற உண்மை தமிழர்களுக்கும், தமிழ் தலைமைகளுக்கும் தெரியாதிருக்கும் வாய்ப்பு இல்லை, தெரிந்தும் செல்லும் பாதையை மட்டும் மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை எனலாம்.

சுதந்திரத்தின் பின்னரான இலங்கையில் சிறுபான்மையினரை அடக்கவும், ஒடுக்கவும், கலாச்சாரங்களை அழித்து வேறொன்றைப் புகுத்தவும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவரும் ஒரே ஆயுதம் இத்தகைய குடியேற்றங்களே என்பது வெளிப்படை.

இதற்கான காரணம் அது உள்ளங்கை நெல்லிக்கனி அதாவது “ஒரு இனத்தின் உயிர்நாடி, அந்த இனத்தின் மொழியும் பூர்வீக நிலமும், அதனை மாற்றினால் ஆனிவேர் மாற்றப்பட்டு விடும்” என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட காய்நகர்த்தல்கள் முறையாக இலங்கையில் நடத்தப்பட்டு வருகின்றது.

சமகால அரசாங்கம் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் வெறும் மேடைச்சொல் வீரப் பிரசாரமாக இன்றுவரைக் காணப்படுவதனை விடவும் வேறு ஓர் சிறந்த உதாரணம் இதற்கு அவசியம் இல்லை எனலாம்.

இந்த நிலையில் “தமிழ் இனத்தின் சுதந்திரம், நிம்மதியான வாழ்வு, உரிமைகள்” என்ற கொள்கைகளை முன்வைத்து வந்த தமிழ்ப் பிரதிநிதிகளின் வாக்குகள் சிதறிச்செல்லும் நிலை ஏற்பட தமிழ்த் தலைமைகளே காரணம் என்ற கூற்றும் கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்றே.

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்கட்டும் தமிழர்களுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்களின் உதவிகள் இதுவரையிலும் கிடைத்தவாரே இருக்கின்றது. ஆனாலும் எதிர்காலத்திலும் இது சாத்தியப்படுமா என்ற ஆழ் கேள்வி ஒன்றும் தற்போது ஏற்பட்டுள்ளது.

காரணம் புலம்பெர்ந்து சென்றவர்கள் பயங்கரவாதிகள், விடுதலைப்புலிகள், பிரிவினைவாத, இனவாத கொள்கைகளை உடையவர்கள் என்ற வாதம் நாளுக்கு நாள் தெற்கு அரசியல்வாதிகளின் மத்தியில் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறாக கூற்றுகள் வலுப்பெரும் போது அதன் அடுத்தகட்டம் நாட்டைவிட்டு சென்று மீள தாயகம் திரும்பும் கனவில் வாழும் தமிழர்களின் கனவு கனவாகியே போகக் கூடிய நிலை ஏற்படும், இலங்கைத் தமிழர்களுக்கும் – புலம்பெயர் உறவுகளுக்குமான இணைப்பு கொஞ்சம்  கொஞ்சமாகத் துண்டிக்கப்படும், அத்தோடு மாற்றுக் குடியேற்றங்களை தமிழர் பகுதிக்குள் குடியேற்றுவது பெரும்பான்மைக்கு இலகுவானதோர் விடயமாக மாறிவிடும் என்பதும் தெளிவு.

இவ்வாறாக, ஓர் சிறு தேர்தல் தமிழர்களிடம் இத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனின் அடுத்து வரப்போகும் அரசியல் மாற்றங்களினால் தமிழினத்தின் நிலை என்னவாகும்? இதில் இருந்து மீண்டுவர தமிழ்த் தலைமைகள் செய்ய வேண்டியது என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்டு அரசியல் பாதையை நகர்த்துவார்கள் எனின் சிறப்பு…

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg