Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிக்கான போராட்டத்தில் ஜெனிவா வகிபாகம்

In இன்றைய பார்வை
Updated: 05:41 GMT, Mar 4, 2018 | Published: 06:28 GMT, Feb 26, 2018 |
0 Comments
1151
This post was written by : Arun Arokianathan

கொடுந்துயரங்கள், வேதனைகள், ஏமாற்றங்கள், துரோகங்கள் நிறைந்த தமிழர் வாழ்வில் நீதிக்கான போராட்டம் நீண்ட நெடும் பயணமாக இருந்துகொண்டிருக்கின்றது.

அண்மைக்கால வரலாற்றில் தமிழர்கள் கொஞ்சமேனும் தமக்கான நீதி கிடைக்கும் என நம்பிக்கை வைத்து எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் களமாக ஜெனிவா மனித உரிமை பேரவை அமைந்திருக்கின்றது.

இன்று  பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி திங்கட்கிழமை  ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடர்  இன்று முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அடுத்துவருகின்ற சுமார் ஒரு மாத காலத்திற்கு ஊடகப் பரப்பிலும் அரசியல் களத்திலும் ஜெனிவா ஓங்கி ஒலிக்கப்போகின்றது. வெறுமனே வெற்றுக்கோஷங்களாக அன்றி அர்த்தபூர்வமான செயற்பாடுகளுக்கு வழி வகுக்கின்ற களமாக ஜெனிவா களத்தை பயன்படுத்துவது முக்கியமாகும்.

இம்முறை ஜெனிவா களத்தை நாம் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு எப்படிப் பயன்படுத்தப் போகின்றது என்பது நீதிக்கான எமது போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வில் முக்கியமானதொன்றாக அமையும்.

தமிழர்களின் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் மிகவும் துயரம் பதிந்த காலமாக அமைந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தின் கடைசிக் காலக்கட்டமான 2013-2014ம் ஆண்டுகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் செலுத்தப்பட்ட அழுத்தமானது இதுவரையான கால வரலாற்றில் தமிழர்களுக்காக சர்வதேசத்தினால் இலங்கை அரசின் மீது பிரயோகிக்கப்பட்ட உச்சகட்ட அழுத்தமாக அமைந்திருந்தது.

ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் தொடர்ந்திருந்தால் 2015ம் ஆண்டில் இலங்கை மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவை பொருளாதாரத் தடையை விதித்திருக்கக்கூடும். சர்வதேச விசாரணையை முடுக்கிவிட்டிருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளும் காணப்பட்டதை மறுப்பதற்கில்லை.

ஆனால் வீட்டோ இரத்து அதிகாரத்தைக் கொண்டுள்ள சீனாவின் பிரசன்னத்தை மீறி ஒன்றுமே செய்துவிட முடியாது என்ற தர்மசங்கட நிலையை மேற்குலக நாடுகள் எதிர்கொண்டிருந்த சூழ்நிலையிலேயே 2015ம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

இதன் பின்னர் தமக்கான பொருளாதார கேந்திர நலன்களை கட்டியெழுப்புவதில் அதிக அக்கறை காண்பித்த மேற்குலக நாடுகள் இலங்கைக்கான கால அவகாசத்தை வழங்கினர். 2015ம் ஆண்டு ஒக்டோபர் 1ம் திகதி இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் அதனைத் தொடர்ந்து 2017 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு கால அவகாசம் என்பன இலங்கை அரசிற்கு மூச்சுவிடுவதற்கான இடைவெளியைக் கொடுத்தன.

இந்தக் காலப்பகுதியில் இலங்கை அரசு நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் அடையாளமாக சில நடவடிக்கைகளை எடுத்த போதும் காத்திரமான வகையில் எதனையும் செய்யவில்லை என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தற்போது ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறத்தொடங்கியுள்ளதுடன் ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சர்வதேசத்தின் அழுத்தத்தை எதிர்பார்ப்பதாக பகிரங்க அறைகூவல் விடுத்திருக்கின்றது.

இந்த நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துடன் கூடிய கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதை விடவும் எப்படியேனும் மீண்டும் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் நச்சுப்பிரசாரத்தை மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ஸ தரப்பினரின் கைகள் ஓங்கிவிடக்கூடாது என்பதற்காக யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் இராணுவத்தினருக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் காண்பித்த தாமதத்தை விளங்கிக்கொள்ள முடிந்தாலும் ஏனைய விடயங்களில் அதன் செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது உண்மையான அர்ப்பணிப்பின்மையை புரிந்துகொள்ள முடிகின்றது.

உதாரணமாக கூறுவதெனில் காணாமல் போனோர் பணியகம் அமைப்பது தொடர்பான சட்டம் 2016ம் ஆண்டு ஓகஸ்ற் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒன்றரை வருடங்கள் கடந்தும் அது நடைமுறைக்கு வரவில்லை. ஜெனிவா அமர்வு ஆரம்பித்துள்ள இவ்வேளையில் சர்வதேசத்திடம் நற்பெயரைப் பெறுவதற்காக அன்றேல் சர்வதேச அழுத்தத்தைக் குறைப்பதற்காக காணாமல் போனோர் பணியக சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் நகர்வை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

எப்போதோ செய்திருக்க வேண்டிய விடயத்தை இப்போது ஜெனிவா அமர்வு இடம்பெறும் வேளையில் செய்ய முனைவது கண்துடைப்பு நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.

இப்படியாக சில நகர்வுகளை அங்குமிங்குமாகச் செய்துவிட்டு இம்முறை ஜெனிவா அமர்வுகளின் போது வரக்கூடிய அழுத்தத்தை சமாளித்து விடலாம் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கமுடியும்.

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் பெற்ற அமோக வெற்றியைக் காரணம் காண்பித்து ஜெனிவா தீர்மான அமுலாக்க விடயத்தில் தமது மந்தகதியிலான செயற்பாட்டை நியாயப்படுத்த அரசாங்கம் முற்படலாம் என்பதை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது. அரசாங்கத்தை தப்பிப்பதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சில விடுவிக்கப்பட்டமை அரசியல் கைதிகளில் சிலர் விடுவிக்கப்பட்டமை போன்றவற்றை தவிர்த்துப் பார்த்தால் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்கள் பிரச்சனைகள் விடயத்தில் காத்திரமான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பது துலாம்பரமாகும். இந்தவகையில் இம்முறை ஜெனிவா களத்தை தமிழர் தரப்பு அரசாங்கத்தின் உண்மை முகத்தை துகிலுரிப்பதற்கான களமாகப் பயன்படுத்த வேண்டும். ஆட்சிமாற்றம் என்பது வெறும் ஆள்மாற்றமே அன்றி அர்த்தமுள்ள மனமாற்றம் அல்ல என்பதை கோடிட்டுக்காண்பிக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதை கடந்த ஒரு வருடகாலப்பகுதியாக கைவிட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரே அண்மையில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் அவர் பரிந்துரைத்துள்ளதுபோன்று நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச பொறிமுறை உட்பட ஏனைய அனைத்துவழிகளையும் ஆராய்வதற்கு தமிழர் தரப்பு குரல்கொடுப்பதுடன் மட்டுமன்றி களத்தில் தீவிரமாக செயலாற்றவேண்டும்.

 

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg