Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி சிறிசேன பயணிக்கும் பாதை!

In இன்றைய பார்வை
Updated: 06:16 GMT, Feb 27, 2018 | Published: 06:08 GMT, Feb 27, 2018 |
0 Comments
1160
This post was written by : Arun Arokianathan

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால நகர்வுகள் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடப் போகின்றார் என்ற எண்ணத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளன.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவுடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரி, பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் பதவியைத் துறப்பது அதிகாரத்தைக் குறைப்பது தொடர்பாக கருத்துக்களை வெளிப்படுத்தி சில நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார். இதனால் உள்நாட்டு மக்கள் மத்தியில் மாத்திரமன்றி சர்வதேசத்தின் அபிமானத்தையும் அவர் வெற்றிகொள்ளமுடிந்தது.

அரசியல்வாதிகள் என்பவர்கள் அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டே செயற்படுகின்றவர்கள். அதனால் கட்சியின் நலனிலேயே அக்கறை செலுத்துவர். நாட்டுத் தலைவன் தான் அடுத்த தலைமுறையின் நலனில் அக்கறை செலுத்துவான் என்ற எதிர்பார்ப்பில் தான் மைத்திரியின் ஆரம்பகட்ட நகர்வுகளுக்கு சாதாரணமக்களும் ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஊடகப்பிரதானிகளை கடந்த சில தடவைகள் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போது நேரடியாகவே ஜனாதிபதி சிறிசேனவிடம் ‘மீண்டும் ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிடப்போவதில்லை எனக்கூறியிருந்தீர்கள்.மீண்டும் போட்டியிடும் எண்ணம் உண்டா என வினவியபோது ‘இன்னமும் முன்னைய நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை’ எனக்கூறியிருந்தார்.

ஆனால் தனது பதவிக்காலம் நிறைவடையும் காலம் குறுகிவருகின்ற நிலையில் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற விருப்பம் அவரிடத்தே மேலோங்கிவருகின்றதை அவரது கட்சியினரும் சகாக்களும் விடுக்கும் அறிவிப்புக்களும் நகர்வுகளும் கோடிட்டுக்காட்டி நிற்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் சிறிசேன சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்று நிமல் ஸ்ரீபால டி சில்வா போன்ற சிரேஸ்ட தலைவர்கள் அறிவித்த போது அதனை ஜனாதிபதி மறுக்கவில்லை. புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பணியின் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரும்பவில்லை.

இதனை கட்சித் தலைவராக தெளிவுபடுத்துவதற்கோ கட்சியினர் மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்கோ ஜனாதிபதி சிறிசேன முன்வராமையானது மீண்டும் ஜனாதிபதியாவதற்கான விரும்பம் மேலோங்கிவருவதை எடுத்துணர்துவதாக அமைந்திருக்கின்றது. கடந்த வருட இறுதியின் போது ஜனாதிபதி பதவியில் ஆறு ஆண்டுகள் பதவிவகிக்க முடியுமா ? என உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார். மீண்டும் போட்டியிடப்போவதில்லை எனக்கூறிய ஒருவர் அதிகாரத்தை தாமாகவே முன்வந்து குறைத்ததாக மார்தட்டிய ஜனாதிபதியொருவர் எதற்காக இவ்வாறு கேட்கவேண்டும். இது பதவியில் தொடரும் நப்பாசையைப் பறைசாற்றிநிற்கின்றது என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் ஜனாதிபதி சிறிசேன தலைமை வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியைத் தழுவியபோதும் பிரதமரை பதவிநீக்க ஜனாதிபதி மேற்கொண்ட நகர்வுகள் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு போட்டியாக வரக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவை அரசியல் களத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தையும் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது என அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளராக திகழும் துமிந்த திஸாநாயக்க 2020ம் ஆண்டில் ஜனாதிபதியாக சிறிசேன மீண்டும் போட்டியிடுவார் எனக்கூறியிருக்கின்றார்.  ராஜபக்ஸ தரப்பினருக்கு மக்களின் பேராதரவு உள்ளது என்பது உள்ளுராட்சித் தேர்தலில் வெளியாகியுள்ள நிலையில்  எப்படியேனும் மீண்டும் பதவியைப் கைப்பற்றுவதற்காக ராஜபக்ஸ தரப்புடன் இணைந்து போட்டியிட திட்டம் தீட்டுகின்றார் என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அரசியல் வாதிகள் தமது அதிகாரத்தையும் பதவியையும் துறந்துவிட்டு தியாகிகளாக வெளியேறுவார்கள் என்ற மக்களின் இலட்சிய எதிர்பார்ப்பு இலங்கை போன்ற நாடுகளில் ஒருபோதும் சாத்தியமில்லை என்பதையே ஜனாதிபதியாக வந்ததுடன் சிறிசேன வெளிப்படுத்திய கருத்துக்களும் தற்போது முன்னெடுக்கும் நகர்வுகளும் உணர்த்திநிற்கின்றன. மீண்டும் பதவிக்கு போட்டியிட அரசியல் யாப்பில் இடமிருக்கின்றது. அந்தவகையில் மைத்திரி மீண்டும் போட்டியிடுவதை தடுக்க முடியாது. ஆனால் இந்த நாட்டிலுள்ள மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் விரும்பும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக ராஜபக்ஸ தரப்பினருடன் கைகோர்த்து மீண்டும் பதவிக்கு வர சிறிசேன முற்படுவாரேயானால் அது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தும்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg