Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைத்திரியின் எதிர்காலமும், ஏமாற்றப்படும் இலங்கையர்களும்…

In
Updated: 17:11 GMT, Mar 3, 2018 | Published: 17:11 GMT, Mar 3, 2018 |
0 Comments
1028
This post was written by : Puvanes

ஓர் புதிய அரசியல் மாற்றத்தினை எதிர்நோக்கி, புதியதோர் இலங்கையை குறிப்பாக ஊழல் எனப்படும் சாக்கடைகள் அற்ற அரசாங்கத்தை அமைக்கும் வகையில் நல்லாட்சி என்ற கூட்டு அரசாங்கம் உருவானது.

எனினும் ஆட்சியமைத்து ஆண்டுகள் மூன்று கடந்தபின்னரும் பழையகதையே தொடர்கின்றது. மைத்திரியின் ஊழல் அற்ற அரசு என்ற கனவு கனவாகவே போய்விடுமா என்ற சந்தேகநிலை தற்போது ஏற்பட்டு விட்டது காரணம் நல்லாட்சிக்கு இன்னும் இருப்பது 2 வருடம் மாத்திரமே.

அதற்குள் தாம் கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்து மீண்டும் ஆட்சியமைப்பது, பிரதமர் ரணிலுக்கு மாத்திரமல்ல, மைத்திரிக்கும் நடவாத காரியம் என்பது தற்போதைய சூழலில் தெள்ளத் தெளிவாகிவிட்டது.

எனினும் அது சாத்தியமா? அரசாங்கம் தான் கூறியது போன்று ஊழல்களை களைந்தெரியுமா? மைத்திரியின் ஊழல் ஒழிப்பு சாத்தியப்படுமா? என்ற பல கேள்விகளுக்கு ஒரே பதில் “அனைத்துமே கானல் நீர் ஆகிவிடும்” என்பது மாத்திரமே.

காரணம் எஞ்சியுள்ள இரு வருடங்களில் மைத்திரி நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகளை சரிசெய்ய மாத்திரமே செலவிட வேண்டிய நிலை உருவாகிவிடும். உதாரணமாக தற்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை மற்றும் அவரது பதவி விலகல் கோரிக்கைகள் தென்னிலங்கையை ஆட்டுவித்துக்கொண்டிருக்கின்றன.

எப்படியாவது ஆட்சியில் மாற்றம் வந்தே தீர வேண்டும் என ஒரு நரப்பு தீவிரமாக திட்டமிட்டுக்கொண்டு இருக்கின்றது. இவ்வாறான நிலையில் இலங்கை மக்களின் அபிலாசைகள் எவ்வாறு நிறைவேற்றப்படப்போகின்றது?

ஒருவேளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுமானால் அடுத்த கட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் உட்பூசல், பிளவு, சுதந்திரக்கட்சி – ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டு அரசாங்கம் போன்ற அனைத்திலும் அதிர்வலைகள் ஏற்பட்டுப் போகும் என்பது நிச்சயம்.

இந்த குழப்பநிலைகளை சரி செய்து அமைதிப்படுத்த அரசாங்கமும், மைத்திரியும் எடுத்துக்கொள்ளும் கால அளவில் அடுத்த தேர்தலுக்கான காலம் நெருங்கிவிடும் என்பதில் மறுப்பேதுமில்லை எனலாம்.

ஆரம்பம் முதலாகவே, அதாவது இலங்கை மஹிந்தவின் கைகளில் இருந்து எப்போது நல்லாட்சி கைகளுக்கு மாறியதோ அன்று தொடக்கம் போராட்டங்களும், குழப்பங்களும், அரசியல் கட்சி தாவல்களும் என பல்வேறு பிரச்சினைகளே நாட்டில் காணப்படுகின்றது, தொடர்கின்றது.

அப்படிப்பார்க்கும் போது அதிகார மோதலுக்காகவே இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன என்றும் சுருங்கக் கூறமுடியும். கடந்த கால இலங்கையின் அரசியல் நகர்வினை உற்றுப்பார்க்கும் போது இந்தவிடயம் தெள்ளெனத் தெரியும்.

என்னதான் மைத்திரி தலைகீழாக நின்றாலும் ஊழலை மட்டும் ஒழித்து விட முடியாது என்ற நிலைதான் இப்போது உள்ளது. உதாரணமாக சட்ட ஒழுங்கு அமைச்சுப் பதவியை பொன்சேகா கோரி நிற்கின்றார். தான் அந்தப்பதவிக்கு வந்தால் 6 மாதத்திற்குள் ஊழல்களை ஒழிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அதனை அவர் செய்வாரா மாட்டாரா என்பது வேறு விடயம்.. எனினும் அவருக்கு பதவி கொடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட தருணம் முதல் அதற்கு எதிர்ப்புகளே அதிகமாக வெளிவருகின்றனவே தவிர ஏன் பதவி வழங்கப்படக்கூடாது என்ற முறையான காரணத்தினை வழங்க எவரும் முன்வரவில்லை.

“எதுவாக வேண்டுமானாலும் இருந்துப் போகட்டும், யாரை வேண்டுமானாலும் சட்ட ஒழுங்கு அமைச்சராக நியமியுங்கள் ஆனால் பொன்சேகா மட்டும் வேண்டாம் என்பதே பலரது வாதம். இதனைப் பார்க்கும் போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பீதியடையும் விடயமாகவே இதனை நோக்க வேண்டும்.

அதாவது, திருட்டை செய்யாத ஒருவன் ஏன் பொலிஸாரைப்பார்த்து அஞ்ச வேண்டும்? குற்றம் செய்யாத ஒருவருக்கு யார் சட்ட ஒழுங்கு அமைச்சராக இருந்தால் என்ன?

அதற்குள் குழப்பம் இப்போது இந்தக் குழப்பம் பூதாகரமாக வெடிக்கும் என்பதில் ஐயமில்லை காரணம். அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதமரின் ஆதரவு பொன்சேகா பக்கமே நிற்கின்றனர். மறுபக்கம் அதற்கு எதிர்புகளும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுகின்றது. இதில் பொன்சேகாவிற்கு சட்ட ஒழுங்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டாலும் பிரச்சினை… வழங்கப்படாவிட்டாலும் பிரச்சினை.

இவ்வாறு பல தரப்பட்ட மோதல்கள் அதிகார ஆசைகளுக்குள்ளே தன்னை நியாயவாதியாக காட்டிக்கொள்ள முனைந்து வருகின்றார் ஜனாதிபதி. அதற்காக அவர் செய்யம் நடவடிக்கைகள் வெற்றியடைவதாக தெரியவில்லை.

இப்படியாக பிரச்சினைகளோடு, எதனையும் சாதிக்காது…, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது, மைத்திரியின் அரசியல் வாழ்வு முடிந்துபோகுமா? என்பது இப்போதைக்கு முக்கிய கேள்வி.

காரணம் மீண்டும் ஒருமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஜனாதிபதி மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார் அது ஒரு புறம் இருக்க…

மக்கள் கடந்த அரசாங்கத்தின் மீது கொண்ட வெறுப்பின் பிரதிபலிப்பாகவே புதிய அரசாங்கத்தினை தேர்வு செய்திருந்தனர், மைத்திரியியை பதவியில் அமர்த்தினர். இதில் சிறுபான்மை இனத்தவரின் பங்களிப்பும் மிக அதிகம்.

இப்படியான நிலையில் தமிழர்களுக்கு மைத்திரி கொடுத்த வாக்குறுதிகள் இன்றும் இழுபறியாகவே உள்ளது. அதே போன்றே ஏனைய வாக்குறுதிகளின் நிலைமையும் உள்ளன. இப்படியான நிலையில் மைத்திரியை மீண்டும் மக்கள் நம்பி வாக்களிப்பார்களா? என்ற கேள்வியும் கூட உருவாகிவிடும்.

எவ்வாறாயினும் தற்போது அரசியல் குழப்பநிலைகள் முடிவுக்கு கொண்டு வரப்பாவிட்டால் ஒட்டு மொத்த இலங்கையரும் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது நிச்சயம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg