Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலக்கை அடைய இந்தியாவுடனான வெளிப்படைத்தன்மை அவசியம்: சீ.வீ

In இலங்கை
Updated: 08:12 GMT, Mar 5, 2018 | Published: 08:12 GMT, Mar 5, 2018 |
0 Comments
1146
This post was written by : Varshini

தமிழ் மக்கள் தமது இலக்கை அடைந்துகொள்வதற்கு, இந்தியாவுடன் பரஸ்பர நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சேவைக்காலம் நிறைவடைந்து செல்லும் யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவர் ஏ.நடராஜனுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு, கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். முதலமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

“தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையினை பெற்றுக்கொள்ளும் எமது முயற்சிகளில் இந்தியாவுடனான நட்பு, நேர்மையுடனும் இதயசுத்தியுடனுமான பரஸ்பர அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகள் ஆகியன அவசியமானவை. இதனை இந்திய அடிபணிவு அரசியல் என்று சிலர் விமர்சனம் செய்வது பொருத்தமற்றது. இந்தியா எமக்கு முக்கியமானது. இந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் நாம் கரிசனை கொண்டுள்ளோம். அதேவேளை இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான வளர்ச்சி ஆகியன இந்தியாவுக்கு இன்றியாமையாதது.

யுத்தம் காரணமாக பாரிய அழிவினை சந்தித்து தொடர்ந்தும் பல அடக்குமுறைகளுக்குள்ளும் இராணுவ கெடுபிடிகளுக்குள்ளும் வாழ்ந்து வரும் எமது மக்கள், தமது வரலாற்று ரீதியான அடையாளங்களும் உரிமைகளும் பாதுகாக்கப்பட தக்க ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமானதும் துணிச்சல் மிக்கதுமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ளும் என்று எமது மக்கள் நம்பியிருக்கின்றார்கள். எமது மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை கலாசார ரீதியான உறவுகள், ஒத்துழைப்புக்கள் ஆகியன எமது உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அடித்தளம் இடுவன என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

இந்நிலையில், கசப்புணர்வுகள், நம்பிக்கையீனங்கள், சந்தேகப்பார்வை ஆகியவற்றை புறந்தள்ளிவைத்து எமது இலக்கை அடைவதற்காக இந்தியாவுடன் பரஸ்பர நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் இதயசுத்தியுடன் நாம் செயற்பட வேண்டியது அவசியம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg