Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காய்களை நகர்த்தும் சந்தர்ப்பமிது..

In
Updated: 11:01 GMT, Mar 5, 2018 | Published: 11:00 GMT, Mar 5, 2018 |
0 Comments
1053
This post was written by : srikkanth

அனைவருக்கம் வணக்கம்,

தென்னிலங்கையில் அரசியல் பரபரப்புகள் நீடித்துக்கொண்டிருப்பதை அவதானித்துக் கொண்டிருக்கும் அதேவேளை இக்கால கட்டத்தில் தமிழர்கள் எவ்விதமாகச் செய்ற்பட வேண்டும் என்பதையிட்டு ஆழமாகச் சிந்திக்கவும் வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அக்கட்சியின் ஒரு பிரிவினரே கொண்டுவர முயற்சிக்கும் நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்கு முயற்சித்துக்கொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் அமைச்சரவை மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி அரசாங்கத்தை நகர்த்திச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் முயற்சியும் பிரதமரின் விடாப்பிடியால் பிசுபிசுத்துப்போயுள்ளது.

ஏற்கனவே செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே நடைபெற்றது. அதிலும் முக்கியமாக சட்டம் ஒழங்கு அமைச்சை ஜனாதிபதிக்கு விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்றநிலையில் பிரதமரே ஏற்றுக்கொண்டுள்ளதானது நாட்டு மக்களிடையே அரசு மீதான விமர்சனத்தையும் இயலாத் தன்மை மீதான எரிச்சலையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ஏற்கனவே மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு மத்திய வங்கி ஆளுனரை நியமித்தது மற்றும் பிணைமுறி தொடர்பான செயற்பாடுகளில் ஏற்பட்ட தவறுகள் தொடர்பிலும் பிரதமர் மீது குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மீது ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுப்பாரா? என்று மக்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், பிரதமரை சட்டம் ஒழுங்கு அமைச்சராக்கி அவரைப் பாதுகாத்துள்ளார் என்றும், ‘திருடனுக்கு விதானை வேலை வழங்கப்பட்டுள்ளது’ போன்று நிலைமை மாறியுள்ளதே என்று எதிர்க்கட்சிகள் தூற்றித் திரிகின்றார்கள்.

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்கி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பகுதியினரையும், பொது எதிரணியினரையும் இணைத்துக்கொண்டு சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய ஆட்சி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிகளும் விக்கிரமாதித்தன் கதையைப்போன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இதற்கிடையே இரண்டாம்கட்ட அமைச்சரவை மாற்றம் அடுத்த வாரம் அரங்கேற்றப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் கூறிவருகின்றனர்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான இழுபறிகளும், வாரத்திற்கு ஒருதடவை நடைபெறும் அமைச்சரவை மாற்றங்களுமாக நாட்டில் ஒரு ஸ்திரமான நிலைமை இல்லாதமையினால் அமைச்சு இயந்திரங்களும், அரச இயந்திரங்களும் தீர்வுகளை எடுக்கமுடியாத நெருக்கடியில் மந்தமான செயற்பாட்டிலேயே நகர்ந்து செல்கின்றன.

இவ்வாறு தென் இலங்கை அரசியல் சூழல் கொதித்துக்கொண்டிருக்கையில் தமிழ்த் தலைமைகள் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டுப்போக முடியாது.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது தவிர்க்கமுடியாத மாபெரும் சக்தியாகும். எனவே கைவசமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தென் இலங்கை அரசியல் சதுரங்கத்தில் பயன்படுத்த வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு தீர்வொன்றை தருவதற்கு யார் ஒப்பந்தம் ஒன்றுக்கு வருகின்றார்களோ, அத்தகையவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதகமாக செயற்படும் என்ற செய்தியை தந்திரமாக வெளிப்படுத்த வேண்டும்.

தென்னிலங்கை கட்சிகள் தள்ளாடிக்கொண்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தை தமிழ் தலைமைகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அவ்வாறான சூழ்நிலை அரிதான சந்தர்ப்பங்களிலேயே நிகழக்கூடிய விடயமாகும்.

அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்துவதும், அரசாங்கத்தின் ஆதரவுடனான எதிர்க்கட்சியாக இருப்பதும் அரசியல் சாணக்கியம் என்று தமிழ்க்கட்சிகள் கூறுவார்களானால், தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து அதை ஏற்றுக்கொண்டு ஆட்சியமைக்கும் தரப்புக்கு நாடாளுமன்றத்தில் தார்மீக ஆதரவு வழங்குவதும் சாணக்கியமான அரசியல் தீர்மானமாகவே இருக்கும். அதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தென்னிலங்கை கட்சிகளை தமிழ் மக்களின் கோரிக்கையின்பால் இணங்கச் செய்வதற்கு ஆயுதங்கள் தற்போது தமிழ் மக்களிடம் இல்லை. இதுபோன்ற அரசியல் தந்திரோபாயங்களே அவசியமாகும். எனவே தற்போது தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கும் தமிழ்மக்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று தமிழர்கள் ஒதுங்கி இருக்கமுடியாது.

எதிர்க்கட்சியாக இருக்கக் கிடைத்துள்ள தகமையானது சிங்களக் கட்சிகளை கையாளக்கூடிய அரசியல் வலிமைதான் என்பதை பிரயோகித்துப்பார்க்க வேண்டும்.  மாறாக, எல்லாம் முடியட்டும் இறுதியில் ஆட்சியமைக்கும் தரப்பிடம் உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சுருண்டு படுத்துக்கொண்டால், தமிழ்த் தரப்பின் அவசியமே தேவையில்லாத சூழல் அமைந்து ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் போதுமான பலத்தோடு சிங்களக் கட்சிகளே தம்மை நிலை நிறுத்திக்கொண்டுவிடும்.

மீண்டும் சந்திக்கும்வரை நன்றி

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg