Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களின் “முன்னேற்றத்திற்காக பணியாற்றுவோம்”

In இன்றைய பார்வை
Updated: 04:02 GMT, Mar 8, 2018 | Published: 04:00 GMT, Mar 8, 2018 |
0 Comments
1138
This post was written by : Arun Arokianathan

பெண்களுக்குரித்தான உரிமைகளை வழங்கவும், ஆண்களுக்கு நிகராக அவர்களை சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் நடத்துவதையும் ஊக்குவிக்கும் வகையில் வருடந்தோறும் முன்னிலைப்படுத்தப்படுகின்ற சர்வதேசப் பெண்கள் தினம் இன்றாகும்.

பெண்களைத் தொடர்ந்தும் தமது அடிமைகளாகவும் அன்றேல் தங்கிவாழ்கின்ற பிரிவினராகவும் வைத்திருக்க விரும்புகின்ற ஆணாதிக்க சமூதாயம் கடந்த பல வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பெண்களுக்கான உரிமைகளை வழங்கிவந்துகொண்டிருக்கின்றபோதும் இன்னமும் அவர்களின் நிலை மோசமானதாகவே இருந்துகொண்டிருகின்றது.

இலங்கையில் மூன்று தசாப்த காலப் போரினால் ஆயிரக்கணக்கான ஆண்கள் கொல்லப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டநிலையிலும் குடும்பங்களுக்கு பெண்கள் தலைமைத்துவம் வகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உரிய பயற்சிகளோ தகைமைகளோ தயார்ப்படுத்தல்களோ இருந்தால் பெண்களால் தலைமைத்துவம் வகிக்க முடியும். ஆனால் அவர்கள் மீது தலைமைத்துவம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் தமது குடும்பங்களைப் பராமரிக்க நேர்கையில் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பெண்கள் துஷ்பிரயோகங்களுக்கும் சுரண்டல்களுக்கும் உள்ளாக வேண்டிய அவலநிலைகாணப்படுகின்றது.

இந்த நாட்டில் ஒழுங்கான கட்டமைப்பு இன்மையாலும் பொருளாதார நெருக்கடியாலும் பல லட்சம் பெண்கள் இன்று மத்திய கிழக்கிலும் ஏனைய நாடுகளிலும் பணிப்பெண்களாகச் சென்று உழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கௌரவமான முறையில் உழைப்பிற்கான ஊதியத்தைப் பெற்றால் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அங்கு செல்லும் பெண்களில் கணிசமானவர்கள் உரிமையாளர்களினால் கொடுமைகளுக்கும் சில வேளை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாக வேண்டிய அவலம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இருந்து பெண்கள் எவ்வாறு மீட்சி பெறப்போகின்றனர். அவர்களுக்கான உரிமைகளும் கௌரவமான வாழ்க்கையும் எப்போது கிடைக்கப்போகின்றது என்பது நமக்கு முன்பாகவுள்ள கேள்வியாகும் தாயாக சகோதரியாக மகளாக நாம் பெண்களுடனேயே வாழ்கின்றோம். ஒவ்வொருவரும் இல்லங்களில் இருந்தே பெண்களின் உரிமைகளை மதித்து அவர்களை கௌரவித்து நடக்கத்தொடங்கினால் சமூதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் . ஓரிரவில் மாற்றம் வந்துவிடமாட்டாது. ஆனால் நாம் அனைவரும் நினைத்தால் அந்தமாற்றத்தினை ஏற்படுத்த பங்களிக்க முடியும் என்பது திண்ணம்.

 

“முன்னேற்றத்திற்காக பணியாற்றுவோம்’#PressForProgress என்ற இவ்வருடத்திற்கான  சர்வதேசப் பெண்கள் தினத் தொனிப்பொருள் பெரும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

தொழில்புரியும் பெண்களைப் பொறுத்தமட்டில் இலங்கை அதனையொத்த அபிவிருத்தி வீச்சிற்குள் இருக்கின்ற பல நாடுகளுடன் நோக்குகையில்  பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 214, 298 பெண்கள் தொழிலற்றவர்களாக இருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
 
இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பு வீதமானது கடந்த இருதசாப்தங்களில் 30களின் மத்தியிலேயே முன்னேற்றமின்றிக் காணப்படுகின்றது.  பொருளாதார ரீதியாக வினைத்திறன் அற்றவர்கள் எனக் கருதப்படுபவர்களாக கணிப்பிடப்பட்டுள்ள 7.3 மில்லியன் மக்களில் 73.8 சதவீதமானவர்கள் பெண்களாக காணப்படும் அதேவேளை ஆண்களின் எண்ணிக்கை 26.2 சதவீதமாகக் காணப்படுகின்றது. 
இந்தச் சவாலை எதிர்கொள்வதென்பது எந்தவொரு தனி அமைச்சினாலோ அன்றேல் அபிவிருத்திப் பங்காளாராலோ  மாத்திரம் சாத்தியப்படக்கூடியதல்ல என்பது தெளிவாகின்றது.
 பெண்கள் தொழிலாளர் சந்தையில் பிரவேசிப்பதற்கு அன்றேல் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கு பாதகமாக விளங்குகின்றதான, காலங்கடந்த தற்காலத்திற்கு பொருந்தாத சட்டங்களையும் கொள்கைகளையும் இலங்கை மாற்றியமைக்கவேண்டும். விஞ்ஞானம் ,கணிதம் போன்ற பாடங்களில் இளம் பெண்கள் ஆர்வம் கொள்ளத்தக்க வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். ஆண்களைப் போன்று அவர்களாலும் சாதிக்கும் திறனுள்ளது என்பதையும் பொறியியல் ,விஞ்ஞான ஆய்வு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறைகளில் பெண்களாலும் தொழில்சார் வாழ்க்கையை கட்டியெழுப்புவது சாத்தியமென்பதையும் உணரவைக்கவேண்டும்.
வேலைத்தளங்களில் பல்வகைமையை ஆதரிப்பதாக அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் தொழில்தருநர்கள், தாம் கூறுகின்ற விடயங்களை செயலில் காண்பிக்க வேண்டும். இந்த வகையில் தொழில்களுக்கு பெண்களையும் வேலைக்கு அமர்த்துதல், ஒரே வகையான வேலைகளைச் செய்யும்போது ஆண்களுக்கு நிகரான ஊதியத்தை பெண்களுக்கு வழங்குதல் ஆகியவற்றை உறுதிசெய்யவேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து அவசியமாகின்றதுடன் வேலைத்தளங்களில் பாலியல் துன்புறத்தல்களை எந்தளவிலும் சகித்துக்கொள்ளாத சூழ்நிலை காணப்படுவதை உறுதிசெய்யவேண்டும்.  இளம் பிள்ளைகளைக் கொண்டிருக்கின்ற பெண்கள் தொழில்களுக்கு செல்வதற்கு தீர்மானித்தால், அவர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு உயர் தராதரமுடைய சிறுவர் பராமரிப்புச் சேவையானது கொடுக்கும்.
இல்லங்களில் தமது இளம்பெண்களை எதிர்காலத்தின் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய தொழில்வாண்மைமிக்கவர்களாக பார்க்கக்கூடிய குடும்பங்கள் அவசியமாகும்.  குடும்பப்பொறுப்புக்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமமான அளவில் பகிர்ந்துகொள்ள முடியும்.
இறுதியாக ஒருவிடயத்தை கூறுவதெனில் ,சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் பெண்கள் தாம் விரும்புகின்ற மாற்றத்தை தாமே முன்கொண்டுவருவதற்கான வலுவுள்ளவர்களாக திகழ்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.  ஆண்களாக இருப்பினும் பெண்களாக இருப்பினும் பெண்களின் வழிகாட்டிகளாக திகழ்பவர்கள் தமது வேலைத்தளங்களில் பெண்கள் தமது முழுமையான ஆற்றலை வெளிக்கொணர்ந்து தொழில்வாண்மைமிக்கவர்களாக உயர்வடைவதற்கு ஊக்கிகளாக திகழவேண்டும். ‘ ‘முன்னேற்றத்திற்காக பணியாற்றுவோம்’ என்ற தொனிப்பொருளுடன் உடன்படுகின்றவர்களின் மனதிலும் இதே எண்ணம் குடிகொண்டிருக்கும் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்.தனிப்பட்ட ரீதியில், பல்வேறு பங்களிப்புக்கள் மூலமாக நான் வருடமுழுவதுமாக தொழிலாளர் படையில் பெண்களின் அதிகரித்த பங்கேற்பிற்கு ஆதரவாக நான் குரல்கொடுக்கவுள்ளேன்.  என்னுடன் நீங்களும் நிச்சயமாக இணைந்துகொள்ளமுடியும் இணைந்துகொள்வீர்கள் என நான் நம்புகின்றேன்.
சர்வதேச அளவில் பெண்கள் தினம் எப்படி உருவானது தெரியுமா?

* 1908-ல் நியூயார்க்கில் பணிச் சூழலுக்கு எதிராக பெண் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நாளை முன்னிறுத்தி அமெரிக்க சோஷியலிசக் கட்சி, முதன் முதலில் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது.

* முதல் தேசிய பெண்கள் தினம் அமெரிக்காவில் ஃபிப்.28, 1909-ல் கொண்டாடப்பட்டது.

* 1910-ல் பெண்கள் உரிமைக்காகவும், பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்தியும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் கலந்துகொண்டனர். பின்லாந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முதல் 3 பெண்களும் இதில் அடக்கம். இதில் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. எனினும், தேதி எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

* இதன் விளைவாக உலக மகளிர் தினம் 1911, மார்ச் 19 அன்று முதன்முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. பேரணியாக நடத்தப்பட்ட விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர். அதில் வாக்குரிமையோடு, பணிபுரிவதற்கான உரிமையும், வேலையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

* 1914-ல் முதல் உலகப் போர் மூண்டது. அமைதி நடவடிக்கையாக ரஷ்யப் பெண்கள், தங்களின் முதல் பெண்கள் தினத்தை பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர். போருக்கு எதிராகவோ, ரஷ்யப் பெண்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவோ அதே வருடத்தில் மார்ச் 8 வாக்கில் ஐரோப்பியப் பெண்கள் பேரணிகளை நடத்தினர்.

* 1917-ல் மற்றுமொரு புரட்சி தோன்றியது. முந்தைய ஆண்டுகளில் ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் நடந்த போரால் ஏராளமான ரஷ்ய வீரர்கள் செத்து மடிந்தனர். அனைவரும் வாழ வழியின்றிப் பட்டினியால் அவதிப்பட்டனர். பொறுக்கமுடியாமல் ரஷ்யப்பெண்கள் பொங்கி எழுந்தனர். பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தபட்டது. (கிரிகோரியன் காலண்டரில் மார்ச் 8).இதைத்தொடர்ந்து ரஷ்யப் புரட்சி வெடித்தது. முடியாட்சி முடிவுக்கு வந்தது.

* 1975-ல் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டதாகக் கூறப்படும் மார்ச் 8- ஐ சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

நூற்றாண்டுக்கு முன்பே போராளிகளாய் இருந்த பெண்களின் நிலை இப்போது எப்படி உள்ளது?

மகப்பேறு விடுமுறை

உலகம் முழுவதும் 63 நாடுகள் மட்டுமே மகப்பேறு விடுமுறைக்கென வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை (14 வார சம்பளத்தோடு கூடிய விடுமுறை) அளிக்கின்றன. 28% பெண்கள் மட்டுமே சம்பளத்தோடு கூடிய விடுமுறையை அனுபவிக்கின்றனர்.

ஊதியமில்லாப் பணி

ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளை, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைந்தபட்சம் இரண்டரை மடங்காவது அதிகமாகச் செய்கின்றனர்.

சம்பள பாகுபாடு

ஒரே மாதிரியான வேலை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஒருகுறிப்பிட்ட வேலைக்கு ஆணுக்கு 100 சென்ட் ஊதியம் அளிக்கப்பட்டால், பெண்ணுக்கு 77 சென்ட் மட்டுமே வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் 66% பணியைப் பெண்கள் மேற்கொள்கின்றனர். ஆனால் உலக வருமானத்தில் 10% மட்டுமே பெறுகின்றனர்.

பணிபுரியும் வயது விகிதம்

சராசரி பணிபுரியும் வயது விகிதம் ஆண்களுக்கு 76.1 ஆகவும், பெண்களுக்கு 49.6 ஆகவும் இருக்கிறது.

வேலையில்லாதவர் விகிதம்

சர்வதேச அளவில் 12.5% இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது இளைஞிகளுக்கு 13.9% ஆக இருக்கிறது.

சர்வதேச அளவில் பணியில் பெண்கள்

61.5% பெண்கள் சேவைத்துறைகளில் பணிபுரிகின்றனர்.

தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் விகிதம் 13.5. விவசாயத்தில் 25% பெண்கள் ஈடுபடுகின்றனர்.

பாராளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு 23%

பெண் சிஈஓக்கள், தலைமை அதிகாரிகள் வெறும் 4% மட்டுமே இருக்கின்றனர்.

முறைசாரா வேலைவாய்ப்பு

முறைசாரா வேலைவாய்ப்பின் கீழ் (வீட்டு வேலை செய்பவர்கள், தெரு வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், வேலை கிடைக்கும்போது செய்பவர்கள்) தெற்காசியாவில் 95% பெண்கள் பணிபுரிகின்றனர்.

புலம்பெயர் பெண்கள்

புலம்பெயர்ந்த பெண்களில், வீட்டுவேலை செய்யும் 57% பெண்களுக்கு வேலை நேரத்துக்கு எந்தவித உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படுவதில்லை.

பெண்களுக்கு எதிரான வன்முறை

ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள பெண்களில் 55% பேர், தங்களுடைய 15 வயதில் இருந்து ஒரு முறையாவது பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதில் 32% பெண்கள் தங்களின் பணியிடங்களில் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகின்றனர்.

சட்டபூர்வ தடைகள்

பாலின பாகுபாட்டுக்கு எதிராக 67 நாடுகளில் மட்டுமே சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கின்றன. 18 நாடுகளில், மனைவி பணிபுரிவதைக் கணவன் சட்டபூர்வமாக எதிர்க்க முடியும்.

சமூக பாதுகாப்பு

பணி ஓய்வு பெற்ற பிறகு, முறையான ஓய்வூதியத்தொகையை 65% ஆண்கள் பெறுகின்றனர். பெண்களைப் பொருத்தவரையில் 35% பேருக்கே முறையான ஓய்வூதியம் கிடைக்கிறது.

பெண்களின் முன்னேற்றத்தில் ஐ.நா.

பெண்களின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றி வரும் ஐக்கிய நாடுகள் சபை, 2030-க்குள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே சமத்துவத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கென சில திட்டங்கள் ஐக்கிய நாடுகள் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி,

* 2030-ம் ஆண்டில், அனைத்து சிறுமிகளும் முழுவதும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

* தரமான மற்றும் சமத்துவக் கல்வி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். பயனுள்ள கற்றலை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

* உலகெங்கிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து விதமான இனப் பாகுபாட்டையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

* சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பொது மற்றும் தனிப்பட்ட இடங்களில் நடக்கும் கடத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் பிற வகை அத்துமீறல்கள் ஆகிய வன்முறைகளை ஒழிக்க வேண்டும்.

* குழந்தைத் திருமணங்கள், கட்டாயத் திருமணம், பெண் உறுப்பு சிதைப்பு உள்ளிட்ட கொடூரச் செயல்களை அகற்ற வேண்டும்.

இவை அனைத்தும் நிறைவேறும் பட்சத்தில் பெண்களின் நிலை இன்னும் பல படிகள் உயரும். வாழ்வு செழிக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg