Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெஞ்சினிலே

In
Updated: 06:30 GMT, Mar 11, 2018 | Published: 01:59 GMT, Mar 11, 2018 |
0 Comments
1142
This post was written by : srikkanth

அவன் நினைவாக அவளிடம் இருக்கும் பெரும் சொத்து சோகம்! – வேண்டாம் என்று அவன் விலகிப் போன பின்னரும் வேண்டும் எனத் தொடருகிறது சோகம்!

“காதலில் பேண வேண்டிய இரகசியத்தை போட்டுடைத்து விட்டாய்” என்று பொய்க் காரணம்கூறி, காதல் முறிந்தது என்று அவன்தான் பறையறைந்துவிட்டுப் போனான்!

காதல் என்ன பட்ட மரமா ‘படீர்’ என்று முறிவதற்கு?

காதல் என்ன முகம் பார்க்கும் கண்ணாடியா ‘டமார்’ என்று உடைவதற்கு?

காதல் என்ன மண் பானையா போட்டு விட்டதும் பொட்டென்று சிதைவதற்கு?

காதல் கைப்படுவதைவிட காதலை கைவிடுவது கடினம்!

எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதையே மனம் நின்று நினைக்கிறது!

காரணத்தோடு பிரிவது என்றால் – மனதில் ரணம் வராது! காரணம் இல்லாமல் பிரிந்தானே – காரணத்திற்கு சுயமாக உருக்கொடுத்து, எம்மிடையே இருப்பதெல்லாம் காதல் அல்ல காமம் என்று வார்தைகளால் வேல் வீசிப் பிரிந்தானே, அதுதான் இதயத்தில் வலியை விதைக்கிறது!

‘வெட்டிவிடு’ என்று இன்னொருவன் சொன்னவுடன் துாக்கி எறிந்துவிடுவதா அன்பு?!

தேர் போல் சுற்றிவந்த காதல் இரதத்தை ஒரு நொடியில் காலுடைத்துப் போடலாமா?

ஏன் மறந்தான் – எறிந்தான் – துறந்தான்? – வினாக்களே வெப்பமாகின!

கனாக்கள் இல்லாத நாட்களாக சோக உலகில் தினம் உலா வந்தாள்! தென்றல் தீயானது மஞ்சம் பகையானது நெஞ்சம் புயலானது!

“வஞ்சகா” என்று வாய் கூறினும் நெஞ்சம் மட்டும் நிந்திக்க மறுத்தது!

“துரோகி” என்று உதடுகள் துாற்றினாலும், நெஞ்சம் மட்டும் துாற்ற மறுத்தது!

வார்த்தைகளுக்கா பஞ்சம்? ஆனாலும் வாரியிறைக்க மறுத்தது நெஞ்சம்!

“வெட்கம் கெட்ட மனமே, வெட்டி விட்டு போனவனின் பக்கம் ஏன் போகிறாய்?” – உதடுகள் இகழ்ந்தாலும் உள்ளம் சளைக்காது! கனவுகள் கலைந்தாலும் நனவுகள் நழுவாது!

கள்வடியும் இதழ்களில் அவன் குடித்த நினைவு – வெண்சங்கு கழுத்தினிலே அவன் உதட்டின் சுவடு – மென்பட்டு மேனியெங்கும் வன்கரம் பட்ட நினைவு!

வாடிப் போனாள் வதங்கிப் போனாள் அகல்யா!  தேடிப்போக நெஞ்சம் சொல்லும்! வேண்டாம் என்று வீம்பு பிடித்தாள்!

“சமரசம் காணாத சரசம் உண்டோ? – ஊடல் இல்லாத கூடல் உண்டோ அகல்யா? – தோள் கொடுப்பவனை நாடடி! தேள் கொட்டிய உறவில் தேன் கொட்டட்டும்” நெஞ்சம் புத்தி போதித்தது!

“செல்லாத காரணத்திற்காய் வெடிகுண்டாக வெடித்துவிட்டு போனது அவன் தானே? அலைமோதும் கரையோரத்து உணவகத்தில் கண்முன்னே நான் நிற்க, நெஞ்சத்தில் நெருப்பேற்றிவிட்டு நண்பனோடு ஏறி மறைந்தது அவன்தானே!” – புத்தி போதித்த நெஞ்சத்திற்கு விடை கொடுத்தாள் அகல்யா

“ஒருவர் பகைத்தால் இன்னொருவர் நகைப்பதே உண்மை அன்பு – விட்டுக்கொடுப்பில் கிளைவிட்டு தளைப்பதே சத்தியக் காதல் – தீயவன் என்றால் துாக்கியெறியலாம், உன்னவன் தீஞ்சுவையானவன் உன்னையே கொஞ்சிக் கிடந்தவன் – கொஞ்சியவனை கெஞ்சலாம் மிஞ்சியவனைத்தான் கொஞ்சக்கூடாது!”

நெஞ்சம் அகல்யாவிற்கு வஞ்சம் இல்லாமல் வழிகாட்டியது. அதனால் அவளுக்கோ நெஞ்சோடு பிணக்கு!

“எனக்கு உரைக்கும் நெஞ்சே! உனக்கு அவரைப் பகைக்க தெரியாதா? துன்ப நோயில் தாங்காது நான் துடிக்க, என்னை துாக்கியெறிந்துவிட்டு துாங்கிக் கொண்டிருப்பவரை நினைத்து நீ ஏங்கி என்ன பயன்?

காதல் உண்மையெனில் காலம் எம்மை இணைத்து வைக்கட்டும். வள்ளுவனும் அதை சொல்லித்தான் வைத்துள்ளாரே.. இப்போது என்னைவிடுவாயா..?!” பெருமூச்செறிந்தாள் அகல்யா

‘இருந்துள்ளி என பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்,

பைதல் நோய் கொய்தார்கண் இல்’

அதிகாரம் – 125, குறள் – 1243

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)