Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனிமேல் இப்படி தான்: கர்ச்சிக்கும் ஹத்துரு சிங்க(ம்)

In
Updated: 00:09 GMT, Mar 18, 2018 | Published: 03:22 GMT, Mar 11, 2018 |
0 Comments
1072
This post was written by : Puvanes

இலங்கை திருநாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே, இலங்கை கிரிக்கெட் அணிதான் என்றால், அதில் மறுப்பதற்கோ, அதில் ஆச்சரியப்படுவதற்கோ ஒன்றும் இல்லை.

ஏனென்றால், இலங்கை என்ற ஓரு அழகிய தீவை உலகநாடுகளே பல அறியாமல் இருந்த காலகட்டத்தில், 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை ஏந்தி இப்படியான ஒரு நாடும், இப்படியான திறமை மிகுந்த வீரர்களும் உள்ளனர் என்பதனை உலகிற்கு தெரியப்படுத்தியது இந்த கிரிக்கெட் விளையாட்டு தான்.

இந்த கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை அணியின் பெயரை செதுக்க பல வீரர்கள் செய்த தியாகம் மற்றும் முயற்சிகள் சொல்லில் அடங்காதவை. உலக வெற்றிக் கிண்ணத்தை ஏந்தியதன் பின்னர் இலங்கை அணியை எதிரணிகள் கண்டு அஞ்சியதும், இதே கர்வத்துடன் இலங்கை அணி வெற்றி மழையில் நனைந்ததும் வரலாற்று கதைகள்.

இப்படி வெற்றிகளின் பாதைகளில் ஓய்வெடுக்காது ஓடிவந்த இலங்கை அணி, கடந்த காலங்களில் ஓய்ந்து விட்டதா? – ஓய்வெடுக்கின்றாதா? என்ற கேள்வியை பலரும் தொடுக்கும் அளவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் நிலை மாறியிருந்தது.

அதற்கு முன்னணி வீரர்களின் ஓய்வு, கிரிக்கெட் சபையினுள் நிலவிய பிரச்சினை, அரசியல் என பல காரணம் முன்னின்றன. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி இலங்கை கிரிக்கெட் அணி எழுச்சி பெறுமா என்ற கேள்விக்கு கடந்த காலங்களில் பலரும் விடை தேடி அலைந்துக் கொண்டிருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அண்மைய காலங்களில் தடுக்கி விழுந்த இலங்கை அணி, விழுந்தால் படுத்துக்கொள்ளும் யானை போல் அல்லாது சீற்றத்துடன் எழும் குதிரை போல் உருவெடுத்ததற்கு யார் காரணம் என கேட்டால்? ‘உபுல் சந்திக்க ஹத்துருசிங்க’

ஆம்! இலங்கை அணி கண்டெடுத்த மிளிரும் முத்து. தான் விளையாடிய காலகட்டத்தில் சகலதுறை வீரராக வலம் வந்த அவர் இன்று இலங்கை கிரிக்கெட் அணிக்கே தலைமை பயிற்சியாளராக மாறுவார் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் தேசிய கிரிக்கெட் துறைகளில் பல பணிகளில் தனது பெயரை முத்திரை பதித்து வந்த அவர், தனது பெயரை உலகறிய செய்வதற்கு எடுத்த ஆயுதமே பயிற்சியாளர் பதவி.

தனது பணியை கத்துக் குட்டி அணியான பங்களாதேஷ் அணியிடம் பரீட்சித்து அவர் அதில் வெற்றியும் கண்டார். இளம் வீரர்களை கொண்ட பங்களாதேஷ் அணியை சர்வதேச கிரிக்கெட் களத்தில் சாதிக்கும் அணியாக வளர்த்தெடுத்தவர் இவர்தான் என்றால் அதை யாராலும் மறுக்கமுடியாது.

பங்களாதேஷ் மண்ணில் இந்திய, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து போன்ற பலம் பொருந்திய அணிகளை வீழ்த்துவதற்கு வியூகம் அமைத்துக்கொடுத்தவரும் ஹத்துரு சிங்கதான். இவ்வாறான பலவெற்றிகளை பெருமிதம் இல்லாது மெல்லிய புன்சிரிப்புடன் கடந்து செல்லும் அவர், உலக பார்வையை தன் மீது விழவைத்தற்கு எடுத்த முயற்சிகள் ஏராளம்.

இவ்வாறான கடுமையான பாதைகளை கடந்து வந்தே இன்று சொந்த நாட்டிற்காக தனது பணியை தொடர்ந்திருக்கிறார் ஹத்துரு சிங்க.

ஆரம்பகால கட்டத்தில் இலங்கை அணி நிர்வாகம், ஹத்துரு சிங்கவை புறக்கணித்திருந்தாலும் இன்று அவரிடமே மண்டியிடும் அளவுக்கு ஹத்துரு சிங்க தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார் என்றால் இதைவிட பெருமை அவருக்கு தேவையில்லை.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்பை ஏற்ற ஹத்துரு சிங்க, இன்றுவரை இலங்கை அணியை ஏறுமுகத்தில் கொண்டு செல்கின்றார் என்றால் அது மிகையாகாது. புதிய பயிற்சி திட்டங்கள், வீரர்களின் தேர்வு, ஆலோசனைகள் என்ற தூர நோக்கு பார்வையுடன் விஷ பரீட்சையில் களமிறங்கிய ஹத்துரு சிங்க, முதல் பரீட்சையில் தோற்றே போனார்.

இந்த ஆண்டு ஆரம்பம், பங்களாதேஷ் மண்ணில் சிம்பாப்வே அணியையும் தாண்டி, தன் வித்தைகளை கற்றுக்கொடுத்த பங்ளாதேஷ் வீரர்கள் முன்னாலும் தலைகுனிந்த ஹத்துரு சிங்க, அவமானம் காற்றில் பறக்கும், தன்மானம் உயரப்பறக்கும் என்பதை எண்ணி முயற்சியை கைவிடவில்லை.

மனம் தளராது அவர் எடுத்து வைத்த அடுத்த அடி, அவரை விழ வைக்கவில்லை. பங்களாதேஷ் மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் சிம்பாப்வே அணியிடம் அவமானத் தோல்வியை சந்தித்தாலும், அதை மறக்கடித்து இலங்கை கிரிக்கெட் அணி வாகை சூடுவதற்கு சக்கர வியூகம் அமைத்துக் கொடுத்தார்.

இதன்பின்னர் இலங்கை அணி தலைநிமிர ஆரம்பித்து விட்டது என்றே கூறவேண்டும். தோல்விகளால் துவண்டு போயிருந்த இலங்கை அணியும், இரசிகர்களுக்கும் புத்துயிர் பெற வைத்த ஹத்துருசிங்கவிற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் என இரசிகர்கள் இன்னும் கூறிவருகின்றதை கண்,காது ஊடாகவும் அறியமுடிகின்றது.

ஹத்துரு சிங்க, இன்று என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. தோல்விகள் நிரந்தரமல்ல என உலக்கிற்கு பாடம் புகட்டிய ஹத்துருசிங்க, அடுத்த உலக கிண்ணத்திற்கான பலமான அணியை தயார்படுத்துவதற்கான அடித்தளத்தினை பலமாக உருவாக்கி வருகின்றார்.

சுதந்திரக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணியிடம் இலங்கை தோற்று, தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. எனினும், குறித்த தொடரில் வீரர்கள் வெளிப்படுத்திய போராட்ட குணம் ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அர்பணிப்புடன் அணியை வழிநடத்தும் ஹத்துருசிங்க, இலங்கை அணியின் வளர்ச்சிக்காக இனி வைத்திருக்கும் மந்திரம் என்னவோ? வித்தைகள் என்னவோ?

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)