Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பீதியடைய வைத்த இனக்கலவரமும்.. பின்னணியில் உள்ள சக்திகளும்!

In
Updated: 06:21 GMT, Mar 11, 2018 | Published: 05:32 GMT, Mar 11, 2018 |
0 Comments
1980
This post was written by : Puvanes

நீண்ட நாட்களின் பின்னர் இலங்கையை புரட்டிப்போட்டதோர் விடயமாக கண்டியில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் அமைந்தன.

ஒட்டுமொத்த இலங்கையும் அடுத்தது என்ன நடக்கப்போகின்றது என்ற பீதியில் உறைய வைத்த விடயமாகக் கூட இந்த வன்முறைகள் அமைந்தன என்பது மறுக்க முடியாதது.

முத்தசாப்தங்களுக்கும் மேலாக யுத்தம் என்ற கோரப்பிடிக்குள் சிக்கித்தவித்த இலங்கை அதன் பின்னர் அதாவது 2009 ஆம் ஆண்டுகளின் பின்னர் ஓர் அமைதியான சூழ்நிலையில் பயணிக்கத் தொடங்கியது. அரசியல் ரீதியான குழப்பங்கள் இருந்தாலும் கூட இலங்கை யுத்தமற்ற அமைதியான நாடாக மாறியது.

ஆனால் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னர் மீண்டும் நாடு பல்வேறு குழப்ப நிலைகளை சந்திக்க ஆரம்பித்தது. குறிப்பாக அண்மையில் இலங்கையை அதிரவைத்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் ஆரம்பம் இதுவல்ல எப்போதோ ஆரம்பித்து புகைவிட்டு வந்தது தற்போது சற்றே கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது அவ்வளவே…

ஆனால் இப்போதும் பற்றிய தீ முழுமையாக அணையவில்லை ஒருவகையில் இப்போது தான் பிரச்சினைகள் பூதாகரமாக மாறியுள்ளது என்பதே உண்மை. சிங்கலே – ஹலால் – இனவிருத்தி கருத்தடை மாத்திரைகள் – பௌத்த வணக்கஸ்தலங்கள் அழிப்பு என பல்வேறு வகையில் மாறுபட்ட பரிணாமத்தில் வளர்ந்த இனவாதத் தீ தற்போது பற்றிக் கொண்டது.

இலங்கையின் வரலாற்றுப்பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும் போது 1915ஆம் ஆண்டு கலவரங்கள் பதியப்பட்டன அது அரசியல் ரீதியிலான கலவரமாக பதியப்பட்டது சுட்டிக்காட்டப்படத்தக்கது. அதன் பின்னர் 1958, 1977 மற்றும் 1983 என்ற காலப்பகுதிகளில் கலவரங்கள் இலங்கையை அதிர வைத்தன, உயிர்களை காவு கொண்டன. இவ்வளவு பட்டபின்பும் இன்னும் அதே பாதையில் இலங்கை பயணிக்கத் துடிப்பது வேதனையானதே.

இது இப்படி இருக்க இவையனைத்தும் அரசியல் ரீதியிலான பின்புலங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன என்பது தெளிவாக தெரியும் விடயம். நடந்து முடிந்த கலவரங்களை விட்டுவிடலாம் இப்போது நடந்த சம்பவங்களை சற்றே ஆராயலாம்…

குறிப்பாக கண்டி வன்முறைகளின் ஆரம்பம் இதுவல்ல என்பது தெரிந்த விடயமே. ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தன பின்னர் அண்மையில் அம்பாறையில் இனவிருத்தியை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் சிங்கள மக்களுக்கு முஸ்லிம்களால் வழங்கப்படுகின்றது என பிரச்சினைகள் வெடித்து பதற்ற சூழலை தோற்றுவித்தன. அதன்பின்னர் அது அடங்கவே திகனயில் பெரும்பான்மை இளைஞர் ஒருவர் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டு அது இனக்கலவரமாக வெடித்தது.

இந்த சம்பவக் கோர்வையானது எப்படியாவது பிரச்சினைகள் வெடிக்கவேண்டும் என ஒரு தரப்பு திட்டமிட்டு வருவதனை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே.

ஆனால் குறித்த முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்ட (சிங்கள) சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைபிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டதன் பின்னரே இறந்தார் என்பது வெளிவராத உண்மை அப்படியாயின் அது திட்டமிட்ட கொலையா? இறந்தவரின் தாயின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தாக்குதலினால் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என்ற செய்திகளும் வெளியாகின.

சரி அப்படியே இருந்தாலும் முஸ்லிம் – முஸ்லிம், சிங்களம் – சிங்களம், தமிழ் – தமிழ் ஆகிய தத்தம் இனங்களுக்கு இடையே ஒன்றல்ல பல கொலைகளும், அசம்பாவிதங்களும் அடிதடிகளும் இடம்பெற்று வருகின்றன இவை ஒன்றுமே பாரிய பிரச்சினையாக வெடிக்காத போது இந்தவிடயம் கலவரமாக மாறியது வேடிக்கையானது.

எப்படியோ பிரச்சினைகள் வெடிக்க ஆரதம்பித்தன் பின்னர் சமூக வலைத்தளங்களை அரசாங்கம் முடக்கியது. அதன் மூலமாகவே பிரச்சினைகள் தோன்றுகின்றன எனக் கூறி அவற்றை முடக்கியது. ஒரு வகையில் இது வரவேற்கப்படவேண்டியதே..

ஆனால் உண்மையில் நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றி வளர்த்து பின்னர் அது கொளுந்து விட்டு எரியும் போது அணைக்கும் விடயமாகவே இதனை பார்க்க வேண்டும்.

காரணம் சமூகவலைத்தளங்களில் இனவாதக் கருத்துகள் பகிரப்படுவது தொடர்நது நடைபெற்று வந்த விடயம். அப்போதெல்லாம் தடுத்து நிறுத்தி கைதுகளைச் செய்யாத அரசு தற்போது அதிவேகமாக போலிப் பூச்சாண்டி காட்டுவது வேடிக்கை மிக்கது.

உதாரணமாக டேன் பிரசாத் எனப்படும் இனவாத செயல்களோடு தொடர்புபட்ட நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். முஸ்லிம்களை அழிப்பேன் என பகிரதங்க சவால் விடுத்து இனவாதத்தை பரப்பி நாட்டை குழப்பிய அவருக்கு நடந்தது என்ன? கைது செய்யப்பட்டு விருந்தாளி வீட்டுக்குச் சென்று வீடு திரும்புவது போல சிறை சென்று வந்தார் மீண்டும்.

அதேபோல அம்பிடிய சுமனரதன தேரரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரே என்பது நாடே அறியும் ஆனாலும் அவர் தடுத்து நிறுத்தப்பட்டாரா? இப்படியாக பல இனவாத செயற்பாடுகளுடன் தொடர்பு பட்ட நபர்கள் இன்று வரையிலும் சுதந்திரமாக இயங்குவது எப்படி? யார் அவர்களை இயங்க வைப்பது என்ற கேள்விக்கு விடை யார் கொடுப்பது?

இப்படி ஒவ்வொன்றாக, ஒவ்வோர் நபராக ஆராயும் போது பிரச்சினைகளின் ஆழம் புரியும். அதன்படி இவை அனைத்தும் அரசியல் செயற்பாடுகளுக்கான அடுத்த கட்ட நகர்வா எனவும் சந்தேகம் எழுவது சாத்தியமே…

இது தவிர கண்டி வன்முறைகளுடன் அரசியல்வாதிகள் தொடர்பு பட்டுள்ளார்கள் எனவும், அமைச்சர்கள் தொடர்புபட்டுள்ளார்கள் எனவும் ஒரு தரப்பு மற்றுமோர் தரப்பினை குற்றம் சுமத்தி வருகின்றது. குறிப்பாக “இந்த விடயங்களோடு தொடர்புபட்ட அரசியல்வாதிகளை அறிவோம்.. ஆதாரம் உள்ளது… அம்பலப்படுத்வோம்” என கூக்குரல் இடும் அரசியல்வாதிகள் அவற்றினை வெளிப்படுத்த மட்டும் சித்தப்படவில்லை.

உண்மையில் இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருந்தால் அவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். கலவரங்களோடு தொடர்புபட்ட சாதாரணவர்களை கைது செய்து தண்டிக்க முற்படுவது போல அரசியல்வாதிகள் திரைக்கு பின் இருந்தால் அவர்களையும் கைது செய்ய வேண்டியது கட்டாயமே ஆனால் அது நடக்கும் என்ற சாத்தியம் இல்லை.

காரணம் பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே அரசியல் நகரும். இலங்கையில் ஒரு இனத்தை மற்றோர் இனத்தோடு மோதவிட்டு அரசியல் நகர்த்தப்பட்டு வருவது சுதந்திரத்தின் பின்னர் தற்போது வரையிலும் தொடர்கின்றது என்பதே உண்மை.

ஒட்டுமொத்தமாக கூறப்போனால் நடந்து முடிந்த கலவரங்களும் சரி, நடைபெற்று கொண்டு இருக்கும் கலவரங்களும் சரி அனைத்துமே அரசியல் இலாபத்தோடு அப்பாவி பொதுமக்கள் பலியாக்கப்படும் விடயம் மாத்திரமே.

அப்போது முதல் இலங்கை கலவரங்களுக்கு பின்னால் காய் நகர்த்துவது அரசியல்வாதிகளே என்பது ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் இது எப்போது மாறும்? மாற்றம் ஏற்படுமா? இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தி அரசியல் நடத்தும் சாபக்கேடு இப்போதைய ஆட்சியிலாவது முடிவுக்கு கொண்டு வரப்படுமா? எதிர்காலம் தீர்மானிக்கும் பொறுப்பு வாய்ந்த மக்கள் மூலம் அதிகாரம், பதவி பெற்ற அரசியல்வாதிகள் திறன்பட செயற்பட வேண்டிய காலகட்டம் தற்போது ஏற்பட்டுள்ளது எனினும் இனியும் பழைய கதை தொடருமானால் இலங்கை மக்களின் முன்னேற்றக் கனவு எப்போதுமே “இந்தப் பழம் புளிக்கும்” கதைதான்…..

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)