Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியத் தலைவரை சந்திக்கும் அமெரிக்க ஜனாதிபதி!

In
Updated: 08:20 GMT, Mar 11, 2018 | Published: 08:19 GMT, Mar 11, 2018 |
0 Comments
1124
This post was written by : srikkanth

-சதீஸ் கிருஷ்ணபிள்ளை-

 

அரசியல் உலகின் அதிசயம். உலகின் மிகத் தீவிர அரசியல் பகையாளிகளாகக் கருதப்படும் தலைவர்கள். அவர்கள் சந்திக்க இணங்கியுள்ளனர். உறவுகளை வளர்ப்பது பற்றி பேசவும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப். மற்றவர் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன். முன்னையவர் முதியவர். பின்னையவர் இளைவர். முதியவர் இளையவரை ரொக்கட் குள்ளன் என்பார். இளையவரோ, மனநிலை பிறழ்ந்த அமெரிக்கக் கிழவன் என்று பதில் அளிப்பார்.

இது தனிப்பட்ட பகையல்ல. தேசங்கள் சார்ந்தது. ஒரு தேசத்தைச் சேர்ந்தவர்கள் மற்றைய தேசத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று சூளுரைக்கும் அளவுக்குத் தீவிரமானது.

கடந்த ஆண்டு பகைமை உச்சத்தில் இருந்தது. ஐக்கிய நாடுகளையும் வரித்துக் கொண்டு அமெரிக்கா விதித்த தடைகள் வடகொரிய மக்கள் மத்தியில் ஏற்படுத்திய ஆத்திரம். தமது நாட்டின் மையப்பகுதியைத் தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரிய சோதித்ததால், அமெரிக்கர்கள் மத்தியில் எழுந்த அச்சம். இந்த உணர்வுகள் தலைவர்களின் ஆத்திரப் பேச்சுக்களாக வெளிப்பட்டன.

இன்று இரு தலைவர்களும் சந்தித்துப் பேச இணங்கியுள்ளனர் என்றால், இது லேசுப்பட்ட விஷயம் அல்ல.

கடந்த கால வரலாறு

ஒரு காலத்தில் வடகொரியாவும், தென்கொரியாவும் ஒரே நாடுகள். இரு தேசத்து மக்களும் ஒரே கலாசாரத்தை அனுசரித்தார்கள். இரண்டாம் உலக மகா யுத்தம் கொரிய தீபகற்பத்தை பிளவுபடுத்தியது. மக்கள் வடக்காகவும் தெற்காகவும் பிரிந்தார்கள். தென்கொரியாவை அமெரிக்கா கட்டுப்படுத்தியது. வடகொரியா சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது..

அமெரிக்காவிற்கும், சோவியத்திற்கும் இடையிலான பனிப்போர் கால பதற்றநிலை உச்சத்தைத் தொட்டபோது, கொரிய தீபகற்பத்தின் வடக்கிலும், தெற்கிலும் தனித்தனி அரசுகள் உருவாகின. பூகோள அரசியல் இரு நாடுகளையும் பிளவுபடுத்தி வைத்தாலும், இரு தரப்பு மக்கள் மத்தியில் ஒற்றுமை குறித்த ஆசை மறையவில்லை.

ஒற்றுமையின் நாட்டம்

மீண்டும் வடகொரியாவுடன் சேர வேண்டும் என்பது பாதிக்கு மேற்பட்ட தென்கொரியர்களின் நாட்டம் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. ஒன்று சேருதல் சாத்தியமா?

வடக்கையும், தெற்கையும் இணைக்கும் எத்தனையோ முயற்சிகள். பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. உடன்படிக்கைகள் எட்டப்பட்டன. நல்லெண்ண முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இவை எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருந்தன. உள்நாட்டு அரசியல் பிரச்சனைகள் முதற்காரணம். நட்புநாடுகள் தொடுத்த அழுத்தம் இரண்டாவது காரணம்.

தென்கொரியாவின் சமகால ஜனாதிபதி மூன் ஜே-இன் வேறுபட்டவர். திறந்த மனதுடன் செயற்படுபவர். அவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைப் பயன்படுத்தி வடகொரியாவுடன் நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்ப முயன்றார்.

இதன் காரணமாக, வடகொரிய போட்டியாளர்கள் எல்லை கடந்து வந்து தென்கொரிய மண்ணில் இடம்பெற்ற போட்டிகளில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து, தென்கொரிய ராஜதந்திரிகள் வடக்கிற்கு சென்றார்கள். வடகொரியத் தலைவர் கிம் யொன் உன் கொடுத்த அழைப்புக் கடிதத்தை அமெரிக்க ஜனாதிபதியிடம் கையளிக்கவும் அவர்களால் முடிந்தது.

ஊகிக்க முடியாத தலைமைகள்

வடகொரியத் தலைவர் உறுதியானவர். உலக நாடுகள் விதிக்கும் தடைகளால் சளைக்காதவர். தனிமனிதாக தேசத்தை வழிநடத்துபவர். மறுபுறத்தில் கடுமையானவர். அரசியல் பகையாளிகளை கொன்றொழித்தவர். இந்த மனிதர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

அமெரிக்க ஜனாதிபதியும் லேசுப்பட்டவர் அல்லர். அரசியல் பின்புலம் எதுவும் இன்றி, உலக மகா வல்லரசின் அரியாசனத்தில் அமர்ந்தவர். இலட்சிய நோக்கத்தை அடையும் முயற்சியில் தவறுகளை இழைத்தாலும், கொள்கையில் உறுதியாக இருப்பவர். வடகொரியத் தலைவருடனான சந்திப்பிற்கு மக்களவையின் அனுமதி அவசியம் என்றாலும், அதனை பொருட்டாக கருதாமல் சந்திப்பிற்கு சரி என்று தலையாட்டியவர்.

ட்ரம்ப் – கிம் சந்திப்பு சாத்தியப்படுமாயின், அமெரிக்க ஜனாதிபதியொருவர் வடகொரியத் தலைவரை சந்தித்த முதற் சந்திப்பாக அமையும். கிம்மை கடுமையாக விமர்சித்தாலும், அவர் பகுத்தறிவுடன் சிந்திப்பவராக இருக்கக்கூடும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

இரு துருவங்களின் சந்திப்பு என்பது இலேசுப்பட்டது அல்ல. எங்கே சந்தித்தல் என்பது முதற்கொண்டு எத்தகைய அணுகுமுறையைக் கையாள்வது என்பது வரை பல கேள்விகள்.

தர்க்க ரீதியான யதார்த்தமா? தலைவர்களின் ‘மூட்’டா?

அமெரிக்கா செல்ல கிம்மும், வடகொரியா செல்ல ட்ரம்பும் இணங்குவார்களா என்பது சந்தேகமே. தென்கொரியாவிலோ, சீனாவிலோ சந்தித்தால் அந்நாடுகள் பேச்சுவார்த்தையில் ஆதிக்கம் செலுத்தக்கூடும். இருநாடுகளுக்கும் பொதுவான இடத்தில் சந்திப்பதாயின் அதற்குரிய ராஜதந்திர ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இருவரும் என்ன பேசப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிடலாம். அணுகுமுறை எது என்பது கேள்வியே. இன்று வடகொரியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான அரசியல் நிலவரம் சார்ந்த தர்க்க ரீதியான யதார்த்தங்கள் உள்ளன. இரு தலைவர்களுக்கும் தனித்துவமாக திகழக்கூடிய விசித்திரமான மனநிலையுடன் கூடிய சிந்தனைகளும் செயற்பாடுகளும் இருக்கின்றன. எந்த அணுகுமுறை வெற்றி தரும் என்ற கேள்வி முக்கியமானது.

பேரம் பேசுதல்

சமாதானத்திற்காக பேச்சுவார்த்தை என்றால், அங்கு பேரம் பேசும் ஆற்றல் வேண்டும். அமெரிக்கா வல்லரசாக இருக்கலாம். ஆனால், வடகொரியத் தலைவரிடம் அணுவாயுதங்கள் இருக்கின்றன. வலுவான இராணுவம் இருக்கிறது.

அணுவாயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, சர்வதேச அரங்கில் பேரம் பேசுதல் என்பது வடகொரியாவின் கடந்த கால வழக்கம். இதன்மூலம், ஐநாவின் தடைகளைத் தாண்டி தமது நாட்டுக்குத் தேவையான பொருட்களைப் பெறுவார் கிம்.

இன்று வடகொரியத் தலைவர்களிடம் இணையப் போராளிகளும் உள்ளனர். இவர்கள் அமெரிக்க நிறுவனங்களை ஆட்டங்காண வைத்தவர்கள். இது ட்ரம்ப் – கிம் பேச்சுவார்த்தையில், வடகொரியாவை வலுவான நிலையில் வைத்திருக்க உதவும்.

பேச்சு தோல்வி கண்டால்..

சகல சவால்களையும், தடைகளையும் தாண்டி அமெரிக்க, வடகொரியத் தலைவர்கள் சந்திப்பார்களா என்பது சமகால அரசியல் அரங்கின் முதன்மையான கேள்வி. இந்த சந்திப்பு சரியான திசையில் சென்று பலன் தருமானால் சர்வதேசம் மகிழும். தவறான திசையில் பயணித்து உடன்படிக்கை சாத்தியப்படாவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வியும் உள்ளது.

ஏற்கெனவே, ட்ரம்பும் கிம்மும் தீவிர பகையாளிகள். உடல் – உள குறைபாடுகளின் அடிப்படையில் ஒருவரையொருவர் விமர்சிப்பவர்கள். எதிர்பாராத மனமாற்றம் காரணமாக இருவரும் சந்தித்து சமாதானம் பேசுகையில், உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். இது கோபாவேசத்தைத் தூண்டும். இரு நாடுகளையும் இராணுவ நடவடிக்கைகள் நோக்கித் தள்ளி விடும்.

இன்று ட்ரம்ப் – கிம் சந்திப்பு பற்றி எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், இதனை நம்பிக்கையுடன் எதிர்நோக்க வேண்டிய கடப்பாடு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது. சந்திப்பு தோல்வி காணுமாயின், அதனைத் தொடர்ந்து பிரச்சனையைத் தீர்க்கும் திட்டமொன்றை வைத்திருப்பது கட்டாயம் என்பதே தவிர்க்க முடியாத உண்மை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)