Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காளி கோயில் உண்டியலை திருடியவருக்கு நடந்தது என்ன?

In இலங்கை
Updated: 06:28 GMT, Mar 12, 2018 | Published: 06:28 GMT, Mar 12, 2018 |
0 Comments
1207
This post was written by : Anojkiyan

ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள கொம்மாதுறைப் பிரதேசத்தில் அங்குள்ள காளி கோயில் ஒன்றின் உண்டியலை மிகவும் சூட்சுமமான முறையில் அகற்றி திருடிச் சென்ற இளைஞனை தாம் துரிதமாக செயற்பட்டு சில மணி நேரங்களுக்குள் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளியைச் சேர்ந்த 18 வயதான இளைஞனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்மாதுறை கிராமத்தில் உள்ள மேற்படி காளி கோயிலின் உட்புறத்தில் பாதுகாப்பாக பொருத்தி வைக்கப்பட்டிருந்த உண்டியல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு திருட்டுப் போயிருந்ததாக கோயில் நிருவாகத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இச்சம்பவம் பற்றி முறைப்பாடு அளிக்கப்பட்டவுடன், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி நிரோஷ‪ன் பெர்னான்டோவின் வழிகாட்டலில் ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வு அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையிலான பொலிஸ் அணியினர் விசாரணைகளைத் துரிதப்படுத்தினர்.

இந்நிலையில், கொம்மாதுறை 10ஆம் கட்டை புகையிரதப் பாதையோடு அமைந்த புதருக்குள் மறைந்திருந்து திருடப்பட்ட உண்டியலை உடைத்து அதனுள் இருந்த பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும்போது இளைஞன் ஒருவரை திங்கட் கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி பொலிஸார் மேலும் குறிப்பிடும்போது, இந்தக் கிராமத்தில் வெளியார் எவரேனும் வந்து தங்கியிருக்கின்றார்களா என்ற கோணத்தில் தாங்கள் விசாரணைகளைத் துவங்கியபோது மேற்படி இளைஞன் தமது உறவினர் ஒருவரின் வீட்டில் கடந்த சில நாட்களாக வந்து தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி இளைஞனையும், திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் அந்த உண்டியலில் காணிக்கையாக பக்தர்களால் இடப்பட்டிருந்த 7 ஆயிரத்து 179 ரூபாய் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனையும் பணத்தையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg