Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேயிலை நிலங்களுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்க வேண்டும்: மக்கள் கோரிக்கை

In இலங்கை
Updated: 12:34 GMT, Mar 13, 2018 | Published: 11:47 GMT, Mar 13, 2018 |
0 Comments
1087
This post was written by : Yuganthini

தேயிலை செடிகள் காணப்படும் மலையக நிலங்கள் பிரித்து கொடுக்கப்படுமாக இருந்தால் அதற்கான சட்ட உறுதிப்பத்திரங்களையும் தோட்ட நிர்வாகம் வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

களனிவெளி பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டிக்கோயா டிலரி கீழ் பிரிவு தோட்டத்தில் 130 ஹெக்டேயர் தேயிலை நிலப்பரப்பில், 100 ஹெக்டேயர் தேயிலை நிலத்தை அத்தோட்டத்தில் தொழில் புரியும் 140 பேருக்கு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகின்ற தேயிலை நிலங்களில் காணப்படும் தேயிலை மரங்களை, தொழிலாளரகள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து பராமரிப்பதுடன் அத்தேயிலை மலைகளில் கொய்யப்படும் கொழுந்தினை தோட்ட நிர்வாகத்திற்கே வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரித்துக் கொடுக்கப்படும் தேயிலை மலைகளுக்கு எந்தவிதமான உறுதிப்பத்திரமும் வழங்கப்படாமல், அவற்றை பாரமரிக்க வேண்டும் என நிர்வாகம் குறிப்பிட்டமைக்கு அத்தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

டிலரி கீழ் பிரிவு தோட்டத்தில் 130 ஹெக்டயர் தேயிலை நிலத்தில் சுமார் 33 ஹெக்டேயர் காடாக்கப்பட்ட தேயிலை நிலம் தனிநபர் ஒருவருக்கு ஏற்கனவே பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 100 ஹெக்டேயர் தேயிலை நிலத்தில் பதிவு செய்யப்பட்ட 140 தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த 100 ஹெக்டேயர் தேயிலை நிலத்தை தேயிலை மரங்களுடன் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் அதற்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படமாட்டாதென தோட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்விடயத்தில் உறுதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் ஆறு மாதங்களின் பின்பே ஆராயப்படுமெனவும் அந்நிர்வாகம் கூறியதாக தொழிலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிரித்துக் கொடுக்கும் தேயிலை நிலங்களில் கொய்யப்படும் தேயிலையை குறித்த ஒரு விலைக்கு தோட்ட நிர்வாகத்திடம் கொடுப்பது எமக்கு நஷ்டமாகும்.

இதனால் 25 நாட்கள் தொடர்ச்சியாக வேலையை வழங்கி, அதற்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை தோட்ட நிர்வாகம் வழங்குவதற்கு அப்பால், காடுகளாக்கப்பட்டு தனிநபர் ஒருவருக்கு வழங்கியுள்ள 33 ஹெக்டேயர் தேயிலை நிலத்தையும் தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்று அதனை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் அதனை பராமரித்து அதில் கொய்யப்படும் தேயிலைகளை தோட்ட நிர்வாகத்திடம் வழங்குவது நல்ல ஒரு திட்டமாகும் எனவும் தொழிலாளர்கள் ஒருபுறம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு நிலங்களை நிர்வாகம் பிரித்துக் கொடுக்குமாகவிருந்தால் அந்நிலங்களுக்கான கால எல்லை நிர்ணயிக்கப்பட்டு, சட்ட ரீதியான உறுதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கும் தொழிலாளர்கள், இவ்விடயத்தில் தொழிற்சங்கங்கள் நன்கு ஆராய்ந்து தொழிலாளர்களுக்கு சார்பான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg