ஐ.நா. தூதுக்குழுவில் பைஸர் முஸ்தபா!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான விவாத்தில் கலந்துக் கொள்ளவுள்ள அமைச்சர் திலக் மாரபன தலைமையிலான உயர்மட்டக் குழுவில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் உள்ளடங்கியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சின் பொது தொடர்பாடல் பிரிவினால் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம், கடந்த 2017ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இரண்டு வருட கால அவகாசமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த மற்றும் பிரேரணையை அமுல்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைள் என்பன தொடர்பாக ஆராயும் விவாதம் நாளை மறுதினம் (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் அமைச்சர்களான சரத் அமுனுகம, பைஸர் முஸ்தபா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.