Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அரசாங்கம் இதய சுத்தியுடன் செயற்படவேண்டியது அவசியம்

In இன்றைய பார்வை
Updated: 06:28 GMT, Mar 21, 2018 | Published: 05:49 GMT, Mar 21, 2018 |
0 Comments
1156
This post was written by : Arun Arokianathan

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இன்றையதினம் இலங்கை தொடர்பான விசேட விவாதம் இடம்பெறவுள்ளது. 2015ம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த வாய்மூல அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் ராட் அல் ஹுசைன் இன்று ஜெனீவாவில் இதன் போது சமர்ப்பிக்கவுள்ளமை அனைவரதும் விசேட கவனத்தைப் பெற்றுள்ளது.

கடந்த தீர்மானத்தை நிறைவேற்ற வழங்கிய இரண்டு வருட காலக்கெடு கடந்த வருடத்துடன் நிறைவடைந்த நிலையில் மேலும் இருவருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதிலும் ஒருவருட காலம் உருண்டோடியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய பல வாக்குறுதிகள் இன்னமும் கிடப்பில் போடப்பட்டதாகவே காணப்படுகின்றது. ஒரிரண்டு விடயங்களில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும் காத்திரமான விடயங்களான பொறுப்புக்கூறல் போன்றவற்றில் எள்ளளவும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்துவது குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பாக வீராப்பு பேச்சுக்களை பேசிவிட்டு மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர்கள் நடக்கும் காலப்பகுதியில் ஒருசில விடயங்களைச் செய்தும் அறிவிப்புக்களை விடுத்தும் காலங்கடத்துகின்ற மேலும் கால அவகாசம் பெறுகின்ற தந்திரத்தையே இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்து வந்துள்ளமையை 2015ஆம் ஆண்டு தீர்மானத்தை தொடர்ந்து வந்த அமர்வுகள் உணர்த்தி நிற்கின்றன. இலங்கை அரசாங்கம் இம்முறை ஐ.நா. மனித உரிமை பேரவையின் 37வது அமர்வுகளை இலக்கு வைத்து சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது. காணமல் போனோருக்கான அலுவலகத்தை இயங்கு நிலைக்கு கொண்டுவந்தமை, வலிந்து காணாமற்செய்யப்படுவதை குற்றமாக அறிவிக்கும் சட்டமூலத்தை அங்கீகரித்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியமை, இழப்பீடுகளுக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தமை ஆகியன இதில்  குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

ஜெனீவா தீர்மானம் என்பது இலங்கையில் நல்லிணக்கத்தை ஸ்தாபித்தல் பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல் மீள் நிகழாமையை உறுதிசெய்தல் என்பனவற்றை அடிப்படையாகக்கொண்டது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களை அரசாங்கம் உண்மையாகவே தமது மக்களாக கருதுகின்றதெனில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகம் கூறமுன்னரே இவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியிலேயே ஒரு சிறிய நகர்வையேனும் இலங்கையில் முன்னெடுக்கலாம் என்பதையே வரலாறு கோடிட்டுக்காண்பித்து நிற்கின்றது.

சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவும் சமாளிப்பதற்காகவும் அறிவிப்புக்களையும் கண்துடைப்பு நடவடிக்கைகளையும் எடுப்பதைவிட உண்மையான இதயசுத்தியுடன் நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்க வேண்டும். அதுவே இந்த நாட்டில் நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவரும். அன்றேல் மீண்டும் கறைபடிந்த வரலாறு திரும்ப இடமுண்டு. கண்டிக்கலவரம் அதற்கு சிறந்த சாட்சியாக அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg