இலட்சியத்தைக் கைவிட்டு கூட்டமைப்பு பயணிக்க முடியாது: கோடிஸ்வரன்!

இலட்சியத்தைக் கைவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு பாதையில் பயணிக்க முடியாது என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
‘அனைத்து உரிமைகளுடனும் தமிழர்கள் வாழவேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான போராளிகளும் இலட்சக்கணக்கான பொதுமக்களும் தமது உயிரை ஆகுதியாக்கியுள்ளனர். அவர்களின் கனவுகளையும் இலட்சியத்தினையும் நாங்கள் நிறைவேற்ற வேண்டியவர்களாகவுள்ளோம்.
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களின் உரிமையினை வென்றெடுப்பதற்காக தியாக மனப்பான்மையுடன் ஒரு தந்திரோபாய செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா மேற்கொண்டு வருகின்றார். அவரின் கரத்தினை நாங்கள் பலப்படுத்தவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் தேசியத்தினை வெல்வதற்காக தமிழர்களின் உரிமையினை வெற்றிகொள்வதற்காக உருவாக்கப்பட்ட கட்சி. இன்று உயர்ந்த நிலையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒவ்வொரு தமிழர்களும் தங்களது அங்கீகாரத்தினை வழங்கியுள்ளனர்.அந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றது.
தமிழர்கள் சுயநிர்ணயத்துடன் வாழும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராடிக்கொண்டிருக்கும்.அதற்கான வலுவினை உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் வழங்கவேண்டும்’ என வெர் மேலும் தெரிவித்தார்.