பௌத்தத்திற்கு முன்னுரிமையளிப்பதால் பறிக்கப்படும் தொழிலாளர் உரிமை

இலங்கையின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக இருக்கக் கூடிய காரணிகளில் மதம் என்பது முக்கிய இடத்தைப் பிடித்துநிற்கின்றதென்பதை மீண்டுமாக உணர்த்தும் அறிவிப்பு நேற்றையதினம் வெளியானது.
இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக மே முதலாம் திகதி இடம்பெறும் தொழிலாளர் தின நிகழ்வுகள் பௌத்தர்களின் வெசாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு மே 7ம்திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதான அறிவிப்பு நேற்று வெளியானது.
மதங்களை நாம் கௌரவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. பௌத்தமதம் நல்ல விடயங்களை வலியுறுத்துகின்ற மதம். முற்போக்கான சிந்தனைகளைக் கொண்ட மனிதத்தை முன்னிறுத்துகின்ற மதம்.
ஆனால் இலங்கையிலோ அது பிற்போக்கான எண்ணக்கருக்களை விதைக்கின்ற மதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக என்ற ஐயப்பாடு அரசியல் வாதிகளதும் மதப்பிரமுகர்களதும் நடவடிக்கைகளால் எழுகின்றது.
மதம் என்பது ஒவ்வொரு தனிப்பட்டவர்களின் உணர்வுசார்ந்த உரிமையாகும். அதனை முழு நாட்டு மக்கள் மீதும் திணிப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது. இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் மனிதர்கள் வேகமாக முன்னேறிக்கொண்டு செல்லும் போது அதற்கு முட்டுக்கட்டை போடுவதாக மதத்தைப் பயன்படுத்தக்கூடாது.
தொழிலாளர்கள் இன்று பெரும் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு முதலாளிமார்களால் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் நாளையே மாற்றியமைப்பது எந்தவகையில் தகும்.
அரசியல்வாதிகள் ஏற்கனவே தொழிலாளர் தினங்களை தமது அரசியல்லாபத்திற்காக பயன்படுத்தும் அநாகரிகச் செயல் நடந்துவரும் நிலையில் மக்களை நல்வழிப்படுத்தும் மதங்களுக்காக தொழிலாளர்களின் உரிமைக்குரிய தினத்தை மாற்றுவதை எந்தவகையிலுமே நியாயப்படுத்திவிடமுடியாது.
பௌத்தர்களின் வெசாக் பண்டிகைக்காக தொழிலாளர் தின பேரணிகளை மே 1ம் திகதியில் இருந்து மே 7ம்திகதிக்கு மாற்றியமைப்பது இந்த நாடு பௌத்த நாடு என்ற கருத்தியலை வலுப்படுத்த வழிகோலுவதாக ஏற்கனவே பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் விடயம் என்பது ஏனைய சிறுபான்மை மக்களின் கரிசனைக்குரிய விடயமாகும். இலங்கை அரசு பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கின்ற விடயத்தை வெசாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு தொழிலாளர் தினப் பேரணிகளைப் பின்னகர்த்திய விடயம் கோடிட்டுக்காண்பிக்கின்றது.