Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நம்பிக்கையில்லாப் பிரேரணையும் தமிழர்களும்

In இன்றைய பார்வை
Updated: 10:17 GMT, Apr 1, 2018 | Published: 08:53 GMT, Apr 1, 2018 |
0 Comments
1355
This post was written by : Varshini

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்களிப்பும் எதிர்வரும் ஏப்ரல் நான்காம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் எந்த முடிவை எடுப்பது என்பதில் தமிழர்கள் திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவது, அதனை எதிர்ப்பது, அன்றேல் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் விடுவதன் மூலம் நடுநிலை பேணுவது ஆகிய மூன்று தெரிவுகளே தமிழர் தரப்பின் முன்பாக உள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கூட்டு எதிரணியினர் சார்பாக நின்று ஆதரவாக வாக்களிப்பது என்பதை தமிழர் தரப்பு எந்தவகையிலும் நியாயப்படுத்தமுடியாது.

தமிழர்கள் வரலாற்றில் மிகமோசமான அட்டூழியங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே அரங்கேறின என்பது தமிழர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது மட்டுமன்றி ராஜபக்ஸ ஆட்சிசெய்த பத்தாண்டு காலப்பகுதியில் தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்திலோ பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகிய விடயங்களிலோ எவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மறுமுனையில் 2015ம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தையடுத்து பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அரசியல்தீர்வு விடயத்திலோ பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் ஆகிய விடயங்களிலோ பெரிதாக எதனையும் செய்துவிடவில்லை என்றாலும் செய்வதற்கான சமிக்ஞைகளைக் காண்பித்து சிற்சில விடயங்களைச் செய்துமுடித்துள்ளது.

ஆட்சிக்கு வந்ததும் வடக்கு கிழக்கின் இராணுவ ஆளுநர்களை மாற்றி சிவில் ஆளுநர்களை நியமித்தமை, தேசிய கீதத்தை தமிழ் மொழியிலும் பாட அனுமதித்தமை,  மயிலிட்டி சாம்பூர் போன்ற நீண்டநாள் கோரிக்கைகளாக இருந்த காணிகள் உட்பட பல காணித் தொகுதிகளை விடுதலை செய்தமை, அரசியற்கைதிகளில் 60 பேர் தவிர்ந்து ஏனையவர்களை விடுதலை செய்தமை, அரசியல் யாப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்தமை, காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை அமைக்க சட்டம் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியமை, இழப்பீடுகளுக்கான அலுவலகம் அமைக்க வழிகோலியுள்ளமை போன்ற பல நம்பிக்கை தரும் நகர்வுகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் கூறியது போன்று பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசின் செயற்பாடுகளோ திருப்திகரமாக இல்லை. ஏனைய விடயங்களிலும் மிக மிக மெதுவான முன்னேற்றமே உள்ளது. இப்படியிருக்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை எடுத்த எடுப்பில் தட்டிக்கழிக்கவும் முடியாது. அதேவேளை ஏற்பட்டுள்ள சிறுசிறு முன்றேற்றங்கள் நம்பிக்கையளிக்கும் சமிக்ஞைகளை வைத்துக்கொண்டு பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதா என்ற சிந்தனையும் தமிழர் பிரதிநிதிகளின் மனக்கண் முன் நிழலாடமுடியும்.

இந்த வேளையில் நாம் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவந்து பிரதமரை நீக்க வேண்டும் என போராட்ட களத்தில் குதித்துள்ளவர்களிடம் பார்த்து கேட்க நினைக்கும் கேள்வியும், அதற்கு அவர்கள் வழங்கக்கூடிய பதில் என்னவென்றும் கடந்த கால வரலாற்றை வைத்து தீர்மானித்தால் பிரதமருக்கு ஆதரவளிப்பதில் தப்பில்லை என்று எண்ணத் தோன்றலாம்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணத்தயாரா? பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்நகர்வீர்களா? இந்தக் கேள்விகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் என்ன பதிலை வழங்குவர் என்பதை கடந்த பத்துவருட கால ராஜபக்ஷ ஆட்சிக்காலம் எடுத்துணர்த்தும். எந்தவிதத் தீர்வையும் வழங்க மறுப்பவர்களுக்கு சார்பாகவா அன்றேல் தீர்வைத் தர  சமிக்ஞையையேனும் வெளிப்படுத்தி சிறிது சிறிதாக முன்நகரும் தரப்பினருக்கு சார்பாகவா நிற்கவேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலையில் தமிழர்கள் உள்ளனர்.

பிரதமருக்கு சார்பாக வாக்களித்தால், தென் பகுதியிலுள்ளவர்களோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏதேனும் இரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர் என்ற பிரசாரத்தை மேற்கொள்ள வாய்ப்புண்டு. மஹிந்த தரப்பிற்கு ஆதரவளிக்க முடியாதென்ற நிலையில் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகிப்பதே தமிழர்கள் பிரதிநிதிகளுக்கு முன்பாகவுள்ள தீர்மானமாக இருக்க முடியும்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg