மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரில் முதல்முறையாக மகுடம் சூடினார் இஸ்னர்!

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னர் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்ற இறுதிபோட்டியில், அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னர் – ஜேர்மனிய வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வை எதிர்கொண்டார்.
மூன்று செட் வரை நீடித்த இந்த இறுதிப் போட்டி பார்வையாளர்களுக்கும், இரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக அமைந்திருந்தது. இந்த போட்டியில் இரு வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காது சமபலத்துடன் மோதிக்கொண்டனர். இருவருக்கும் புள்ளிகள் கிடைக்க போட்டி பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது.
இப்போட்டியில், ஆரம்பமே ஆக்ரோஷம் காட்டிய ஸ்வெரவ், கடுமையான போராட்டத்திற்கு பின்னர் முதல் செட்டை 6-7 என்ற ரீதியில் கைப்பற்றினார்.
இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், 6-4 என்ற கணக்கில் இஸ்னர் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தார். இதையடுத்து நடைபெற்ற வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டிலும் இஸ்னர் 6-4 என்ற ரீதியில் வெற்றி கொண்டு கிண்ணத்தை வென்றார். இது அவரது முதலாவது மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் சம்பியன் பட்டமாகும்.