நாடாளுமன்ற அங்கீகாரமின்றி சிரியா மீது தாக்குதல்: பிரதமர் மே ஆதரவு
நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெறாமல் சிரியாவுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கான தனது முடிவை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஆதரித்துள்ளார்.
கிழக்கு கௌட்டாவின் டூமா நகரில் இம்மாதம் 7ஆம் திகதி சிரிய அரசாங்கப் படையினர் நடத்தியதாக கூறப்படும் இரசாயனத் தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியாவில் அமெரிக்காவின் தலைமையில் தாக்குதல் நடத்த பிரித்தானியாவும் பிரான்ஸும் ஆதரவளித்துள்ளன.
இந்நிலையில், சிரிய அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதலை நடத்த ஆதரவு வழங்க முன்னர், நாடாளுமன்ற அங்கீகாரத்தை தெரேசா மே பெறவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை தெரேசா மே எதிர்கொண்டிருந்தார்.
இதன்போது எதிர்காலத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் புதிய தாக்குதல்களுக்கு உத்தரவிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த தெரேசா மே, இரசாயன ஆயுத பாவனையை தடை செய்வதில் பிரித்தானியா உறுதியாக உள்ளது என்று பதிலளித்துள்ளார்.
மேலும், சிரியாவுக்கு எதிரான வான்வழித் தாக்குதலை நடத்தும் பிரித்தானியாவின் முடிவு நாட்டின் தேசிய நலனில் தங்கியுள்ளதே அன்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழுத்தத்தின் விளைவு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கட்டளைகளை தெரேசா மே வெறுமனே பின்பற்றிவிட்டதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் நாடாளுமன்றில் தெரிவித்த போது, நாடாமன்றில் குழப்பம் ஏற்பட்டது.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜெரமி கோர்பின், இந்த நாட்டில் போர் அதிகார சட்டம் என்பது தெளிவாக தேவை என்றும் வலியுறுத்தினார்.
இருப்பினும் எந்தவொரு தாக்குதல் குறித்தும் நாடாளுமன்றில் ஆலோசிக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்துக் கொண்ட பிரதமர் தெரேசா மே, இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான அரசாங்கத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் போர் அதிகார சட்டத்திற்கான கோர்பினின் கோரிக்கையையும் புறக்கணித்தார்.