மீள்குடியேற்ற பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்கள்! – அச்சத்தில் மக்கள்

யாழ்.வலிகாமம் வடக்கில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்ட பகுதிகளில் அபாயகரமான வெடிபொருட்கள் காணப்படுவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். வெடி பொருட்கள் காணப்படுவதால் காணிகளை துப்புரவு செய்வதற்கு அஞ்சுவதாக தெரிவிக்கும் மக்கள் சம்பந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 28 வருடங்களாக வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் நிலம் கடந்த 13ஆம் திகதி மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் மீள கையளிக்கப்பட்டது. இரண்டு தசாப்த காலமாக சனநடமாட்டமின்றி பற்றைக் காடுகளாக காட்சியளிக்கும் இப்பகுதியை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் ஆங்காங்கே வெடிபொருட்கள் காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தென்மயிலை கிராமத்திலுள்ள கிணற்றில் கடந்த 14ஆம் திகதி பெருமளவான வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இவ்வாறு அபாயகரமான வெடிபொருட்கள் காணப்படும் பிரதேசத்தில் துப்புரவு பணிகளை செய்வது ஆபத்தானதென அச்சம் வெளியிட்டுள்ள மக்கள், சம்பந்தப்பட்ட தரப்பினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.