Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியக் கொடி எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை: ஹசனலி

In இலங்கை
Updated: 13:08 GMT, Apr 22, 2018 | Published: 13:35 GMT, Apr 22, 2018 |
0 Comments
1173
This post was written by : Ravivarman

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கும் தொடர்பெதுவும் கிடையாது என அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசனலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

‘கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக எமது அரசியல் கட்சியான ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.இந்தியாவில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாகத் தெரியவருகிறது.

இதேவேளை, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தலைவர் எனக்கூறி, மொஹமட் மிப்லால் என்பவர் கையொப்பமிட்டு மனு வழங்கியுள்ளதோடு, ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சகல பதாதைகளிலும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தி இவ்வாறானதொரு ஆர்ப்பாட்டத்தினை நடத்துவதற்கு, எவருக்கும் கட்சியின் உயர்பீடம் அனுமதியளிக்கவில்லை.

ஆசிபாவுக்கு நீதி வேண்டும். ஆசிபாவை பாலியல் கொடுமைப்படுத்தி கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். அத்துடன் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படவும் வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியான நிலைப்பாட்டினை எடுத்துள்ளது.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் தலைவர் எனும் பதவி கிடையாது. தனியாள் எவருக்கும் தலைவர் என்கிற பதவி வழங்கப்படவில்லை. தலைமைத்துவ சபைதான் எமது கட்சியில் உள்ளது.

இந்தியப் பிரதமரின் உருவப்படத்தினை காலால் மிதிப்பது மற்றும் இந்திய தேசியக் கொடியை நிலத்தில் போட்டு மிதிப்பது, உயர் ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக இந்திய தேசியக் கொடி மற்றும் அந்த நாட்டு பிரதமரின் உருவப்படங்களை எரிப்பது போன்ற சம்பவங்களும் நடைபெற்றதாக ஊடகங்களில் காண்பிக்கப்பட்டது.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளை எமது கட்சியின் பெயரில் மேற்கொண்டமையின் மூலம், எங்களுடைய கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் எனும் வகையில் இதனைக் கண்டிப்பதோடு, இச் சம்பவங்களுக்கும் எமது கட்சிக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும், இச்சம்பவத்துக்கு எமது கட்சி பொறுப்பல்ல என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg