Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாட்சியங்களில் முரண்பாடு: ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு!

In இலங்கை
Updated: 11:39 GMT, Apr 25, 2018 | Published: 07:59 GMT, Apr 25, 2018 |
0 Comments
1157
This post was written by : Ravivarman

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகளில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், சாட்சியங்களில் தெரிவித்தபடி, காணாமல் போனவர்கள் என்ன வகையான பேரூந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள், என்ன இலக்கமுடைய பேரூந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள் என்று சாட்சியத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் முல்லைத்தீவு நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆட்கொணர்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்ற விசாரணைகளின்போது ஆட்கள் காணாமல் போன சம்பவம் முல்லைத்தீவு நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றிருப்பதனால், அந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த மூன்று வழக்குகளின் மனுதாரர்களான விசுவநாதன் பாலந்தினி, கந்தசாமி பொன்னம்மா, கந்தசாமி காந்தி ஆகியோருடன் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்’ என சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விடுதலைப்புலி உறுப்பினர்களை இராணுவத்திடம் சரணடையுமாறும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அரசாங்கம் இராணுவத்தின் ஊடாக அளித்த உத்தரவாத அழைப்பை அடுத்துப் பெரும் எண்ணிக்கையான விடுதலைப்புலி உறுப்பினர்கள் இராணுவத்திடம் இறுதி யுத்தத்தின்போது மே மாதம் 18 ஆம் திகதி வட்டுவாகல் பகுதியில் சரணடைந்தனர்.

இவ்வாறு சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களில் 14 பேர் தொடர்பில் இரண்டு தொகுதிகளாக அவர்களுடைய உறவினர்களினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சம்பந்தமாக விசாரணைகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதிமன்றத்திடம் இந்த வழக்குளைப் பாரப்படுத்தியிருந்தது.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும், வடமாகாண அமைச்சருமாகிய அனந்தி சசிதரனின் கணவருமாகிய எழிலன் சம்பந்தப்பட்ட மனுவும் ஒன்றாகும்.

அதன் அடிப்படையில் குறித்த வழக்குகள் தொடர்பான விசாரணைகளே இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றன என்பதுடன், வழக்குகளின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வழக்குகள் மே மாதம் 22ஆம் திகதிக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg