Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியலில் இது சகஜமே! – தெற்கு முக்கியஸ்தரின் போலிமுகத்திரை அம்பலமாகும் தருணம்….

In இலங்கை
Updated: 12:06 GMT, Apr 26, 2018 | Published: 10:30 GMT, Apr 26, 2018 |
0 Comments
1462
This post was written by : Puvanes

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலகட்டத்தில், அப்போதைய உயர் மட்ட அதிகாரங்களில் இருந்தவர்களின் ஆதரவுடன் ஊடகங்களை தாக்கியமை, வெள்ளைவான் கடத்தல் உட்பட பல குற்றச்சாட்டுகளுடன் சர்ச்சை அமைச்சராக வலம் வந்தவரே முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

அவர் மீது பகிரங்க குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாது ஆதாரங்களும் கூட வெளிப்படுத்தப்பட்டாலும் இன்றுவரையிலும் விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளது, என்ற கேள்வி எழுகின்றது குறிப்பாக தற்போதைய ஆட்சியாளர்களால் அவர் பாதுகாக்கப்பட்டு வருகின்றாரா என்ற கேள்வியும் எழுகின்றது.

எவ்வாறாயினும் அரசியல் இலாபத்திற்காக மீண்டும் மேர்வின் சில்வா கட்சித்தாவல்களிலும், முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றார் என்பது உறுதியாகியுள்ளது.

இருதினங்களுக்கு முன்னர் “வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே செயற்பட்டுள்ளார். ஆனால் அது குறித்து விசாரிக்க நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் உள்ளிட்ட ஒருவருக்கும் முதுகெலும்பில்லை” எனவும், “இந்த நாட்டை ஆள ரணிலே சிறந்தவர் எனவும் மேர்வின் சில்வா கருத்து வெளியிட்டிருந்தார்.

இதே மேர்வின் சில்வாவே கடந்த நவம்பர் மாதம் “கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்தால் கொழும்புக்குள் படையெடுத்துப் போராட்டங்களை முன்னெடுப்போம்” எனவும் , கோட்டாபய தேச விடுதலைக்காக பாடுபட்டவர் எனவும் கூறியிருந்தார்.

அதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, “ராஜபக்சர்கள் திருடர் அல்ல” என கருத்து தெரிவித்ததோடு ராஜபக்சர்கள் ஆட்சிகாலத்தில் குற்றங்கள், ஊழல்கள் நடைபெறவில்லை என்ற வகையில் கருத்துகளை முன்வைத்திருந்தார்.

அதுமட்டுமல்ல அதன் பின்னர் புதுக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறிவந்த மேர்வின் சில்வா தனது இருண்டுபோன அரசியல் வாழ்வை ஸ்தீரப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதனால் மஹிந்தர்களுக்கு விசுவாசியான இருந்த அவர் தற்போது பிரதமர் ரணிலுக்கு விசுவாசியாக மாறிவிட்டார். அதேபோன்று 2017ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் “ராஜபக்சர்களின் இரகசியங்கள் என்னிடம் உள்ளன. அவற்றினை விரைவில் அம்பலப்படுத்துவேன் எனவும் மேர்வின் சில்வா பகிரங்கமாக கூறியிருந்தார்.

ஆனால் இன்றுவரை இரகசியங்கள் அம்பலமாக்கப்படவில்லை. “லசந்த விக்ரமசிங்க, பாரத லக்ஷமன், ராகம லொகுசிய்யா போன்றவர்களின் கொலைகளுக்கு காரணம் கோட்டாபய எனவும், கடந்தகாலத்தில் மஹிந்த முறையாக ஆட்சி நடத்தவில்லை எனவும், ராஜபக்சர்களின் ஊழல்களின் ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறிய மேர்வின் அதன் பின்னர் சிலகாலம் தன்னை வெளிப்படுத்தாமல் இருந்தார்.

இவ்வாறாக அரசியலுக்காக முன்னுக்கு பின் முரண்பட்ட வகையில் கருத்துகளை வெளிப்படுத்திவரும் ஒருவர் மீண்டும் அரசியல் பாதையில் வருவதால் ஜனநாயகத்திற்கு கேள்வி ஏற்படும் என அரசியல் அவதானிகள் கூறி வருகின்றனர்.

குறிப்பாக தற்போது மீண்டும் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த தீவிர செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள மஹிந்த, கடந்த  கால தன் அரசியலை சர்ச்சையாகவும், விமர்சனங்களாகவும் மாற்றிய நபர்களை மீண்டும் தன் அணியில் சேர்த்துக்கொள்வது சாத்தியப்படாது.

எனவே மஹிந்தவிடம் இடம் இல்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொண்ட மேர்வின் சில்வா, தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்ததை மறந்து மீண்டும் ரணில் தரப்பிடம் தஞ்சம் கோரிவருகின்றார் என அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயிலும் கடந்த காலத்தில் ஊடகங்கள் மீதான பகிரங்க அடக்கு முறை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மேர்வின் சில்வா இன்றுவரை சுதந்திரமாக, தண்டிப்புகள் எதுவும் இன்றி செயற்பட்டு வருவது இலங்கையில் அரசியல், ஆட்சியாளர்கள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அரசியல் அவதானிகள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg