Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

In ஆன்மீகம்
Updated: 16:30 GMT, May 2, 2018 | Published: 16:30 GMT, May 2, 2018 |
0 Comments
1097
This post was written by : Vithushagan

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்கதும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் தொன்மைமிகு ஆலயமாகவும் கருதப்படும் வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிசேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா இன்று (புதன்கிழமை) காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வயலும் நீர் நிலைகளும் குடிமனைகளும் சூழ்ந்து இயற்கை வனப்புமிக்க பகுதியில் எழுந்தருளியுள்ள வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகின.

காலம் காலமாக தமிழர்களின் பண்பாடுகளையும் பழமையினையும் பேணிவந்த இந்த ஆலயம், கடந்த 1949ஆம் ஆண்டுக்கு பின்னர் குடமுழுக்கு காணும் வாய்ப்பினை இந்த ஆண்டே பெற்றுள்ளது.

ஏழூர் குடிகளைக்கொண்டு மட்டக்களப்பின் வழமையினை பேணிவரும் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமையும் நேற்று முன்தினம் புதன்கிழமையும் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கும்பாபிசேக நிகழ்வுகளில் இன்று காலை விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், துவஜாபூஜை, பஞ்சாக்னிகோமம், விசேட மஹாபூர்ணாகுதியாக விசேட தீபாராதனைகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு தேவ சுகமூகூர்த்ததில் நாதகீதாஞ்சலி ஒலிக்க மேளதாளம் முழங்க அரோகரா கோசத்துடன் பிரதான தூபி உட்பட பரிபாலன ஆலய தூபிகள் அபிசேகம் செய்யப்பட்டது.

தூபி கும்பாபிசேகத்தினை தொடர்ந்து பிரதான கும்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகி முத்துமாரியம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அம்பாளின் தசமங்கள தரிசனம் நடைபெற்றதுடன் எஜமான் அபிசேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

இன்றைய இந்த மஹா கும்பாபிஷேக நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமாளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg