Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குற்றவாளிகள் தப்பிக்கும் கலாசாரம் மாற்றமடையவேண்டும்

In இன்றைய பார்வை
Updated: 04:18 GMT, May 11, 2018 | Published: 04:18 GMT, May 11, 2018 |
0 Comments
1098
This post was written by : Arun Arokianathan

இலங்கையின் நீதித்துறையில் புரையோடிப்போயிருக்கும் பிரச்சனைகளை அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பாரர்ளுமன்றத்தில் காத்திரமான வகையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

குற்றவியல் வழக்குகளில் நீதி தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர் என்பது அவரது கருத்துக்களின் சாராம்சமாக அமைந்திருந்தது

நாடாளுமன்றத்தில் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

“அதிகாரத்தில் இருப்பவர்கள் முக்கியமாக அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் உரியநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆட்சிமாற்றமொன்று ஏற்படும்வரை அவ்வாறானவர்களுக்கு எதிரான வழக்குகள் இழுத்தடிக்கப்படும். அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த நடவடிக்கைகள் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படும். ஊழல், மோசடிகள் உயர்ந்த மட்டத்தில் ஈடுபடுவதற்கு இதுவே பிரதான காரணமாகும்.

முக்கியமான அரசியல் புள்ளிகள் தொடர்புபட்ட குற்றச்செயல்கள் பற்றிய விசாரணைகளை நடத்திமுடிப்பதற்கு ஐந்து வருட நாடாளுமன்றக் காலம் போதுமானதாக இல்லை. ஆட்சிமாற்றங்களின் பின்னர் மோசடிக்காரர்கள் நிரந்தரமாகத் தப்பிச்செல்லும் வரலாறும் காணப்படுகின்றது.ஊழல், மோசடிகள் தொடர்பான விடயத்தில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. துரதிர்ஷ்டவசமாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மூன்று மாதங்களில் ஒரு வழக்கில் மாத்திரமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த வழக்கும் தற்போது மேன்முறையீட்டுக்கு உட்பட்டுள்ளது.

பொதுவான சட்ட அடிப்படையின்கீழ் இரண்டு மேன்முறையீடுகளுக்கு அதாவது, மேலும் ஒரு தசாப்தத்துக்கு வழக்கை இழுத்துச்செல்ல முடியும்.துரிதமான விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் தயாரிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் வழக்குகள் காலதாமதமாக இடம்பெறுவதைக் காணமுடிகின்றது.

இருபது வருடங்கள் வழக்கு இழுபட்டுச் செல்லும் நிலைமையும் உள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்த வழக்கைக் கூறமுடியும். 17 வருடங்களின் பின்னரே இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இந்து மதகுரு ஒருவரும், அவருடைய பாரியாரும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.இதில் மதகுருவுக்கு 17 வருடங்களின் பின்னர் தண்டனை வழங்கப்பட, அவருடைய மனைவி 17 வருடங்களின் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதுவரை அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் மனோநிலை பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். இது சட்டத்துறையில் காணப்படும் காலதாமதத்துக்கு சிறந்த உதாரணமாகும்” என அவர் சுட்டிக்காட்டிய விடயங்களை யாரும் தட்டிக்கழிக்க முடியாது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் காலத்திற்கு மிகவும் அவசியமான நீதித்துறை திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் 67 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திருத்தச் சட்டம் அண்மைக் காலத்தில் சகலராலும் பேசப்படுகின்ற ஒரு விடயமாகவே காணப்பட்டது. அதுவும் எதிர்த்தரப்பினர்களில் ஒரு பிரிவினருக்கு இது கிலியை ஏற்படுத்தும் ஒரு விவகாரமாகவே உள்ளதை அவர்களின் வாதங்கள் வெளிக்காட்டி நின்றன. அரசியல் பழிவாங்கல் நோக்குடன் கூடியதாக இந்தத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

உண்ட நஞ்சுக்குத்தான் பயப்பட வேண்டும். உண்ணாத நஞ்சு குறித்து ஏன் அஞ்ச வேண்டும் அல்லது அலட்டிக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி இங்கே எழுகிறது.

2015இல் நல்லாட்சி அரசு பதவிக்கு வரும்போது நாட்டு மக்களுக்கு அளிந்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டே விசேட நீதிமன்றங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருக்கும், நீதியமைச்சர் தலதா அத்துகோரள அரசின் இந்த நடவடிக்கை எவர் மீதும் பழிவாங்கும் நோக்கத்துடன் கூடியதல்லவெனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில் ஒன்றிணைந்த எதிரணியினர் எப்படியேனும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதலில் கொண்டுவரப்பட்ட திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றம் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியதையடுத்து அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் எந்தவொரு தரப்பையோ, நபரையோ இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டதல்ல. நீண்டகாலத் தேவையாகக் காணப்பட்ட சட்டமூலமே கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணத்தை, பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களை கட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிப்பது கட்டாயமானதாகவே நோக்கவேண்டியுள்ளது. இதனைச் செய்ய வேண்டிய கடப்பாடு அரசுக்குரியதாகும். இதில் எவர் விடயத்திலும் பாரபட்சம் காட்டப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற போதிலும் அவை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் நீண்ட கால தாமதம் காணப்படுகின்றது. இது மக்களுக்களித்த வாக்குறுதிகள் மீறப்படுவது போன்ற பார்வையையே காட்டுகின்றது. மோசடிகளில் தொடர்புபட்ட அரசியல்வாதிகள் தப்பித்துக் கொள்வதற்கு இந்தக் காலதாமதம் வகை செய்வதாகவே உணர முடிகிறது. கடந்த காலத்தைப் போன்று நல்லாட்சியிலும் தாமதத்துக்கு இடமளித்தால் மக்கள் நம்பிக்கையிழக்கும் நிலையே உருவாகலாம்.

உயர்நீதிமன்றங்களில் நாளாந்தம் வழக்குகள் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வழக்குகள் குவிந்து காணப்படுவதால் ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் நீண்ட கால தாமதம் ஏற்படுவதன் காரணமாகவே விசேட நிதிமன்றங்கள் மூன்றை அமைக்க நீதியமைச்சு முடிவெடுத்தது. இதில் எந்தவிதமான உள்நோக்கங்களும் கிடையாது. பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுப்பதே நோக்கமென அரசு தெரிவித்திருக்கின்றது. இதனை பெரும் தவறாகக் கருத முடியாது.

நல்லாட்சி அரசு பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் முடிந்த நிலையிலும் ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. அரசாங்கத்தினால் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகவே மக்கள் கருதுகின்றனர். அரசு குற்றவாளிகளை பாதுகாக்கின்றதா என்ற மனநிலையும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

ஊழல் மோசடியை நிறுத்துவதற்கு சட்டரீதியான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு சிவில் சமூகங்கள் உட்பட புத்திஜீவிகள் பலதடவைகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பிரதிபலனாகவே ஊழல் மோசடிகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றங்களை அமைக்க அரசு திட்டம் வகுத்து இதன் பொருட்டே நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. உண்மையிலேயே வழக்குகள் தேங்குவதை முடிவுக்குக் கொண்டுவர இத்திருத்தச்சட்டம் வழிவகுக்கும். ஆரம்பத்தில் மூன்று நீதிமன்றங்களை மட்டுமே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசேட நீதிமன்றங்கள் விடயத்தில் மட்டுமல்ல சாதாரணமாக உள்ள நீதிமன்றங்கள் விடயத்தில் கூட குற்றமிழைத்தோர் தப்பிப்பதற்கு வழிதேடிக் கொண்டிருப்பதையே நோக்க வேண்டியுள்ளது. ஊழல் மோசடிகளில் தொடர்புபட்டவர்கள் இருப்பினும் அவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.’பெரிய திமிங்கிலங்கள் தப்புகின்றன. நெத்தலிகள் மட்டுமே வலையில் சிக்கி மாய்கின்றன. இந்தநிலை மாற வேண்டும்’ என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரசு இப்போது எடுத்திருக்கும் முடிவு சரியானதே என்பதை மறுக்க முடியாது. ஊழல், மோசடிக்காரர்கள் இனியும் தப்புவதற்கு இடமளிக்கப்படக் கூடாது. விரைவான நடவடிக்கைகள் மூலம் குற்றவாளிகளுக்கு உச்சபட்சத் தண்டனை வழங்கப்பட வேண்டும். நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு இந்தப் புதிய திருத்தச் சட்டமூலம் வழிவகுக்கும் என நம்பலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg