Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரக்கமின்றி கொல்லப்பட்ட இசைப்பிரியா – புதைக்கப்பட்ட தமிழினம் : ரணமாகப் பதிந்த பொழுதுகள்…

In இலங்கை
Updated: 12:02 GMT, May 18, 2018 | Published: 11:35 GMT, May 18, 2018 |
0 Comments
1303
This post was written by : Puvanes

மனிதம் மரித்துப் போனதன் மர்மம் இன்றும் விளங்கவில்லை. உயிர்கள் எல்லாம் துச்சமாக நோக்கப்படும் வேடிக்கைகள் இன்றும் கூட நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. காலங்கள் வேகமாகக் கடந்து சென்றாலும் மாறாத ரணங்கள் என மக்களை உலுக்கிப் போட்ட சம்பவங்கள் என்றுமே மறைந்து போகாது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் இன்னல்களும், இடிகளும் இன்று நினைத்தாலும் இருதயத்தை நடுங்க வைக்கும், இரத்தத்தை உறைய வைக்கும் கொடூர சம்பவங்கள் என்னும் தடயத்தைப் பதித்து விட்டது.

எறும்புக் கூட்டத்தை நசுக்குவது போல கணக்கற்ற மனித உயிர்கள் காரணமின்றி நசித்துக் கொல்லப்பட்ட கொடுமைகள் கேட்பார் யாருமின்றி நிகழ்ந்தது.

உயிர் இழந்தவர்களின் சொந்த பந்தங்களின் கதறலும், குண்டுக் காயங்கள் ஏற்பட்ட வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் எழுப்பிய ஓலங்களும், வெடிச் சத்தமும் காற்றுடன் கலந்து வந்து உயிரை உலுக்கிப் போட்ட பொழுதுகள் அன்று அரங்கேறியது.

குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணித்தாய்மார், ஊனமுற்றவர்கள் என்று எந்த கருணையும் தமிழ் மக்களுக்கு அன்று காட்டப் படவில்லையே. இராட்சத கோலத்தில் மரண தேவதை தலை விரித்து ஆடியதும் ஏனோ? ஊழிக் காலத்துப் பிரளயம் போல தமிழ் மக்கள் உருக் குலைந்து போனதால் என்ன பயன் விளைந்து விட்டது?

இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளைத் தமிழீழம் என்ற பெயருடன் தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1983 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் போராட்டங்கள் இடம்பெற்றன. இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோரிக்கையினை மையமாகக் கொண்டு போர்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகத் தொடங்கின. 2008 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும், 2009 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலும் ஈழத்தில் இடம்பெற்ற இனப் போரில் கடும் நிலைமை உருவாகத் தொடங்கி இருந்தது.

அதன் விளைவாக விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் கடும் போர் மூண்டது. இந்த இரு தரப்பினருக்கும் இடையில் சிக்கிச் சின்னாபின்னமாகிப் போனார்கள் அப்பாவித் தமிழ் மக்கள். ஏறத்தாழ 300, 000 பொது மக்கள் அகப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போரின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை கொடுமையிலும் கொடுமை. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் தம்மால் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததை அடுத்தே போர் முடிவுக்கு வந்தது. புலிகளின் ஆயுதங்களும் மௌனிக்கப்பட்டது. அதற்குள் முள்ளிவாய்க்காலில் முடங்கிப் போன உயிர்களின் எண்ணிக்கை ஏராளம்.

போர் முடிவில் 40,000 பொது மக்கள் உயிர் இழந்ததாகவும், அவர்களில் அதிகமானவர்கள் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாடற்ற ஏவுகணைத் தாக்குதலினால் இறந்ததாகவும் ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோரமான முறையில் தமிழ் மக்கள் மடிந்த நாட்கள் இனி மறந்து போகுமா? அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தார்கள். குருதியில் குளித்து குற்றுயிராய்க் கிடைக்கத் தான் பிறந்தார்களா? இவை மட்டுமா அன்று நடந்தது யுத்த காலப் பொழுதிலே வடக்குப் பகுதியிலே பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகளும் நிகழ்ந்தது என்பது கண்ணீர்க் காவியம்.

அது மட்டுமல்லாமல் ஊடகவியலாளரும் கலைஞருமான இசைப்பிரியா இராணுவத்தினால் இரக்கமின்றி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது மிகவும் மோசமான கொடூரம். போரில் மாண்டவர்கள் போக எஞ்சியவர்கள் எந்த விதம் தம்மைக் காத்துக் கொண்டு தப்பி உயிரை மீட்டார்களோ தெரியவில்லை.

முள்ளிவாய்க்காலில் புதையுண்டு போன தமிழ் உயிர்களுக்காக ஒவ்வொரு ஆண்டிலும் மே 18 ஆம் திகதி அஞ்சலி செலுத்தப் பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் முன்னர் பொது இடங்களில் அதற்குத் தடை விதித்து இருந்தமையும் கூட சுட்டிக்காட்டப்படத்தக்கது.

போரில் காயம் அடைந்து ஊனம் அடைந்தவர்களும் ஏராளமாகக் காணப் படுகின்றமை மற்றுமோர் வேதனையான விடயம். அவர்களின் அன்றாட வாழ்வில் பாரிய இன்னல்களை எதிர் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவர்களுக்கு மாறாத வடுக்களை ஏற்படுத்தி விட்டது. விடுதலைப் புலிகள், இலங்கைப் படையினர், பொதுமக்கள் என்று அளவற்று மாண்டு போனார்கள். படையினரும் , விடுதலைப் புலியினரும் போரில் போராடி இறந்தனர். பொது மக்கள் உயிருக்காகப் போராடி இறந்தனர்.

தம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் பதுங்கு குழிகளில் பதுங்கிய ஏராளமான மக்கள் ஏவுகணைத் தாக்குதல்களால் இருந்த இடம் கூடத் தெரியாமல் மண்ணோடு மண்ணாகப் புதைந்த கொடுமைகள்…. குண்டுத் தாக்குதல்களால் கை, கால்கள் பிய்ந்து தொங்க உயிரைக் காப்பாற்ற ஓட முடியாமல் புழுதி மண்ணில் புரண்டு அரற்றியவர்களின் மீது மீண்டும் தாக்குதல்கள் நிகழ்ந்த கொடுமைகள் ஏவுகணைகள் ஏராளமாக ஏவப்பட்ட போது அதில் இருந்து தப்பிக்க நாலாபக்கமும் மக்கள் சிதறி ஓடியதில் சொந்தங்களைத் தவற விட்டுத் திக்குத் தெரியாமல் குழந்தைகள்…

கதறிய கொடுமைகள் கண்ணுக்கு முன்னாலேயே தாய், தந்தை, சகோதரர்கள் இறந்து விழ அவர்களைத் தாண்டிக் கொண்டு ஓடிய உறவுகளின் பயம் தோய்ந்த முகங்கள் விளைவித்த கொடுமைகள் இரத்த வெள்ளத்தில் கிடந்த உடல்களையும், தலை வேறாக உடல் வேறாக கிடந்த உடல்களையும் கண்டு பீதியில் மக்கள் கத்திய கொடுமைகள் எங்கு பார்த்தாலும் கொடுமைகள் கொடுமைகள் தான் அன்று தலை விரித்து ஆடியது. அந்தக் கொடுமைகள் இன்னும் தமிழ் மக்கள் மனதில் இருந்து மறையவில்லை.

மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் முடிந்து போன யுத்தத்தில் உயிர் பிரிந்த மக்களுக்காக நினைவு கூர்ந்து வருகின்ற நாளாக மாறி விட்டது.

தமிழீழத்தில் உயிர் இழந்த மக்களுக்காகவும், தமிழீழத்திற்காக உயிரை விட்ட போராளிகளுக்காகவும் தியாகிகளுக்காகவும் அவர்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது அமைக்கப்பட்டது. இந்த நினைவு முற்றம் இந்தியாவில் தஞ்சையில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் நாடுகளிலும் இன்றும் முள்ளிவாய்க்கால் தினம் நினைவு கூரப் படுகிறது. இலங்கையின் வரலாற்றில் அப்பாவித் தனமான தமிழ் மக்களின் கண்ணீராலும் , குருதியாலும் யுத்த வரலாறு எழுதப்பட்டு விட்டது. அது அழிக்க முடியாத ரணமாகி விட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)