Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவம் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்: கிளி.யில் பிரதமர் உறுதி

In இலங்கை
Updated: 08:31 GMT, May 28, 2018 | Published: 08:31 GMT, May 28, 2018 |
0 Comments
1477
This post was written by : Yuganthini

கிளிநொச்சி பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க  நடவடிக்கை எடுக்கப்படுமென  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய  போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இராணுவம் வசமிருந்த  90 ஏக்கர் காணிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள காணிகளும் விரைவில் விடுவிக்கப்படுமென பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை பூநகரி, சுற்றுலாத்துறைக்கு பொருத்தமான பகுதியென்பதால் இங்கு நகரத்திட்டமிடல் ஒன்றை முன்னெடுப்பதற்கும், அங்கு குளமொன்றை அமைப்பதற்கும், அப்பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும் திட்டவரைபொன்றை முன்வைக்குமாறு  வடக்கு மாகாண சபையை கோரியுள்ளார்.

அத்துடன், கிளிநொச்சி சந்தை கட்டட தொகுதி, சிறு குளங்களின் அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்ட குறைபாடுகளை கேட்டறிந்தார் பிரதமர் ரணில்!

வடக்கு  மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கிளிநொச்சி மாவட்ட மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கிளிநொச்சி மாவட்ட மீளாய்வுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் குறைபாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக,  காணி, வீட்டுத்திட்டம், கல்வி, விளையாட்டு, நகர அபிவிருத்தி, சிறுகுளங்கள் உள்ளிட்ட விடயங்களில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் அரசாங்க அதிபர் இதன்போது விளக்கமளித்தார்.

இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை கிளிநொச்சி, கரடிப்போக்கு சந்தியிலுள்ள விஹாரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழிபாடுகளையும் மேற்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg