Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல

In இலங்கை
Updated: 11:31 GMT, Jun 19, 2018 | Published: 11:31 GMT, Jun 19, 2018 |
0 Comments
1075
This post was written by : Risha

சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்டால் டொலரின் பெறுமதி 200 ரூபாயாக அதிகரித்து இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடையும் என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, சட்டவிரோதமான இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டின் பொருளாதாரம் தற்போது பாரிய வீழ்ச்சிப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

மஹிந்த காலத்தில் 10 வருடங்களுக்கே டொலரின் பெறுமதி 26 ரூபாவாகத்தான் உயர்வடைந்திருந்தது. 2015ஆம் ஆண்டு நாம் ஆட்சியை இந்த அரசாங்கத்துக்கு ஒப்படைக்கும்போதுக்கூட 131 ரூபாயாக இருந்த டொலரின் பெறுமதி, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களில் 161 ரூபாவை கடந்துவிட்டது.

இந்த மூன்று வருடங்களில் 31 ரூபாவாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமை நாட்டு மக்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள், எரிவாயுகள், விவசாய உரங்கள், வாகனங்கள் என அனைத்துக்குமான விலை நாட்டில் கனிசமாக அதிகரித்துவிட்டது. இதனால், முதலீட்டாளர்களும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அஞ்சுகிறார்கள்.

நாட்டில் நிலவும் இந்த பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஒருங்கிணைந்த எதிரணியே தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தது. இந்த அரசாங்கத்துக்கு இதனை சீர்செய்வது என்பது இனிமேல் இயலாத காரியமாகும்.

அரசாங்கம் எனும் வகையில், இவர்களுக்குள் ஒற்றுமை இல்லாது போய்விட்டது. அமைச்சரவைக்கு ஒருவரால் கொண்டுவரப்பட்டத் தீர்மானத்தை இன்னொருவர் தெரியாது என கூறுகிறார். இதுதான் அரசாங்கத்தின் தற்போதைய நிலைமையாகும்.

இந்நிலையில், சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையில், இந்த உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடுமாக இருந்தால் நிச்சயமாக டொலரின் பெறுமதி 200 ரூபாவாக அதிகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பழங்கள், நெல், அரிசி, பால்மா உள்ளிட்ட பொருட்களை இந்த உடன்படிக்கைக்கு இணங்க வரியின்றி இறக்குமதி செய்தால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கோ அமைச்சரவைக்கோ தெளிவில்லாத காரணத்தினால் தான் இவ்வாறான ஒரு உடன்படிக்கையை கைச்சாத்திட அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

இதனால், நாட்டுக்கு இலாபம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டும் உரிய அறிக்கைகள் கூட இல்லை என்பதே உண்மையாகும்.
இந்த யதார்த்தத்தைக்கூட புரிந்துக்கொள்ளாமல் இவ்வாறான ஒரு உடன்படிக்கையை அரசாங்கம் கைச்சாத்திடுவது நாட்டு மக்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg