Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்று முடிவுகள்!

In விளையாட்டு
Updated: 12:14 GMT, Jul 10, 2018 | Published: 12:14 GMT, Jul 10, 2018 |
0 Comments
1036
This post was written by : Vithushagan

டென்னிஸ் உலகில் 141 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதும் கௌரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், தற்போது லண்டனில் நடைபெற்று வருகின்றது.

புற்தரையில் மைதானங்களில் நடத்தப்படும், வரலாற்று சிறப்புமிக்க இந்த தொடரில், பங்கேற்பதையும் பட்டம் வெல்வதையும் தங்களின் வாழ்நாள் கனவாக, சாதனையாக, டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் கொண்டுள்ளனர்.

இந்த தொடர் டென்னிஸ் வீரர்களுக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்த தொடரோ, அதே அளவுக்கு இந்த தொடர் இரசிகர்களை மகிழ்விக்கும் தொடராக அமைந்துள்ளது. ஆகவே உலக அளவில் இரசிகர்கள் இந்த போட்டிகளை காண படையெடுத்த வண்ணமுள்ளனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ரோஜர் பெடரர், வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நான்காவது சுற்று போட்டியில், பிரான்ஸின் அட்ரியன் மன்னாரினோவை எதிர்கொண்ட பெடரர், முதல் செட்டை, 6-0 என இலகுவாக கைப்பற்றினார்.

இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், பெடரருக்கு மன்னாரினோ, கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனாலும், தனது அனுபவத்தை கொண்டு சிறப்பாக விளையாடிய பெடரர், இரண்டாவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டிலும் தனது ஆக்ரோஷத்தை தொடர்ந்த பெடரர், மூன்றாவது செட்டை 6-4 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டியில், ரோஜர் பெடரர், தென்னாபிரிக்க அணியின் கெவீன் ஆண்டசனை எதிர்கொள்ளவுள்ளார்.

மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று போட்டியில், ஸ்பெயின் முன்னணி வீரரான ரபேல் நடால், இலகுவான வெற்றியை பதிவுசெய்து காலிறுதிக்கு தகுதிபெற்றார். நான்காவது சுற்று போட்டியில், ரபேல் நடால், செக்குடியரசின் ஜிரீ வெசலியுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இப்போட்டியில் எவ்வித அழுத்தமும் இல்லாமல் சிறப்பாக விளையாடிய ரபேல் நடால், 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்னொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிக், வெற்றிபெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

நோவக் ஜோகோவிக், நான்காவது சுற்று போட்டியில், ரஷ்யாவின் இளம் வீரரான கரேன் கச்சனோவ்வை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில், நோவக் ஜோகோவிக், 6-4 என முதல் செட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டிலாவது கச்சனோவ், ஜோகோவிக்கு சற்று நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கிய ஜோகோவிக், அபாரமாக விளையாடி அடுத்த இரண்டு செட்டுகளையும் 6-2, 6-2 என எளிதாக வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதி போட்டியில், நோவக் ஜோகோவிக், ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்கொள்ளவுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று போட்டியில், அமெரிக்காவின் ஜோன் இஸ்னர், கிரேக்கத்தின் ஸ்டீபானோஸ் சிட்டிஸ்பாசை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முதல் செட்டில் ஜோன் இஸ்னர், 6-4 என முதல் செட்டை கைப்பற்றினார்.

இதனைதொடர்ந்து, நடைபெற்ற இரண்டு செட்டுகளிலுமே ஜோன் இஸ்னருக்கு ஸ்டீபானோஸ் சிட்டிஸ்பாஸ், கடும் நெருக்கடி கொடுத்தார்.

இதனை மெய்ப்பிக்கும் வகையில், அடுத்த இரண்டு செட்டுகளுமே டை பிரேக் வரை நீடித்தது. எனினும், நெருக்கடிகளை திறம்பட சமாளித்த ஜோன் இஸ்னர், 7-6, 7-6 என அடுத்த இரண்டு செட்டுகளையும் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதி போட்டியில், அவர், கனடாவின் மிலோஸ் ராயோனிக்கை எதிர்த்து விளையாடவுள்ளார்.

இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று போட்டியில், செக்குடியரசின் கரோலினா பிளீஸ்கோவா, அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இப்போட்டியில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை எதிர்கொண்ட கரோலினா பிளீஸ்கோவா, முதல் செட்டை 3-6 என இழந்தார்.

இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், வெற்றிபெற்றே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் களமிறங்கிய கரோலினா பிளீஸ்கோவா, கிகி பெர்டென்சுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

டை பிரேக் வரை நீடித்த இந்த இரண்டாவது செட்டில், 6-7 என, கிகி பெர்டென்சிடம், கரோலினா பிளீஸ்கோவா வீழ்ந்தார்.

இந்த தோல்வியுடன் கரோலினா பிளீஸ்கோவா ஏமாற்றத்துடன் தொடரிலிருந்து வெளியேற, மறுபுறம் மகிழ்ச்சியுடன் கிகி பெர்டென்ஸ் காலிறுதிக்குள் நுழைந்தார். அவர் காலிறுதி போட்டியில், ஜேர்மனியின் ஜூலியா கோர்கசை எதிர்கொள்கிறார்.

மற்றொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று போட்டியில், அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நான்காவது சுற்று போட்டியில், செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவின் எவ்கேனியா ரோடினாவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் தனது கடந்த கால ஆக்ரோஷத்தை இரசிகர்கள் முன்னிலையில் நிறுத்திய செரீனா, ரோடினாவை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

செரினா வில்லியம்ஸ், காலிறுதி போட்டியில், இத்தாலியின் கமீலா ஜியோர்ஜியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)