வர்த்தகப் போரை உருவாக்குமா அமெரிக்காவின் நடவடிக்கை? – நோர்வே கவலை
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ளமையானது, வர்த்தகப் போரை உருவாக்க வழிவகுக்குமென நோர்வே குறிப்பிட்டுள்ளது.
நோர்வேயின் தொழிற்துறை மற்றும் வணிகத்துறை என்பன இதுகுறித்து அதிக கரிசனை வெளியிட்டுள்ளதோடு, இது வர்த்தக ரீதியான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யுமென கவலை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான, அமெரிக்காவின் வரிவிதிப்பு கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வந்தது. அத்தோடு, 34 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீன இறக்குமதி பொருட்களுக்கு 25 வீத வரிவீதமும் கடந்த 6ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இச்செயற்பாடு தொடர்பில் ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், நோர்வேயின் வர்த்தகத் துறையும் இவ்விடயம் தொடர்பாக குரலெழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சந்தையில் மாத்திரமன்றி பொருட்களின் மதிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்துமென நோர்வே சர்வதேச நிறுவன கூட்டமைப்பின் பணிப்பாளர் Tore Myhre குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவின் இந்நடவடிக்கை தொடருமாயின் ஐரோப்பிய நாடுகள் தக்க பதிலை வழங்குமென அண்மையில் பிரான்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.