Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

141 Views

தீதிலும் நன்மை கண்டோம்..

அனைவருக்கும் வணக்கம்,

இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் தைப் பொங்கல் திருநாளில் ஆதவனின் அடுத்த பரிமாணம் ஒன்று உருவாகுகிறது. இது ஆதவனின் உறவுகளுக்கு நிச்சயமாக மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

ஐந்தாவது ஆண்டில் ஆதவன் காலடி எடுத்து வைக்கும் காலம் நெருங்குகையில், ஆதவனின் கதிர் வீச்சுக்களை இன்னும் பலமாக – ஆழமாக ஆதவனின் உறவுகளுக்கு வழங்க வேண்டும் என்ற வேட்கையின் வெளிப்பாடே இந்த முயற்சி!

கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களின் நலன்சார்ந்து உண்மை பிறழ்வற்ற செய்திகளை வழங்கிவந்த ஆதவனின் செய்தி இணையத்தளத்தில் ஞாயிறு தோறும் புதிய பகுதி ஒன்று இணைந்து கொள்கின்றது.

சிந்திக்க – சிரிக்க – சுவைக்க பல்வேறு அமசங்களை தாங்கிய ஜனரஞ்சக பகுதியாய் இது அமையும். வெறுமனே செய்திகளை சொல்வதோடு மட்டுமன்றி, சம்பவங்களின் பின்னணிகளையும் அவற்றினால் சாதாரண மக்களுக்கு ஏற்படக் கூடிய சாதக பாதகங்களையும் மக்கள் நலன்சார்ந்து நின்று ஆராய்கின்ற – சிந்திக்கின்ற கட்டுரைகள் இதில் முதன்மை இடம்பிடிக்கும்.

அண்மைக்காலமாக ஊடக பரப்பில் ‘கொப்பி பேஸ்ட்’ கலாச்சாரம் தலைதூக்கி விட்டது என்ற சான்றோரின் ஆதங்கங்களுக்கு இப்பகுதி முற்றுப்புள்ளி வைக்கும். ஆதவனினால் உருவாக்கப்டுகின்ற – ஆதவனுக்காக உருவாக்கப்பட்ட விடயங்கள் மட்டுமே இங்கே விருந்தளிக்கும்.

இது ஆரம்பம் மட்டுமே! அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் ஆதவனின் உறவுகளை சிந்திக்க – சிரிக்க – சுவைக்க வைக்க பல்லேறு திட்டங்கள் கைவசம் தயாராக இருக்கின்றது. உறவுகளின் தர்க்க ரீதியான கருத்துக்களுக்கும் ஆக்கபூர்வமான கருத்தாடல்களுக்கும் களம் அமைக்கின்ற திட்டங்களும் அவற்றில் அடங்கும்!

இவ்வாறான முயற்சிகளுக்கு ஆதவனின் உறவுகள் வழங்குகின்ற உற்சாக வரவேற்புக்களும் விமர்சனங்களும், உரிமையுடன் தட்டிக் கேட்கின்ற பாங்குமே வலுச்சேர்த்துக் கொண்டிருக்கின்றன. அது தொடரும் என்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புக்களோடும் தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு விடயத்திற்குள் நுழைகின்றேன்.

இலங்கை அரசியலில் பரபரப்புமிக்க வாரங்களில் ஒன்றாக கடந்த வாரம் அமைந்திருந்தது. பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதில் இருந்து இந்த பரபரப்பு மையம் கொண்டது.

அண்மைக்காலமாக, ஜனாதிபதியினால் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்களும் பரபரப்பிற்கு வலுச்சேர்த்தன. ஒருவாறு, யாருடைய தலைகள் உருளப் போகின்றனவோ – யாருடைய அரசியக்கு சாவுமணி அடிக்கப்படப் போகின்றதோ – தேசிய அரசியல் அரசியல் ஆட்டங்காணப் போகின்றதோ?  என்ற பல்வேறு கேள்விகளுக்கு ஒருளவு தற்போது பதில் கிடைத்திருக்கின்றது.

விசாரணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்த முக்கிய விடயங்களை ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன வெளிப்படுத்தியுள்ளதுடன் அவற்றை மேலதிக குற்றவியல் நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய வங்கிக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அதாவது, பாரிய பகல் கொள்ளை ஒன்று நாட்டில் இடம்பெற்றுள்ளது என்பதும் அது மக்களை பொருளாதார ரீதியில் நசுக்குகின்றது என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எவ்வாறு சட்ட நடிவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பதை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, இவ்வாறன கொள்ளைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும் வகையில் மத்திய வங்கியின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் இறுக்கமாக்கும் பொறுப்பு மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையை ஈடும் செய்யும் வகையில் பிணைமுறி மூலம் சர்தேச – உள்ளுர் நிறுவனங்களிடம் பணம் பெறும் நடைமுறை 2007-2008 ஆண்டு காலப்பகுதியிலேயே இலங்கை ஆரம்பித்திருந்தது.

அக்காலப்பகுதியிலிருந்து பல்வேறு தடவைகள் பிணைமுறி கோரப்பட்டு பல்வேறு நிறுவனங்களுக்க வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. இதன்மூலம் பல்லாயிரம் மில்லியன் ரூபாய்கள் பல்வேறு தரப்புக்களினால் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக இப்போது சொல்ல்பபடுகின்றது.

சுமார் 1000 மில்லியன் ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் இத்தொகை இன்னும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக பொருளியல் விற்பன்னர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை போன்ற கீழ் நடுத்தர பொருளாதார நாடுகளுக்கு இத்தொகையானது சாதாரனமானது அல்ல. எனினும், 2015 ஆண்டுவரை இதுதொடர்பில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதற்கு பிணைமுறி தொடர்பான புரிதல் இன்மையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

2015இல் மத்திய வங்கி ஆளுநராக அர்ஜின மகேந்திரன் பொறுப்பேற்றதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி விற்பனையில், அவருடைய மருமகனின் நிறுவனமான பேர்சுவல் நிறுவனத்திற்கு அதிக வட்டி வீதத்திற்கு பிணை முறி வழங்கபட்டமையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

குறித்த விவகாரம் ஜே.வி.பி தரப்பின் கண்களில் குத்த மறுபுறத்தில் கடந்த காலங்களில் பிணைமுறியுடன் சம்பந்தப்பட்ட ஒருதரப்பினர் தற்போது எதிர்தரப்பில் இருப்பதால் அவர்களுக்கு இந்த உள்விளையாட்டுக்கள் தெரிந்திருந்தது. பிரச்சினை விஷ்வரூபம் எடுத்தது.

நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பத்தில் அசால்டாக இருந்தாலும் பிரச்சினை எல்லைமீறி சென்றதால் நடிவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பபந்தத்திற்கு தள்ளப்பட்டது. பிரதமரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, கோப் குழு, ஜனாதிபதி விசாரணைக்குழு என விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போதைய நிலையை எட்டியுள்ளது.

கொள்ளையிடப்பட்ட அனைத்து பணமும் மீளப்பெறப்படுமென ஜனாதிபதி அடித்து கூறியிருக்கின்றார். பாரிய மோசடி தொடர்பில் கண்டுபிடித்து மக்களுக்கு நல்லது செய்திருப்பதுபோன்ற – நீதியை நிலைநாட்டியிருப்பதுபோன்ற தோரணையில் அரசாங்க தரப்பின் செயதிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டு அதனை பணத்தை கொடுத்தால் அன்றி,  நீதிமன்ற பொறிமுறை ஊடாக ஜனாதிபதி கூறுவதுபோன்று பணத்தை மீளப்பெறுவது என்பது தற்போதைக்கு சாத்தியமானது அல்ல.

பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய விடயம் அது. அதற்குள் எதுவும் நடக்கலாம். கிடைத்தால் மகிழ்ச்சி என்றளவிலேயே நிலமை இருக்கின்றது. ஆனால் இந்த தகிடுதங்களினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சுமை அகற்றபடமுடியாது என்பதே வேதனையான விடயம்.

ஏவ்வாறாயினும் இந்த விவகாரம் இந்த அளவுடன் வெளிப்பட்டிருப்பது. இலங்கை மக்கள் செய்த பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு வெளிப்பட்டமையினால் எதிர்காலத்தில் அனைத்து தரப்பினரும் இவ்வாறான விடயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

பகல் கொள்ளையர்களுக்கும் ஒரு தயக்கம் இருக்கும். பிணைமுறி விவகாரத்தை எடுத்துக்கொண்டால் கூட மத்திய வங்கிக்கு பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பலவற்றை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக மத்திய வங்கியும் அறிவித்துள்ளது.

இது எதிர்காலத்தில் தவறுகள் தடுக்கபடும் என்ற நம்பிக்கையை மக்களுக்கும் சர்வதேச முதலிட்டாலளர்களுக்கும் ஏற்படுத்தும். அது நன்மை பயக்கும்.

ஆக மொத்தத்தில் பிணைமுறி விவகாரத்தில் தீதிலும் ஒரு நன்மை நடந்திருக்கிறது.

மீண்டுமொரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி.