Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

437 Views

என்ன நடக்கிறது..! தலையே வெடிக்கிறது..!

அன்பானவர்களுக்கு வணக்கம்!

தமிழ் மக்கள் ஒரு குடையின்கீழ் அணிதிரண்டு நிற்க வேண்டிய காலச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

தமிழ் மக்கள் தங்களுடைய அபிலாசைகளை அடைந்துகொள்ள இருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களும் இழக்கப்பட்ட நிலையில், இறுதி வாய்ப்பாக பிராந்திய – பூகோள அரசியலை பயன்படுத்தி கௌரவமான நிலையை எட்டிவிட வேண்டிய நிலையில்தான் தற்போது தமிழ் இனம் இருக்கிறது. இந்தச் சூழலும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தமிழ் மக்களுக்கு சாதமாக இருக்கும் என்பதற்கு உறுதியான வரையறை எதுவும் கிடையாது.

எனவே, அபிலாசைகளுக்காக அவசரமாக ஒரு குடையின்கீழ் அணி திரண்டு நிற்க வேண்டிய தமிழ் மக்கள், குடை பிடிக்க ஒரு வலுவான தலைமை இல்லாமல் தவித்து நிற்கின்றனர்.

தமிழ் இனத்தின் தறிகெட்ட இந்நிலையை பார்த்து தென்னிலங்கையும் சர்வதேசமும் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டிருக்கின்றன.

2009 இற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு தலைமை வகிக்க வேண்டிய பொறுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைகளிலே காலம் திணித்திருந்தது.

அதுவரை காலமும் திரைக்குப் பின்னால் தமது குசும்புகளை காட்டிக் கொண்டிருந்த கூட்டமைப்பின் தலைமைகள், 2009 இற்குப் பின்னர் சந்தியில் நின்று சுயத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.

கூட்டமைப்பிற்குள் சரியான கொள்கை இல்லை -தரமான கட்டமைப்பு இல்லை -பொதுவான பதிவு இல்லை என்று காரணங்களை கூறினார்கள்.

அதில் ஒரு நியாமமும் இருந்தது. ஏனெனில், கூட்டமைப்பு உருவாக்கம் பற்றி தற்போது ஒவ்வொருவரும் பல்வேறு வரலாற்றுக் காரணங்களைக் கூறினாலும், 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து மீள்வதற்கான தேர்தல் தந்திரோபாயமாகவே 2001 ஆம் ஆண்டு கூட்டமைப்பு கருக்கொண்டிருந்தது.

ஆக, தேர்தலுக்காக இணைந்து கொண்டவர்களிடம் பல்லேறு கருத்துக்களும் அடிப்படைக் கொள்கைகளும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகளும் நிச்சயமாக இருக்கும் - அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம். தவறு என்று யாரும் சொல்ல முடியாது.

அவ்வாறான வேற்றுமைகளை சமரசம் செய்துகொள்ளும் -ஒருங்கிணைக்கும் வகையில் தலைமைகள் பொதுநலன் கொண்டு சிந்தித்திருக்க வேண்டும்.

ஆனால், ஒருவர்மீது இன்னொருக்கு இருந்த அச்சம் - சமபந்தி கொடுத்தால் காலி பண்ணிவிடுவார்கள் என்ற அதீத நம்பிக்கை என்பன அனைவரையும் சுயநலன் கொண்டு சிந்திக்க தூண்டியது.

குறிப்பாக தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், தாங்கள் தட்டிக் கொடுத்த தம்மிமாரே தங்களை 'தட்டி' விட்டுபோன கடந்தகால பாதிப்புகள்கூட, வளரவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க காரணமாக இருக்கலாம்.

காரணம் ஏதுவாக இருப்பினும், கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யும் வகையில் காய்களை நகர்த்தவில்லை கரம்கோர்து செல்லவில்லை என்பது வெளிப்படை.

சரி கூட்டமைப்பை விட்டுவிடுவோம். தமிழ் மக்களின் பெரும்பான்மையான பிரநிதித்துவத்தை கொண்டுள்ள தமிழரசுக் கட்சியாவது தமிழ் மக்களை வழிநடத்தும் தனித்துவ குணாம்சங்களை கொண்டுள்ளதா என்று பார்த்தால் அண்மைய செய்திகள் ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே இருக்கின்றன.

மூலக் கிளைகள், பிரதேச தலைமைகள் -செயற்குழு –மத்திய குழு என்று அடிப்படை கட்டுமானங்களுடன் பாரம்பரிய கட்சியாக தமிழரசுக் கட்சி இருப்பதாக கூறப்படுகிறது.  ஆனால்,  அதனுடைய அண்மைய செயற்பாடுகள் அதன் ஆதரவாளர்களின் தலைகளையே வெடிக்க வைக்கின்றன.

சாவகச்சேரியில் வேட்டுமனு தாக்கல் செய்ய சென்ற இடத்தில் நடுத் தெருவில் நின்று பிடுங்குப்படுகின்றார்கள்..

யாழ், மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஆர்னொல்ட் களம் இறங்கப் போகிறார் என்ற தொனியில் கட்சியின் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்து சில மணி நேரங்களில் கட்சியின் செயலாளர், “ஐயோ நாங்கள் அப்படி எல்லாம் தீர்மானிக்கவில்லை” என்று அறிக்கை வெளியிடுகிறார்.

கூட்டமைப்பின் தீர்மானத்தின்படி பங்காளிக் கட்சிகள் தமக்கான ஒதுக்கீடுகளை கேட்டால், “மார்ட்டின் வீதி தீர்மானங்கள் எங்களை கட்டுப்படுத்தாது” என்று கிளிநொச்சியில் சொல்கிறார்களாம்!

ஆக, மக்களின் தலைமைகள் - பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு இல்லாதவர்களாக பிடுங்குப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதுபற்றிய செய்திகள் வருகின்றபோது, “ஐனநாயகப் பண்புகளின் வெளிப்பாடு” என்று தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் பொருள்கோடல் செய்கின்றார். பாவம் அவர் என்ன செய்வார்! பேச்சாளருக்கான பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கின்றார் போலும்..!

கட்சிக்கு உறுப்பினர்களை உள்வாங்கும்போது, கட்சிக்கும் கொள்கைக்கும் கட்டுப்படக் கூடியவர்கள் - சமூக சிந்தனையாளர்கள் - அரசியல் பற்றிய சிந்தனை என்பவற்றை தகுதிகளாகக் கொண்டு உறுப்பினர்களை உள்வாங்க வேண்டும்.

ஆனால், அரசியல் ஆசை கொண்டவர்கள் - தலைமையில் உள்ளவர்களுக்கு ஜால்ரா போடக்கூடியவர்கள் போன்ற மூன்றாம்தர சமாசாரங்களே அண்மைக்காலமாக கட்சிகளின் உறுப்பினர் உள்வாங்கலுக்கான அடிப்படை தகுதியாக அமைந்திருக்கின்றது.

உதாரணத்திற்கு சொல்வதானால், தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி வேட்மனுவை தாக்கல் செய்வதற்காக சென்ற வாடகை வாகனத்தின் சாரதி வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார். 'சிவனே என்று இருந்தவரை சிக்க வைத்திருக்கிறார்கள்' தற்போது அவரும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்!

இவ்வாறான சில்லறைத்தனமான செயற்பாடுகள்தான் தமிழ் தலைமைகளை சந்தி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

80களின் ஆரம்பத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த வரதராஜப் பெருமாள் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் ஆதரவாளராக செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரை இயக்கத்தின் முழுநேர உறுப்பினராக்குவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா விரும்பினார். ஆனால் ரமேஸ், சுபந்திரன், டேவிறசன் போன்ற இரண்டாம் கட்ட தலைமகள் அதனை எதிர்த்தனர்.

அதற்கு அவர்கள் கூறிய காரணம், “மக்களின் பிரச்சினைகளில் சம்மந்தப்படாது வெளியில் நின்றவர்களினால் மக்களின் பிரச்சினைகளை உணர்வு ரீதியாக அணுக முடியாது. இவ்வாறானார்கள் தங்களுடைய நிலையில் நின்று, தங்களின் நலன்கள் பாதிக்காதவாறுதான் தீர்மானங்களை மேற்கொள்வார்கள்.

அவ்வாறானவர்களை வெளியில் வைத்திருந்து அவர்களின் புலமையை எங்களின் கொள்கைகளுக்கு வலுவூட்டும் வகையில் பயன்படுத்த வேண்டும்” என்று வாதாடியாதாக கூறப்படுகின்றது.

பிற்காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்களும் மோசமான செயற்பாடுகளும் வரலாறாக பதியப்பட்டிருந்தாலும் மேற்குறிப்பிட்ட அவர்களின் ஆரம்பகால கொள்கை தெளிவினில் நியாயம் இருப்பதாகவே அண்மைய செய்திகள் அமைந்துகொண்டிருக்கின்றன.

எனவே, தற்போதைய அரசியல் தலைமைகள் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டியது அவசர தேவையாக இருக்கின்றது. கட்சி உறுப்பினர்களுக்கு சரியான வழிநடத்தல்களையும் புரிதல்களையும் ஏற்படுத்த வேண்டும். புரிந்துகொள்ள மறுக்கின்றவர்களை துரத்திவிட்டு தரமானவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டும். துரத்துவதற்கு தலைமையில் உள்ளவர்கள் தகமையானவர்களாக மாறவேண்டும்.

அதைவிடுத்து, “ஓம்..ஓம்..பார்ப்பம் பொறுமையாய் இருக்கோ தம்பி..“ என்றும் “ஐனநாயகத்தின் பண்புகள் வெளிப்படுகின்றன. இது ஆரோக்கியமானது” என்றும் பூசிமெழுகி மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதையே தொடர்வார்களாயின் மக்கள் புதுவழியை தேட முயற்சிப்பார்கள்.

அண்மையில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கூறியதுபோன்று புதிய தலைமை ஓன்று உருவாக வேண்டும் என்ற கருத்து வலுப்பெறுவதை தடுக்க முடியாது போகும். ஒருசிலருடைய கோழிச் சண்டைகளுக்கு தாங்கள் பலிக்கடா ஆக்கப்படுவதை தமிழ் மக்கள் தொடர்ந்தும் பார்த்துகொண்டு இருப்பார்கள் என்று யாரும் பகல்கனவு காணக்கூடாது.

- மீண்டும்  இன்னொரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி -