Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

389 Views

மீண்டும் ஒரு திமிர்தனம்..! மீண்டும் ஒரு கையாலாகாத்தனம்..!

அனைவருக்கும் வணக்கம்!

இனங்களுக்கிடையில் நல்லுறவு வேண்டும் என்று மேடைகள் தோறும் எல்லோரும் முழங்குகிறார்கள். ஆனால் சொல்லுக்கும் செயலும் இடைவெளி குறைந்ததாகத் தெரியவில்லை.

இரண்டு கரங்களும் இணைந்து தட்டினால்தான் ஒசை உருவாகும். அதேபோன்றுதான் நல்லிணக்கமும். ஒருதரப்பை நோக்கி நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துவிட்டு, தமக்கே உரிய அகம்பாவத்துடன் மறுதரப்பு இயங்குமாக இருந்தால் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடாது முரண்பாடுகளும் சந்தேகங்களும்தான் வலுப்பெறும்.

மக்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் மக்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெறுபவையாக இருக்கவேண்டும்.

குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள், அவை செல்வாக்கு செலுத்தப்போகின்ற – நடைமுறைப்படுத்தப்படுகின்ற மக்களின் உணர்வுகளையும் பழக்கவழக்கங்களையும் நம்பிக்ககைகளையும் பாரம்பரிய கலாச்சாரங்களையும்; மதிக்கும் வகையில் அமைய வேண்டும் - மிதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது.

ஆனால் துரதிஸ்டவசமாக நல்லிணக்கத்தை எதிர்பார்த்திருக்கின்ற இலங்கை தீவில் இவ்வாறான சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன..

இந்நிலையில்தான், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விஹாராதிபதியாக இருந்த ஞானரத்ன தேரரின் இறுதி நிகழ்வும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

யாழ். முற்றவெளியில் விஹாராதிபதியின் நிகழ்வு நடாத்தப்பட்டது தவறு என்று சில தரப்புக்கினால் அறிக்கைகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுமூக ஊடகங்களி;ல் காரசாரமான விவாதங்கங்களும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

ஆனால், சமூக பொறுப்புள்ள ஊடகம் என்றவகையில் அவ்வாறான கருத்துக்களுக்கும் உணர்வுகளுக்கும் வக்காலத்து வாங்கும் எண்ணம் ஆதவனுக்கு கிடையாது.

இலங்கைப் பிரஜைககள் நாட்டின் எப்பகுதியிலும் வாழ்வதற்குமான உரிமையையும் அவர்கள் தங்களது மதநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான வாய்ப்பையும் அரசியலமைப்பு உறுதி செய்திருக்கின்றது.

ஒருவர் நாட்டின் எப்பகுதியிலும் வாழ முடியம் என்றால், வாழ்பவர்கள் இறப்பார்கள் - இறப்பவர்களுக்கு இறுதி நிகழ்வுகள் அவரவரின் நம்பிக்கைகள் - பழக்கவழக்கங்களின் அடிப்படையில் இடம்பெறவேண்டும்.

ஆனால், உரியமுறையில் சட்டங்களையும் நியமங்களையும் அனுசரித்து, பிரதேச மக்களின் உணர்வுகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் மதிப்பளித்து இடம்பெற வேண்டும்.

யாழ். விஹாராதிபதியின் இறுதி நிகழ்வும் அவ்வாறுதான். அவர்களை பொறுத்தவரையில், அவர்களுடைய நடைமுறையின் அடிப்படையில் முற்றவெளி போன்ற திறந்த மைதானம் ஒன்றில் விசேட பிரதிநிதிகளின் இறுதி நிகழ்வுகளை நடத்துவது மரபு.

அண்மையில்கூட, உயிர்நீத்த அஸ்கிரியபீட மதகுரு ஒருவரின் இறுதிக் கிரிகைகளை கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நிகழ்த்தியிருந்தனர். அவ்வாறு யாழ். விஹாராதிபதியின் இறுதி நிகழ்வை யாழ். முற்றவெளியில் நடாத்த தீர்மானித்திருக்கின்றாரர்கள் அவ்வளவுதான்!

ஆனால், இதன்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளும் யாழ். மக்களின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படாதமையும்தான் விமர்சனத்திற்கு உரியவையாக மாறியிருக்கின்றன.

முதலாவதாக, இறுதி நிகழ்வு இடம்பெற்ற இடம் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான மைதானம். அண்மைக்காலமாக குறித்த பிரதேசம் தொடர்பில் அதீத கவனம் செலுத்தி வருகின்ற தொல்லியல் திணைக்களம் அந்த பிரதேசத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தகூடிய எந்தவிதமான செயற்பாடுகளையும் அனுமதிப்பதில்லை.

இந்நிலையில், இறுதிநிகழ்வு நடத்துவதற்கான அனுமதி யாழ். தொல்லியல் திணைக்களத்திலேயே கோரப்பட்டுள்ளது. இவ்வாறான பொது நிகழ்வுகளுக்கு குறித்த பிரதேசத்தை வழங்குவதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என்று தெரிவித்த யாழ். அலுவலகம், பந்தை கொழும்பு தலைமையகத்திற்கு திருப்பி விட்டுள்ளது. இறுதியாக கொழும்பில் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால்தான் குறித்த நிகழ்விற்கு முற்றவெளியை பயன்படுத்துவதற்கான அனுமதி உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஒருவரின் உடலை தகனம் செய்வதற்கு அல்லது அடக்கம் செய்வதற்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்திருக்கின்றார் என்பதற்காக அங்கு தகனம் செய்துவிட முடியாது. அப்படியாயின் இந்த நாட்டில் மாயானங்களே தேவைப்படாது.

ஓவ்வொருவரும் தங்களுடைய சொந்தக் காணிகளில் தங்களின் அன்பானவர்ளை அடக்கம் - தகனம் செய்துவிடுவார்கள். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அது அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் மயானங்கள் சம்மந்தப்பட்ட விடயங்களை கையாளும் அதிகாரம் சட்டத்தினூடாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு இடத்தை மயானமாக பாவிப்பதாயின் உள்ளுராட்சி மன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் அது இங்கே பின்பற்றப்படவில்லை.

இதனை தவறுதலான விடயமாக புறந்தள்ளி விடமுடியாது. சட்டம் என்பது அனைவரும் அறிந்திருக்க வேண்டியது பொதுவான எடுகோள் என்பது ஒருபுறமிருக்க, இந்த இடத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் நேரடி பங்குபற்றல் இருந்திருக்கின்றது. உள்ளுராட்சி மன்ற சட்டங்கள் தொடர்பிலும் அவற்றின் நடைமுறைகள் தொடர்பிலும் ஆழமான புலமை உள்ள ஒருவராகவே தற்போதைய ஆளுநர் விளங்குகின்றார். ஆனால் உரிய ஒழுங்கு பின்பற்றப்படவில்லை.

இரண்டாவது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மயானங்களை பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் அமைப்பதையே பெரிதும் விருப்புகின்றார்கள். அதற்கு பல்லேறு ஐதீகங்கள் கூறப்படுகின்றன.

அதைவிட, விஹாராதிபதியின் இறுதி நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையிலேயே முனியப்பர் ஆலயம் மற்றும் தமிழாராட்சி மாநாட்டின்போது கொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவு தூபி என்பன அமைந்துள்ளன. இவையெல்லாம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் உணர்வுகளையும் பழக்கவழக்கங்களையும் பாதிக்கும் விடயங்கள்.

ஏற்கனவே தென்னிலங்கை அரசாங்கங்கள்மீது தமிழ் மக்களுக்கு சந்தேங்கள் தொடர்கின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வுகள் இடைவெளிகளை அதிகரிக்கவே வழிசெய்யும். இவற்றை கருத்தில்கொண்டு, இறுதி நிகழ்விற்கான இடத்தினை தீர்மானித்திருக்கலாம்.

ஆனால், சட்டநடைமுறைகளும் கருத்தில் எடுக்கப்படவில்லை – மக்களின் உணர்வுகளும் மதிக்கப்படவில்லை. இது, தென்னிலங்கையின் அகம்பாவத்தின் வெளிப்பாடாகவே தமிழ் மக்களினால் நோக்கப்படுகின்றது. 'இது எங்களின் நாடு. நாங்கள் விரும்பியதை செய்வோம். யாராலும் எதுவும் செய்ய முடியாது' என்ற சிங்கள மேலாதிக்க கருத்தியலின் திமிர்தனமாகவே மக்களினால் பார்க்கப்படுகின்றது.

அது ஒருபுறமிருக்க, இந்தவிடயத்தில் நம்மவர்களின் கையாலாகாத்தனம் மீண்டும் ஒருமுறை பட்டவர்தனமாக்கப்பட்டிருக்கின்றது.

தாங்கள் பிரதிநித்துவப்படுத்துகின்ற மக்களின் உணர்வுகளுக்கு மாறான விடயங்கள் நடக்கின்றன என்றால் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்திருக்க வேண்டும். அவற்றுக்கான வழிவகைகள் தொடர்பில் ஆராய்ந்திருக்க வேண்டும். இதற்காகதானே சட்டம் படித்த சாணக்கியர்களிடம் மக்கள் அதிகாரங்களை ஒப்படைத்திருக்கின்றார்கள். சாக்குபோக்கு சொல்லி காலத்தை கடத்துவதற்காக அல்லவே..!

மாகாணத்தின் கருத்துக்களை மத்திய அரசாங்கம் கவனத்தில் எடுக்கிறார்கள் இல்லை என்றும் மத்தியினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதாது என்றும் சர்வதேச பிரதிநிதிகளிடம் வடக்கு முதலமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். ஆனால், இருப்பதை வைத்து செய்யவேண்டியதை செய்யவில்லை.

விஹாராதிபதியின் உடலை தகனம் செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டிய அதிகாரம் மாநாகர சபைக்கு இருக்கின்றது. உள்ளுராட்சி மன்றகளுக்கு மக்கள் பிரதிநிதிகளின் சபை அதிகாரத்தில் இல்லாமல் ஆணையாளரினால் நிர்வகிக்கப்படுகின்ற காலகட்டத்தில் அதனை வழிநடத்தும் அதிகாரம் மாகாண உள்ளுராட்சி அமைச்சருக்கு இருக்கின்றது (மக்களின் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருப்பார்களாயின் குறித்த சபையை மாகாண உள்ளுராட்சி அமைச்சர் மேற்பார்வை செய்யலாம்) என்கிறது அரசியலமைப்பு! – மாகாண உள்ளுராட்சி அமைச்சு வடக்கு முதலமைச்சரான முன்னாள் நீதியரசரின் கைகளில் இருக்கின்றது.

இங்கே யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் முற்றவெளி வருகிறது – ஆணையாளரினால் மாநகர சபை வழிநடத்தப்படுகின்றது. ஆக வடக்கு முதல்வரின் நேரடி அதிகாரத்தில் மாநகர சபை இருக்கின்றது.

இந்நிலையில், மயானமாக பயன்படுத்ப்படுவதற்கு தேவையான அனுமதியை முறையாக பெறாமல் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடி தடையுத்தரவை கோருமாறு வடக்கு முதலமைச்சர் எழுத்து மூலம் யாழ். மாநகர ஆணையாளருக்கு பணித்திருப்பாராயின் விளைவு வேறுவிதமாக அமைந்திருக்கலாம்.

யாரும் எமக்கான அதிகாரங்களையும் உரிமைகளையும் சலுகைகளையும் தங்க தாம்பூழத்தில் வைத்து தருவார்கள் - தரவேண்டும் என்று எதிர்பார்த்து அறிக்கை விட்டுக்கொண்டிருக்க முடியாது.

கிடைத்தவற்றை உரிய முறையில் உச்சபட்சம் பயன்படுத்த வேண்டும் அல்லது பயன்படுத்த முயலவேண்டும். அதுதான் எம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் எம்மை நியாயப்படுத்துவதற்கும் - மற்றையவர்களின் முகத்திரையை அகற்றுவதற்கும் பலமான அணுகுமுறையாக இருக்கும்.

அதைவிடுத்து கையாலாகாதவர்களாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, எல்லாம் முடிந்தபின்னர் தலையில் அடித்து ஒப்பாரி வைப்பது இடைவெளிகளை அதிகரிப்பதற்கும் எம்மினத்தை தொடர்ந்தும் பிரச்சினைகளுக்குள் உழலவைப்பதற்குமே வழிவகுக்கும்.

-மீண்டும் ஒரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி-