Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

188 Views

யாரொடு நோவோம் பெண்களின் நிலையை?!

அனைவருக்கும் வணக்கம்!

இலங்கையில் போர் ஓய்ந்திருக்கலாம் ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்களமாகவே இருக்கின்றது. அவர்களுடைய வாழ்வுக்கான - அன்றாட தேவைக்கான - வாழ்வாதாரத்துக்கான - கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டம், சமூக பாதுக்காப்புக்கான போரட்டமும் எத்தினை தலைமுறைகளுக்கு தொடரப்போகின்றதோ என்று நினைக்கும் போது மனதில் ஒரு வகை பயம் ஒட்டிகொள்வதை தவிர்க்க முடியவில்லை.

வட - கிழக்கில் எண்பத்தொன்பதாயிரம் (89,000) துணைவர்களை பெண்கள் இழந்திருக்கிறார்கள், இதில் கிழக்கில் 26,000 துணைவர்கள் மரணித்து விட்டார்கள் என்கிறது 2010 இல் பாராளுமன்றத்தில் அமைச்சர் ஹிஸ்புள்ளவினால் சமர்பிக்கபட்ட புள்ளிவிபரம்.

இதுதவிர, வடக்கில் மட்டும் குடும்பத்துக்கு வருவாயை பெற்று கொடுத்த இருபதாயிரம் 20,000 ஆண்கள் இல்லை. இந்த ஆண்கள் காணாமல் ஆக்கபட்டவர்களாக இருக்கலாம், கடத்தப்பட்டு இருக்கலாம், சிறைக்கைதியாக இருக்கலாம் அல்லது இறுதி யுத்தத்தில் அல்லது அதற்கு முன் கொல்லபட்டவர்களாகவும் இருக்கலாம்.

இதுதவிர வட மாகாணத்தில் எண்பது வீதமான குடும்பங்களில் ஆண்கள் இல்லை என 2013 க்கான சனத்தொகை மதிப்பீடு சொல்கிறது. இந்த எண்பது வீதத்தில் உள்ள குடும்பங்கள் ஒன்று துணைவனை இழந்தவையாக இருக்கலாம் - திருமணம் செய்து கொள்ளாத முன்னைநாள் போராளியாக அல்லது சாதாரண பெண்ணாக இருக்கலாம் - விவாகரத்து பெற்றவர்களாக இருக்கலாம் அல்லது மேற்குறிப்பிட்ட காணமல் ஆகப்படவரின் - கடத்தப்பட்டவரின் - கொலை செய்யப்படவரின் - சிறையில் உள்ளவரின் தாயாக, துணைவியாக, தங்கையாக, அல்லது மகளாக இருக்கலாம்.இந்த எண்ணிக்கையானது மிகவும் துயரம் தரும் வாழ்வியலை எடுத்தியம்புகிறது .

வேலை புருஷ லட்சனம் என்று சொல்லிக்கொண்டு ஒரு குடும்பத்துக்கு தேவையான வருவாயை பெற்றுதரும் பொறுப்பை ஆண் மகனின் தலையில் சுமத்தி அந்த குடும்பத்துக்கான தீர்மானம் எடுக்கும் பொறுப்பை அந்த வீட்டில் இருக்கும் ஆணின் தலையில் சுமத்தும் சமூகத்தில் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

பிரதானமாக வருவாயை குடும்பத்துக்கு கொண்டு வந்து அந்த குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்த ஆண் இல்லாதவிடத்து அந்த குடும்பங்கள் படும்பாடு சொல்லில் அடங்காதவை. குடும்பத்தையும் பிள்ளைகளையும் பார்த்துகொண்டு வருவாயை தேட வேண்டிய முழுப்பொறுப்பும் பெண்களிடம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.

இது மாத்திரமா..  இதே பெண்கள்தான் காணியை விடுவிக்க சொல்லியும் காணாமல் ஆக்கபட்டவர்களை தேடியும் இன்னும் அலைகின்றனர் - போராடுகின்றனர் .

எல்லாவற்றையும் விட அதிக சவால்களுக்கு முகம் கொடுப்பவர்கள் முன்னை நாள் பெண் போராளிகள். அதிலும் தமது உடல் பாகத்தை இழந்த பெண் போராளிகள் படும் துன்பம் பன்மடங்கு. முதலாவது காரணம் அவளின் சமூகமே அவளை முழுமையாக ஏற்றுகொள்ளாத நிலைமை காணப்படுகின்றது. அவளை மணம் முடிக்க எந்த ஆண்மகனும் இலகுவில் முன்வராத சூழல் காணப்படுகிறது. காரணம் இவள் குடும்பத்துக்கு சரி வரமாட்டாள்இ வன்முறையில் ஊறிய பெண் என்ற பார்வை.

அதைவிடஇ “சாதாரண பெண்களுக்கே திருமணம் செய்வது கஷ்டம். சீதனம் வீடு வாசல் தேவை இந்த அழகில் என்னை போல் வீடு வாசல் இல்லாத தொழில் தெரியாதஇ ஊனமுற்ற பெண்ணை யார் திருமணம் செய்வார்” என்பதே அவர்களின் நிலை. சிலர் வீடு திரும்பும் போது தாய் தகப்பன் இருந்த சொத்துபத்தை எஞ்சி இருந்த பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டார்கள். அகவே இவளுக்கு காணிகூட இல்லாத நிலையும் காணப்படுகிறது.

தொழில் வாய்ப்பு தேடிப்போனாலும் இலகுவில் இவர்களை எல்லாரும் வேலைக்கு அமர்த்த முன்வராத நிலையும் காணப்படுகிறது. அப்படி வேலைகள் கிடைத்தாலும் உடல் நிலை இயலாமை காரணமாக அவர்களளுக்கு வேலை செய்யவும் முடிவதில்லை.

இன்னும் தமது உடல் பாகத்தில் செல் துண்டுகளை சுமப்பவர்களாகவே பலரும் வாழ்கின்றார்கள். பலருக்கு மருத்துவ வசதி தேவைபடுகிறது. இன்னும் சிலர் போரில் கைகால் இழந்த சக்கர நாற்காலியில் வாழும் துணைவனையும் கவனிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இந்த பெண்ணே அவருக்கு தேவையான மருத்துவ செலவையும் தேடிக்கொள்ள வேண்டும். இவ்வாறானவர்கள் துணை இருந்தும் விதைவைகளாகவே வாழுகின்றனர்.

இவ்வாறு முன்னாள் பெண் போராளிகள் முகம் கொடுக்கும் சவால்கள் சாதாரணமான போரில் பாதிக்கபட்ட பெண்கள் முகம் கொடுக்கும் சவால்களைவிட பன்மடங்கு அதிகமானது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக தாங்கள் இன்னும் பாதுக்காப்பு தரப்பினரால் கண்காணிக்கப்டுகின்றோம். என்ற பயமும் உள்ளது. அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அரசாங்கம் மாறினாலும் அரச இயந்திரமும் அரச அதிகாரிகளும் மாறவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

இவ்வாறாக அன்றாடம் அடிப்படைதேவைக்காக தங்களுடைய கௌரவமான வாழ்வுக்காக போராடும் இந்த பெண்களின் அவல நிலையைப்போக்க போர் முடிந்து ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் எந்த அரசியல் கட்சியும் எந்த விதமான ஆக்க பூர்வமான செயல்திட்டத்தையும் இன்றுவரை முன் வைக்கவில்லை. குறைந்த பட்சம் இவர்களை சென்று நலம் விசாரிப்பதும் இல்லை. இந்த பிரச்சனைகளை பற்றி மாகாண சபையிலோ பாராளுமன்றத்திலோ தொடர்ந்து குரல் ஒலிப்பதை காண முடியவில்லை .

அரசுக்கு முழுப்பொறுப்பும் இருக்கிறது வடகிழக்கில் வாழும் மக்களின் அவலங்களை தீர்ப்பதற்கு. அதற்காக அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஒரு மித்து அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். இங்கே கட்சிகள் பிரிவதும் புத்துக்கட்சிகளை உருவாக்குவதிலும்தான் நேரம் செலவாகின்றது .

தமிழ் மக்களை பிரநிதிப்படுத்த வருகின்றோம் என்று கதிரையில் அமர்ந்தவர்கள் மக்களை மறந்துவிட்டார்கள் - தமக்குள்ளே சண்டை போடுகின்றனர். இன்னும் சிலர் குற்றம் காண்பதிலும் குறை சொல்லுவதில் மட்டுமே காலத்தை போக்குகின்றனர்.

எம்மத்தியில் சிலர் இவ்வாறான பிரிவுகளையும் சேர்வுகளையும் வேடிக்கை பார்க்கின்றனர் - கைதட்டி சிரிக்கின்றனர்.  அதனையே தங்களுடைய சமூகக் கடமையென்று நினைத்து சமூக ஊடகங்களில் தங்களது வித்துவத்தை காண்பிக்கின்றனர்.

அன்று ஆயுதக்குழுக்களும் இவ்வாறுதான் பிரிந்தன. ஆளாளை கொன்று குவித்தனர் கடத்தினர் காணாமல் ஆக்கபட்டனர். உயரிய எண்ணத்துடன் ஆரம்பமான ஆயுதப் போராட்டம் இறுதியில் அழிவுகளுடன் அழிந்துபோனது. பிரிவதும் சேர்வதும்இ அதை பார்த்து மகிழ்வதும் தமிழருக்கு கைவந்த கலையோ என்னவோ?

போரால் பாதிக்கபட்ட சமூகத்துக்கு இப்போது உடனடியாக தேவைப்படுவது பசி பட்டினி இல்லாத வாழ்வு. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல்இ சரியான கல்வி வசதி, பொருளாதார வசதி, உடல்உள ஆரோக்கியம், கௌரவமான பாதுக்காப்பான வாழ்க்கை. இந்த தேவைகள் பூர்த்தி செய்யபட்டால்தான் மக்கள் இன்னொருவரிடம் கை ஏந்தாமல் இன்னொருவரில் தங்கி இருக்காமல் கௌரவத்துடன் வாழ முடியும்.

இன்றைய உடனடி அன்றாட வாழ்வுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய போரால் பாதிக்கபட்ட பெண்களுக்கு சரியான பொருளாதார வசதியும் வருவாயை பெற்றுகொடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் பசி பட்டினியில் வாழும் கல்வி அறிவு இல்லாத உடல் உள ஆரோக்கியமில்லாத சமூகம் நாளை உருவாவதை தடுக்க முடியும். மேற்குறிப்பிட்ட இன்றைய தேவைகளை ஓரளவிற்காயினும் பூர்த்தி செய்வதற்கு தேவையான அதிகாரக் கட்டமைப்பாக உள்ளுராட்சி சபைகள் காணப்படுகின்றன.

ஆனால் அவற்றின் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான தேர்தல் களத்தில் குதித்துள்ள யாருமே மக்களின் பிரச்சினைகளை பூர்த்தி செய்வதற்கு எவ்வாறான திட்டவரைபுகள் இருக்கின்றன என்று தெரிவிக்கவில்லை – அவ்வாறு இருப்பதாகவும் தெரியவில்லை. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுவிடும் என்கின்ற அச்சத்தினால் வேட்பாளர்களாக பெண்களை கட்சிகள் நிறுத்தியுள்ளன. ஆனால் உருப்படியாக எதுவும் யோசனைகள் இருப்பதாக தெரியவில்லை..?!

அதிகார பகிர்வு ஒன்றே குறிக்கோள் என்று அரசியல்வாதிகள் நடந்து கொள்வார்களேயானால், எமக்கு கிடைக்கின்ற அதிகாரத்தை சரியான முறையில் பாவித்து நிர்வாகம் செய்ய - ஆட்சி செய்ய ஒரு ஆரோக்கியமான சந்ததியும் சமூகமும் எதிர்காலத்திலும்  இல்லாமலே போய் விடும் என்பது உறுதி.

-மீண்டும் ஒரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி-