Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

404 Views

வேண்டாத மங்கைகளாக வீரமங்கைகள்! கரம் கொடுக்க யாருளரோ?!

அனைவருக்கும் வணக்கம்!

உலகத்தில் நடந்த சகல போர்களும் ஆயுத முரண்பாடுகளும் தோற்றம் ஆண்களால்தான், திட்டமிட்டவர்கள் வடிமைத்தவர்கள்,  நடைமுறை படுத்தியவர்கள், பின் அதை வரலாறாக எழுதியதும் ஆண்களே.

கொலை செய்ததும் ஆண்கள் கொலை செய்யப்பட்டதும் ஆண்களால்,  சித்ரவதை செய்ததும் ஆண்கள், செய்யபட்டதும் ஆண்களுக்கே! கடத்தியவர்களும் கடத்தப்பட்டவர்களும் ஆண்களே! காணாமல் போனவர்கள், காணாமல் ஆக்கியோரும் ஆண்கள்!

சிறு எண்ணிக்கையிலான விதி விலக்குகளும் உண்டு. இதே ஆண்களால் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கபட்டதும் பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு  உட்படுத்தபட்டதும் பதியப்பட்டுள்ளது

ஆனால் போரின் அல்லது ஆயுத முரண்பாட்டினால் ஏற்பட்ட ஆண் உறவின் இழப்புகளையும் வேதனைகளையும் வலியையும் வாழ்வின் சுமைகளையும் காலகாலமாக சுமப்பதென்பது பெண்கள் என்பதே உண்மை.

இவர்கள் சமூக பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது. தங்கள் சந்ததிகளுக்கு சரியான கல்வியை பெற்று கொடுக்க அன்றாட பசியை போக்க இவர்கள் தினம் தினம் செத்து மடிகின்றனர்.

இலங்கையில் போராட்டத்தில் தொடக்கத்திலிருந்தே பெண்களின் பங்களிப்பு கணிசமான அளவுக்கு இருந்துள்ளது . சகல இயக்கங்களிலும் பெண்கள் உள்வாங்கப்பட்டனர். சகல முன்னிலை தாக்குதல்களிலும் பெண்கள் பங்கேற்றனர். ஆண்களுக்கு பெண்கள் ஒருபோதும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தவர்கள் எம் மண்ணின் பெண்கள் . இதைபற்றி நான் விரிவாக சொல்ல தேவை இல்லை .

அன்று களத்தில் இருக்கும்போது வீரமங்கைகளாக வீரநடை போட்ட பெண்களை மரியாதையோடும் பயந்தோடும் வியப்போடும் பார்த்தது எம் சமூகம்  -  அவளை ஏற்றும் கொண்டது.

ஆண் செய்யும் வேலையை பெண் செய்வதா ? - ஆயுதம் தூகுவதா ? - ஆண்போல் நடந்துகொள்ளலாமா? என்று யாரும் கேட்கவும் இல்லை குரல் கொடுக்கவும் இல்லை. அப்படி ஆயுத குழுக்களில் இணைந்த பெண்களைப்பற்றி யாரும் பொது வெளியில் தரக்குறைவாக எழுதவும் இல்லை - சொல்லவும் இல்லை.  அன்று ஆணுக்கு பெண் சமன் என சம சந்தர்பமும் சம வாய்ப்பும் ஆயுத குழுக்களில் வழங்கப்பட்டது.

ஆனால் ஆயுத போராட்டம் மௌனித்த பின் நிலைமை தலைகீழாய் போய் விட்டது. இங்கே முன்னைநாள் பெண் போராளிகள் சமூகத்தில் முகம் கொடுக்கும் சவால்கள் முன்னைநாள் ஆண் போராளிகளை விட பன்மடங்கு என்பதால் பெண்களை பற்றி மட்டுமே எழுதுகிறேன்.

ஆண் போராளிகள் திருமணம் செய்யும் போது சீதனப்பிரச்சனை இல்லை ஆனால் பெண் போராளிகள் திருமணம் செய்வதானால் சீதனம்  கேட்கின்றார்கள்.

இந்த பெண்கள் கூடிய அளவில் பெண் எப்பிடி இருக்க வேண்டும் என்ற கட்டமைப்புக்குள் (அடக்க ஒடுக்கமாக வீட்டில் சமையல் பண்ணுபவளாக பிள்ளைபராமரிப்பாளராக) திரும்ப வேண்டி உள்ளது - அவ்வாறே அவர்களும் வாழ்கின்றனர்.

அதிலும் புனர்வாழ்வு பெற்ற பெண் போராளிகளின் நடத்தையை சிலர் கேள்வி கேட்பாதகவும் சில பெண்கள் கூறுகின்றனர். தொழில் வாய்ப்பை பெற்று கொள்வதில் சவால்கள் உள்ளன . முன்னைநாள் போராளி என்றவுடன் இலகுவில் வேலை வழங்க யாரும் விரும்புவதும் இல்லை .

இயக்கத்தில் படகு கட்டும் வேலையே செய்த பெண், இன்று அதே தொழிலை செய்யும் போது சமூகத்தார் தன்னை ஒதுக்குவதாகவும் ஏளனமாக பார்ப்பதாக ஒரு பெண் கூறினாள். இவ்வாறு இவர்களின் அன்றாட தேவையே போராட்டமாக உள்ளது.

கிழக்கில் வாழும் முன்னைநாள் போராளிகள் வன்னி போராளிகளைவிட கூடுதலான சவால்களுக்கு முகம் கொடுகின்றனர். முதலாவது, இயக்கத்துக்குள் பிரிவு ஏற்பட்ட நேரம் இவர்கள் வீடு திரும்பியவர்கள். வன்னி இயக்கத்திடம் இருந்தும் ராணுவத்திடம் இருந்தும் தம்மை பாதுகாக்க போராடியவர்கள்!

இவர்கள் பாதுக்கப்பு கரங்களுக்காக தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை, இன்றும் அடையாளம் கட்டிக்கொள்ள பயப்படுகின்றனர் . காரணம் அரசு தங்களையும் புனர்வாழ்வுக்கு அனுப்பி விடுமோ என்ற பயம் உள்ளது.

இவ்வாறானவர்களுக்கு அரச சலுகைகளை மற்றும் வீட்டுத்திட்டம் கடனுதவி வேலைவாய்ப்பு போன்ற உதவிகளை பெற்று கொள்வது கல்லில் நார் உரிப்பதற்கு சமனாகும். இதைதவிர வெளிநாட்டு வேலைவாய்ப்பும் இவர்களுக்கு எட்டா கனியாக உள்ளது. பலருக்கு உடலில் தழும்புகளும் காயங்களும் உள்ளதால் மருத்துவ பரிசோதனையில் நிராகரிக்கப்படுகின்றனர்.

அநேகமானோர் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதாதவர்கள். இன்னும் பலர் திருமணம் செய்து கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வு கொடுமையானது. இன்னும் அரசிடமோ எந்த நிறுவனத்திடமோ கிழக்கில் வாழும் முன்னைநாள் போராளிகள் பற்றிய சரியான கணக்கெடுப்பு இல்லை என்பது வேதனை தரும் விடயம். அங்கங்களை இழந்த பெண் போராளிகள் விசேட தேவைக்கு உட்பட்டவர்கள் பட்டியலில்தான் வருகின்றார்கள். இவர்கள் எல்லோரும் வறுமையில் வாடுகின்றனர்.

வீர மங்கைகள் இன்று வேண்டப்படாத மங்கைகள் ஆகிவிட்டார்கள். ஆகவே பாலியல் சமத்துவம் என்பது தேவை கருதி சமூகத்தில் விதைக்கப்படதா ? அப்படியாயின் ஏன் அந்த விதைகள் சமூக மாற்றம் என்ற நல்ல கனிகளை இன்று தரவில்லை என்பது கேள்வி ஆகின்றது. இன்று சமூகத்தில் பால் நிலை பெண் உரிமை என்பதெல்லாம் வேண்டப்பாடாத கருத்தியல்கள் ஆகி விட்டன. எங்கே தவறு நடந்துள்ளது ?

இன்று மாவீரை கொண்டாடும் - மாவீரை நினைவு கொள்ளும் - மாவீரர் துயிலும் இல்லங்களை பல லட்சம் செலவில் கட்டும் நாம், உண்மையில் அந்த மாவீரர்களுக்கு ஆத்மார்த்தமாக மரியாதை செலுத்த வேண்டும் என்றால் உயிரோடு இருக்கும் மாவீரர் குடும்பங்களையும் முன்னைநாள் நாள் போராளிகளையும் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ வழி செய்ய வேண்டும். இதுவே மாவீரர்களுக்கு செய்யும் மரியாதையாகும்.

-மீண்டும்  ஒரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி -