Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

245 Views

மாற்றத்திற்கான அறிகுறியா..?!

அனைவருக்கும் வணக்கம்,

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நெருங்கிக் கொண்டிருக்கையில் அரசியல் களம் பரபரப்பாகிக் கொண்டேயிருக்கின்றது. அதிகரிக்கின்ற பரபரப்புகள் நல்லாட்சி அரசாங்கம் என்கின்ற தேசிய அரசாங்கத்தின் ஆயுள் பற்றிய சந்தேகத்தை அதிகரிக்கச் செய்கின்றது.

ஏற்கனவே, சுதந்திரக் கட்சியினரும் ஐக்கய தேசியக் கட்சியும் செய்துகொண்ட தேசிய அரசாங்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. இதுதொடர்பில் தேர்தல் முடியும்வரை எதுவும் பேச வேண்டாம் என்று சுதந்திரக் கட்சியினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால் சிரிசேன தெரிவித்திருப்பதாக உள்ளக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதே நிலைப்பாடடில்தான் ஐக்கிய தேசியக் கட்சியும் இருப்பதுபோன்று காட்டிக் கொள்கின்றது. ஆனாலும், தேசிய அரசாங்கத்தை தொடர முடியாமல் போனால், அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை கணக்கு போட்டுக் கொண்டேயிருக்கின்றது.

அதுதொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளுடன் சில பேச்சுக்களைகூட ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டிருக்கின்றது.

அதேபோன்று, பொது எதிரணி மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் சிலவற்றை வளைத்து சுதந்திரக் கட்சி ஆட்சியை உருவாக்கும் திட்டத்துடன் சுதந்திரக் கட்சி தலைவர்கள் சிலரின் காய்நகர்த்தல்களும் திரைமறைவில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான பின்னணியில்தான், பிரச்சார மேடை ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன, கடந்த 3 வருடங்களாக நாட்டின் பொருளாதாரத்தை கவனித்துக் கொள்கின்ற பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒப்படைந்திருந்ததாகவும், இந்த வருடத்தில் இருந்து அதனை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது, பொருளாதார அமைச்சை தன்வசப்படுத்தப் போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்ற எடுகோளிற்கே வரவேண்டியுள்ளது.  பொருளாதாரம் சார்ந்த அமைச்சு தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அதனுடைய பிரதி அமைச்சராக ஹர்ச டி சில்வா கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்து, 2003 காலப் பகுதியை மனக் கண்முன்னால் கொண்டு வருவதை தவிர்கக முடியாதுள்ளது. அக்காலப் பகுதியில் ரணில் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், ஒஸ்லோ தீர்மானம் தொடர்பில் அதிருப்தியடைந்த அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்க, முக்கியமான 3 அமைச்சுக்களை தன்வசப்படுத்திக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்டங் கண்டது.

இவ்வாறான பின்னணியில், பிரதமரிடம் இருக்கின்ற ஒரு அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி தன்வசப்படுத்த முனைகின்றார் என்கின்ற செய்தி ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியானதாக இருக்காது. இதனை அவர்கள் கௌரவப் பிரச்சினையாகவே கருதுவார்கள்.

அத்தோடு, ஓர் அமைச்சை ஜனாதிபதி கையேற்கின்றார் அல்லது அதனை கைமாற்றுகின்றார் என்றால் குறித்த அமைச்சின் - அமைச்சரின் செயற்பாடுகளில் ஜனாதிபதி திருப்தியடையவில்லை என்றே பொருள்!

அப்படிப் பார்த்தால், பொருளாதார அமைச்சை பிரதமரிடம் இருந்து கையேற்பது என்பதை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்படுகின்ற இடைவெளியாகவும் புரிந்துணர்வின்மையாகவுமே நோக்க வேண்டும்.

தேசிய அரசாங்கம் தொடர வேண்டுமெனில், ஜனாதிபதி – பிரதமர் இடையேயான புரிந்துணர்வு இறுக்கமானதாக – நெருக்கமானதாக இருக்க வேண்டியது அவசியம். இவ்விடயத்தில் பிரதமர் அதிகபட்ச விட்டுக் கொடுப்புடன் செயற்படுவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறத்தில் சொல்வதானால், தற்போதைக்கு பிரதமர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

அண்மையில்கூட, கபீர் காசிமின் கருத்துக்களினால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி, அமைச்சரவை கூட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில், பிரதமர் சமரசம் செய்து அழைந்து வந்திருந்தார். அத்துடன், ஜனாதிபதி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் கருத்துக்களை வெளியிடக் கூடாது எனவும் கடுமையான உத்தரவை பிறப்பித்திருந்தார்.

எனினும், தன்னுடைய ஆளுமையையும் கௌரவத்தையும் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை ஜனாதிபதி மேற்கொள்ளுகையில், பிரதமரினால் தொடர்ந்தும் விட்டுக்கொடுப்புடன் செயற்படுவது இயலாத காரியம் என்பதே நோக்கர்களின் கருத்தாக இருக்கின்றது.

எது எப்படியோ, தேசிய அரசாங்கம் தொடர்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் பாரிய சக்தியாக நடைபெறவுள்ள தேர்தல் முடிவுகள் அமையவுள்ளன.

தேர்தல் முடிவுகளில், மஹிந்த தரப்பினர், சுதந்திரக்கட்சினரைவிட முன்னணி பெறுவார்களாயின், தேசிய அரசாங்கத்தினை தொடர்வதற்கு ஜனாதிபதி ஆர்வம் காட்ட மாட்டார் என்று தெரிகின்றது.

அவ்வாறான நிலையில், ஜனாதிபதி – பிரதமர் இடையேயான உறவில் ஏற்படக் கூடிய தளம்பல்கள் பிரிவிற்கு வலுசேர்க்கும் காரணியாக அமையும்.

அவ்வாறு தேசிய அரசாங்கம் ஆட்டங் காணும் நிலமை ஏற்பட்டால், அதனால் பெரிதும் பாதிக்கப்படப் போகின்ற தரப்பாக தமிழர் தரப்பே இருக்கின்றது.

ஏனெனில், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற, அரசியல் தீர்வை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியலமைப்பிற்கான நகர்வுகள் ஸ்தம்பிதம் அடையும். புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழர் தரப்பிடம்கூட பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன.

எனினும், வெளியாகி இருக்கின்ற இடைக்கால அறிக்கையை வைத்துப் பார்க்கின்றபோது, தற்போதைய நிலையில் ஏற்றுக்கொள்ள கூடிய முன்னேற்றகரமான விடயங்கள் பல காணப்படுவதாக துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, இதனைவிட நம்பிக்கை வைக்கும் எதுவும் தற்போதைக்கு தமிழர் தரப்பிடம் இல்லை. கண்ணுக்கு எட்டிய துாரத்திலும் எதுவும் தெரிவதாக இல்லை.

எனவே, தேசிய அரசாங்கம் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏனைய தரப்புக்களைவிட, தமிழ் புத்திஜீவிகள் மட்டத்தில் கொஞ்சம் அதிகமாக இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

மீண்டும் இன்னுமொரு வீச்சில் சந்திக்கும்வரை..