Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

127 Views

காலம் நெருங்குகிறது வேகம் போதாது..

அனைவருக்கும் வணக்கம்,

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்கு இன்னமும் பதினைந்துக்கும் குறைவான நாட்களே இருக்கின்ற நிலையில் இந்தத் தேர்தலில் எவ்விதமான தீர்மானத்தை தமிழ் மக்கள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தெளிவான கருத்துருவாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை.

கடந்த காலங்களில் எவ்வாறான தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அந்தத் தேர்தல் எவ்விதமான முக்கியத்துவத்தையுடையது என்பதைப் பற்றியும், அதில் தமிழ்மக்கள் ஒருவிமித்து வாக்களிப்பதன் அவசியம் பற்றியும் பக்கம்பக்கமாக விவாதித்த புத்திஜீகள் வர்க்கத்தை சேர்ந்த பலரும் இம்முறை மௌனித்துப் போயிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

கடந்த காலத்தைப்போன்று இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகபோக வெற்றியைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று சிலர் அடித்துக் கூறுகின்றனர்.

இவ்வாறான விமர்சனங்ளை அசட்டை செய்வது ஆரோக்கியமாக இருக்காது என்பதையே களநிலைமைகள் வெளிப்படுத்துகின்றன.

இவ்வாறான சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதற்கான அவசர தேவை ஒன்று கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. கூட்டமைப்பின் சார்பில் களம் இறங்கியிருக்கும் வேட்பாளர்கள் மக்களின் பல்வேறு கேள்விக்கணைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலைமையை சீர்செய்வதற்குரிய ஆளுமை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தரிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடமும் மாத்திரமே காணப்படுகின்றது.

ஆனால், தென்னிலங்கை அரசியல் தளத்திலும், சர்வதேச தளத்திலும் கூட்டமைப்பின் சக்திமிகுந்த ஒருவராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தோற்றம் பெற்றிருந்தாலும்; - யதார்த்த வழியில் சிந்திக்கின்ற தமிழ் மக்கள் சுமந்திரனுக்கு கரகோஷம் எழுப்பினாலும், கூட்டமைப்பு மீது விமர்சனங்களை வாரி இறைப்பவர்கள் மத்தியில் சுமந்திரனின் கருத்து சாதகத்தை ஏற்படுத்தாது என்பதே யதார்த்தம்.

அதற்கு காரணம், கூட்டமைப்பிற்கு எதிரான விமர்சனங்கள் அனைத்துமே சுமந்திரனின் செயற்பாடுகளை மையப்படுத்தி வெளிவந்திருக்கின்றன அல்லது எதிரான விமர்சனங்களோடு சுமந்திரனும் தொடர்புபட்டிருக்கின்றார்.

ஆக, கூட்டமைப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், தமிழ் மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமையும் சம்பந்தருக்கே இன்னமும் இருக்கின்றது என்பதை மறுக்கமுடியாது.

எஞ்சியுள்ள குறுகிய காலத்திற்குள்ளாவது சம்பந்தர் தமிழ் மக்களிடம் பகிரங்கமாக பேசுவதற்குத் தயாராக வேண்டும். தமிழ் மக்கள் முன்வைக்கும் அதிருப்திகளுக்கும், விமர்சனங்களுக்கும் தனது அரசியல் வழிநடத்தலில் பொதிந்திருக்கும் நியாயத்தையும், தெளிவையும் முன்வைக்க வேண்டும்.

தென்னிலங்கையையும், சர்வதேசத்தையும் தெளிவுபடுத்த முற்படும் சம்மந்தரினால் ஏன் தமிழ் மக்களைத் தெளிவுபடுத்த முயற்சிக்க முடியாது?

தென்னிலங்கை அரசியல் சூழலையும், சர்வதேச நிலைமையையும் மக்களுக்கு புரியும் விதத்தில் தெளிவுபடுத்தாமல் வழமைபோல் சர்வதேச சமூகத்திற்கு ஒற்றுமையைக் காட்டுவதற்காக தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுவதும், தன்மானமுள்ள தமிழ்மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களிப்பார்கள் என்று கூறுவதும், கூட்டமைப்புக்கு வாக்களிக்காவிட்டால், அரசியல் தீர்வு சாத்தியப்படாது என்று கூறுவதும் தமிழ் மக்களை சாந்தப்படுத்தாது.

மறுபுறத்தில், உள்ளக முரண்பாடுகள் சரியான முறையில் கட்டமைப்பு ரீதியாக தீர்த்துவைக்காததன் காரணமாக கூட்டமைப்புக்குள் தலைதூக்கியிருந்த ஆசனப் பகிர்வு முரண்பாடுகளும், அதனால் நாளாந்தம் ஏற்படுகின்ற புகைச்சல்களும் இன்னமும் கூட்டமைப்பின் ஒற்றுமையை சீண்டிக் கொண்டே இருக்கின்றன.

இவ்வாறான நிலையில், உள்ளுராட்சித் தேர்தல்தானே எதுவேண்டுமானாலும் நடந்து முடியட்டும் பிறகு நிலைமை சரி செய்து கொள்ளலாம் என்று கூட்டமைப்பின் தலைமை அசமந்தமாக இருக்குமேயானால், இந்தத் தேர்தல் முடிவுகள் கூட்டமைப்பின் அத்திரவாரத்தில் பாரிய வெடிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

எவ்விதமான நோக்கத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்தாலும், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் கூட்டமைப்பிற்கான தேவை - அதற்குரிய பொறுப்பு ஆகியவற்றை தமிழ் மக்களும், சர்வதேச சமூகமும் இன்றியமையாத ஒன்றாகவே கருதினர்.

தற்போதுகூட தமிழ் மக்களின் எதிர்கால அபிலாசைகள் நோக்கிய பயணத்தில் கூட்டமைப்பின் வகிப்பாகம் இன்றியமையாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

இந்நிலையில், கூட்டமைப்பை சிதைத்து அரசியல் அரங்கிலிருந்து துடைத்தெறிவதற்கு சில தென்னிலங்கை குள்ளநரிகளும், அவர்களுக்கு துணையாக நிற்கும் சில நாடுகளும் காய் நகர்த்திக்கொண்டிருப்பதை தமிழ் மக்கள் அறியாதவர்களல்ல.

அந்த சதியிலிருந்தும் உள்வீட்டு குள்ளநரிகளின் துரோகத்தனங்களிலில் இருந்தும்; கூட்டமைப்பை பாதுகாக்கவும், அதை தமிழ் மக்களின் பலமான அரசியல் சக்தியாக வளர்த்தெடுக்கவும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை விரைந்து மேற்கொள்வதே கூட்டமைப்பு தலைமையின் இன்றைய அவசர தேவையாகும்.

மீண்டுமொரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி-