Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

100 Views

இறுதிவரை இருக்கப் போகிறது பதற்றம்!

அனைவருக்கும் வணக்கம்,

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அடுத்த வாரம் நடைபெற்று முடிந்துவிடும். தேர்தலின் முடிவுகளோடு நாட்டில் பல்வேறு அரசியல் சுவாரஸ்யங்கள் மக்களுக்கு விருந்தளிக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாகவே காணப்படுகின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையப் போகின்றன - கூட்டமைப்பு தொடர்ந்தும் தனிப் பெரும் கட்சியாக தன்னை நிலைநிறுத்துமா? போன்ற கேள்விகள் பெறுமதி வாய்ந்தவையாக – விவாதப் பொருளாக மாறியிருக்கின்றன.

எனவே, கூட்டமைப்பை மையமாக பொருளாக எடுத்துக் கொண்டால்;, பாரிய அதிருப்தியோடும், ஏமாற்றப்பட்ட கோபத்துடனும் உள்ளுராட்சி மன்றத் தேரதலை தமிழ் மக்கள் எதிர்கொள்கின்றனர்.

கடந்த காலத்தில், இன உணர்வுக்காகவும் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி என்பதற்காகவும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்த தரப்பினர், கொஞ்சம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அதேபோன்று, சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் ஒற்றுமையை காண்பிக்க வேண்டும் என்ற நோக்கில் வாக்களித்த தரப்பினர் மத்தியில், கூட்டமைப்பினர் தமக்கிடையே ஒற்றுமையை பேணிப்பாதுகாக்க தவறி விட்டனர் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது தவிர சில பிரதேசங்களில் கடந்த காலங்களில் முன்னணியில் நின்று செயற்பட்ட சிலர் பின்தள்ளப்பட்டு புதியவர்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறான பிரதேசங்களில் ஒருவிதமான அதிருப்தி தலை தூக்கி இருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான கோபதாபங்களும் அதிருப்திகளும் காணப்பட்டாலும் இவற்றை தமக்கான வாக்குகளாக மாற்றக் கூடிய கவர்ச்சியான எதிரணி இன்மை கூட்டமைப்பிற்கு மகிழ்சியான சமாச்சாரமாகவே இருக்கின்றது.

அதாவது, கூட்டமைப்புமீது எந்தளவு வெறுப்புக்களை மக்கள் வெளிப்படுத்தி வந்தாலும், இன்னொரு தரப்பிற்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கி பார்ப்போம் என்ற அரசியல் சிந்தனை தமிழ் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு உருவாக்கப்படவில்லை.

அதேவேளை, அதிருப்தியை வெளிப்படுத்த விரும்பின் அதற்கான மார்க்கமாக வாக்களிப்பை தவிர்ப்பதே பெரும்பாலனவர்களின் தெரிவாக இருப்பதாகவே  களமுனை தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

ஏற்கனவே, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தழிழர் விடுதலை கூட்டணி போன்ற தரப்பினருக்கு விழுகின்ற வாக்குகளில் பெரும்பாலானவை கூட்டமைப்பிற்கு கடந்த காலங்களில் வீழந்த வாக்களாகவே இருக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்ற நிலையில், வாக்களிப்பு வீதமும் குறைவடைந்தால் கூட்டமைப்பிற்கான வாக்குகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

மறுபுறத்தில், தேசியக் கட்சிகளும் ஈபிடிபி போன்ற இணக்க அரசியலை ஆதரித்து நிற்கின்ற கட்சிகளும் தமது பக்கம் புதிய வாக்காளர்களை கவரும் வகையில் புரட்சிகளை செய்யாவிட்டாலும் தமக்கான வாக்கு வங்கிகளை பத்திரமாக வைத்திருக்கின்றன.

எனவே, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஏனைய கட்சிகளுக்கான வாக்களிப்பு வீதம், தேர்தல் முடிவில் காத்திரமான பங்களிப்பை செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே, புதிய தேர்தல் முறைமை சிறிய கட்சிகளுக்கு வாய்ப்புக்ளை உருவாக்கி கொடுத்துள்ளது. உள்ளுராட்சி மன்றங்களில் 40 வீதமான ஆசனங்களுக்கான விகிதாசார தெரிவின்போது, தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் வாக்குகளை கழித்துவிட்டே கணக்கெடுக்கப்படவுள்ளது.

ஆகவே, சிறிய கட்சிகளும் பிரதிநிதிகளை பெறக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. எனவே, தேர்தலில் கூட்டமைப்பிற்கான வாக்களிப்பு வீதம் குறைவடைந்து தொகுதி ரீதியான முடிவுகளில் இறுக்கமான போட்டி ஏற்படுமானால் ஆட்சியமைப்பதற்கு ஏனையவர்களின் தயவை வேண்டி நிற்கும் நிலை உருவாகலாம்.

அவ்வாறான சூழலில் கட்சிகள் தற்போது கூறிவருகின்ற, கொள்கை கோட்பாடுகள் எல்லாம் இரண்டாம் பட்சமாக மாறுவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது.

ஆக, நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டமைப்பிற்கு எதிராக தோன்றியுள்ள – தோற்றுவிக்கப்பட்டுள்ள அலையானது வடக்கு கிழக்கு தேர்தல் களத்தில், கூட்டமைப்பு தலைமைகளுக்கு இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளே தற்போதைக்கு காணப்படுகின்றது.

மீண்டுமொரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி-