Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

74 Views

மீண்டும் பூச்சியத்தில் இருந்து..?!

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் தென் இலங்கை அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை ஆதவன் முன்கூட்டியே பதிவு செய்திருந்தது இப்போது நிதர்சனமாகியிருக்கின்றது.

கடந்த 10ஆம் திகதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தலைதூக்கிய அரசியல் சூறாவளி இன்னமும் முடிவுக்கு வரவில்லை. தென் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான வற்புறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகள் அமைந்துள்ளன.

2015 ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு வாக்களித்த மக்களே, நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் நல்லாட்சி என்று கூறப்பட்ட ஆட்சியையும் தூக்கி எறிந்துவிட்டிருக்கின்றார்கள்.

தேர்தல் காலத்தில் முன்னெடுத்த சில நடவடிக்கைகள் மஹிந்த தலைமையிலான அணியையும், ரணில் தலைமையிலான அணியையும் பின்னுக்குத் தள்ளி தனது அரசியல் முயற்சிகளை முன்னிலைக்குக் கொண்டுவரும் என்று ஜனாதிபதி நினைத்தார்.

அதற்காக மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை தொடர்ந்தும் குற்றவாளிகளாக வைத்திருப்பதற்கான குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு உட்படுத்துவதாக கூறியதுடன், மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் மீதான ஆணைக்குழு விசாரணை அறிக்கையை வெளிப்படுத்தி பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினார்.

இவ்விரு தரப்பையும் குற்றவாளிகளாகக் காட்டிக்கொண்டு, ஊழல் மோசடியற்றதும், தூய்மையானதுமான அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான தனது முயற்சிக்கு நாட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், அதை செயற்படுத்தும் வல்லமை அற்றவராக அவர் ஆட்சி நடத்துவதை நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள். நாட்டில் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதையும், திட்டங்கள் வகுக்கப்படுவதையும், ஊடகங்களில் பார்த்தே தெரிந்து கொள்வதாகக் கூறுவதும், அரசாங்கம் நிறைவேற்றிய சட்டங்களை பிறகு தானே ரத்துச் செய்வதாக அறிவிப்பதும் மைத்திரிபால சிறிசேனவின் ஆளுமைத் திறன்மீது நாட்டு மக்களுக்கு எரிச்சலையும், அதிருப்தியையுமே ஏற்படுத்தியது.

இத்தகைய ஒருவரால் எவ்விதமான திட்டங்களுக்கும் செயல்வடிவம் கொடுக்க முடியாது என்பதையும், நல்லாட்சி என்று இவர்கள் வெளியில் கூறினாலும் ஆட்சியாளர்கள் தமக்குள் வெளிப்படையற்றவர்களாகவும், மக்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் திராணியற்றவர்களாகவுமே இருக்கின்றார்கள் என்பதை நாட்டு மக்கள் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி மீதான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றுகையில், வாள் எடுத்து வீசப்போவதாகவும், அதில் வெட்டுப்படப்போவது நண்பர்களா - ஏதிரிகளா? என்பதைப் பற்றி தாம் கவலைப்படப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வீசிய வாள் அவரையே காயப்படுத்திவிட்டுள்ளதாகவே தெரிகின்றது.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமாக அமைந்திருந்தால், ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்து அவரை பதவி நீக்கம் செய்வதற்கோ அல்லது அவரை ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கும் அரசாங்கத்தில் பல்லைப் பிடுங்கிய பாம்மைப்போலவோதான் நடத்தியிருப்பார்கள்.

நிலைமை தலைகீழாக மாறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கைகள் ஓங்கியிருக்கின்ற காரணத்தினால் ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் பூகம்பம் ஏற்படாது என்ற நிலைமையில் ஜனாதிபதி தப்பித்துக்கொண்டுள்ளார்.

எனினும், ஜனாதிபதி மௌனமாக இருந்துவிட முடியாது. மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள மஹிந்த ராஜபக்சவின் அரசியல் எதிர்பார்ப்புக்களை புறம்தள்ளிவிட முடியாத சூழலுக்கு ஜனாதிபதி முகம்கொடுத்தேயாகவேண்டும்.

மஹிந்த ராஜபக்சவின் எதிர்பார்ப்புக்கள் எவை என்பதையும் சுருக்கமாக பார்க்க வேண்டும். முதலாவது, ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். அடுத்தது தனதும், தனக்கு வேண்டியவர்களுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் விசாரணைகளில் இருந்து அதிகாரிகளை ஒதுங்கி இருக்க வைப்பது.

இரண்டாவது எதிர்பார்ப்பை உடனடியாக நிவர்த்தி செய்யமுடியாத காரணத்தையும், புறச்சூழலையும் ஜனாதிபதி நன்கு அறிவார். ஆனால் முதலாவது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் சுதந்திரக் கட்சியில் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவும், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியும் என்று ஜனாதிபதி கருதுவதற்கு வாய்ப்பு இருந்தது.

ஆகவேதான் பிரதமரை பதவி விலகச் செய்து புதிய ஆட்சியை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்தார். ஜனாதிபதி விரும்பாமலே இந்த முடிவுக்குப் போயிருந்தாலும் அதைத் தடுத்து நிறுத்தி மஹிந்த ராஜபக்சவின் எண்ணம் நிறைவேறாமல் பாதுகாத்து தற்போதைய ஆட்சியை நீடிக்கச் செய்வதற்கு இந்தியா மற்றம் அமெரிக்கா போன்ற நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு தோற்றுப்போய்விட்டன.

2015 ஆண்டு சீனா மெத்தனப்போக்காக இருந்த இடைவெளியை இந்தியாவும், அமெரிக்காவும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. அதே தவறை இம்முறை சீனை செய்துவிடாது என்பதன் எதிரொலிப்பே நல்லாட்சி அரசை பிரச்சினைகளோடும் நீடிக்கச் செய்வதற்கான முயற்சிகள் தோல்வியைச் சந்தித்ததாகும்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே விரிசல் முற்றிப்போயுள்ள நிலையில் பிரதமரை பதவி விலக்கச் செய்வதற்கு சட்ட ரீதியாக இருக்கும் வாய்ப்புக்களை ஆராயுமாறு சட்டமா அதிபரை ஜனாதிபதி பணித்திருப்பதும், தான் பதவி விலகப்போவதில்லை என்றும் அரசியல் சட்ட ஏற்பாட்டுக்கு அமைவாக தொடர்ந்தும் தானே பிரதமராக இருப்பதாக பிரதமர் கூறியிருப்பதும் ஒருவருக்கு ஒருவர் சவால் விடுவதாக அமைந்துள்ளது.

இந்நிலையைத் தொடர்ந்து இதுவரை திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டுவந்த இரு தரப்பும் தனித் தனியே ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள் தற்போது பகிரங்கமாகவே நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி தனியாகவும், சுதந்திரக் கட்சியும், பொது எதிரணியும் இணைந்தும் தனியாக ஆட்சி அமைப்பதற்கு வெளிப்படையாகவே முயற்சிக்கின்ற நிலையில் கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்பு மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெரும்பாலும் ஜனாதிபதி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், பொது எதிரணியினரும் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரையும் இணைத்து புதிய அரசொன்றை அமைப்பதற்கான வாய்ப்பக்களே அதிகமாகத் தெரிகின்றது. அதற்கான புறச்சூழலை ஏற்படுத்துவதற்கான அவசியம் மஹிந்த ராஜபக்சவுக்கு அதிகமாகவே இருப்பதால் அதற்கான பூர்வாங்கப் பணிகளை அவர் கவனித்துக்கொள்வார் என்ற கருத்தையும் மறுப்பதற்கில்லை.

தென் இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பூகம்பத்தில் எது நடந்தாலும் அதில் முதல் பாதிப்பைச் சந்திக்கப்போவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையாகவே இருக்கப்போகின்றது. முதலில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை அவர் இழக்க நேரிடும். அதைத் தொடர்ந்து, புதிய அரசியலமைப்புக்கான வரைபை புதிய ஆட்சியாளர்கள் தூக்கி கிடப்பில் போட்டுவிடுவார்கள்.

அந்த அரசியலமைப்பு வரைபானது பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் வரைபு என்றும், அது நாட்டைப் பிளவுபடுத்தும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் பொது எதிரணியினர் வியாக்கியானம் செய்வார்கள். பொது எதிரணியின் தயவில் ஆட்சி ஏற்படுத்தப்படும்போது அவர்களை எதிர்த்தோ, அவர்களின் விருப்பத்திற்கு மாறாகவோ எதையும் சாதிக்கமுடியாதவர்களாகவே புதிய ஆட்சியாளர்கள் இருப்பார்கள்.

ஆக மொத்தத்தில், அரசியலில் புதிய பயணம் ஆரம்பிக்கப்படும்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கேள்விகளுக்கும், அரசியல் தீர்வு தொடர்பான கோரிக்கைகளுக்கும் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து விடைகளைத் தேடுகின்ற நிலைமையே தமிழ் மக்களின் எதிர்காலமாக அமையப்போகின்றது.