Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

91 Views

மார்ச் மாதம் எரிமலை வெடிக்கும்..
அனைவருக்கும் வணக்கம்,

உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய அரசியல் அதிர்வுகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. ஜனாதிபதியின் கதிரையையும், பிரதமரின் கதிரையையும், சில அமைச்சர்களின் கதிரையையும் உலுப்பி எடுத்துவிட்டது.

தேர்தல் முடிவைத்தொடர்ந்து ஒருவாரமாக கொழும்பு அரசியல் தளத்தை பெரும் பரபரப்புக்குள் வைத்திருந்த அந்தச் சூழ்நிலை, எவராலும் ஊகிக்க முடியாதபடி கண்கட்டி வித்தைபோலவே இருந்தது. இப்போது பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையே அதிகார இழுபறி பூதாகரமாக மாறியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியா - சுதந்திரக் கட்சியா? அடுத்து ஆட்சிமைக்கப்போவது என்ற கேள்வி கொழும்பை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருந்தது. இந்த ஆட்டத்தில் ஜனாதிபதி மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டுவதுபோல் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும், சுதந்திரக் கட்சியினருக்கும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டார்.

அதற்குக் காரணம், மஹிந்த எனும் சிங்கத்தின் பற்களுக்கிடையே தலையை வைத்து சரணடைவதா? அல்லது கூடவே இருந்து அவப்பெயரை ஏற்படுத்தும் தந்திரக்கார ரணிலுடனேயே இருப்பதா?  - தனக்கு பாதுகாப்பு என்ற குழப்பம்தான்.

நல்லாட்சி அரசாங்கம் அமைந்து மூன்று வருடங்களைக் கடக்கின்ற இந்த நிலையிலும் நாட்டை வெற்றிகரமாக நிர்வகிக்கத் தவறியவராகவே ஜனாதிபதி மைத்திரிபால இருக்கின்றார் என்ற மக்களின் விமர்சனத்திற்கு ஜனாதிபதி முகம்கொடுத்துள்ளார். என்பதையே தேர்தல் முடிவுகளில் ஜனாதிபதி தலைமையிலான கட்சிகள் பெற்ற பெறுபேறு வெளிப்படுத்தியது.

அரசாங்கத்தை நடத்தும் முழுஅதிகாரத்தையும் பிரதமரிடம் ஒப்படைத்துவிட்டு தாம் ஒரு பார்வையாளராக இருந்துவிட்டதால் அவப்பெயரைச் சுமக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டதான குற்ற உணர்ச்சியின் காரணமாகவே எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலப்பகுதியையாவது தனது ஆளுமைக்குள் அரசை பொறுப்பேற்று பெரும் பொருளாதார பின்னடைவிலும், நிர்வாக சீர்கேட்டிலும் வீழ்ந்து கிடக்கும் நாட்டை சீர்படுத்திவிட்டால் ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைத்துவிடலாம் என்று ஜனாதிபதி எண்ணியிருக்கக் கூடும்.

அதன் விளைவாகவே பிரதமரை மாற்றம் செய்தும், சில அமைச்சுப் பொறுப்புக்களை தானே பொறுப்பேற்றும், அமைச்சரவையில் தேவையான மாற்றங்களைச் செய்தும் புதிய பாணியில் நாட்டை நிர்வகிக்க ஜனாதிபதி முயற்சி செய்தார்.

ஆனால் பிரதமர் பதயிலிருந்து பிரதமர் விலகத் தயார் இல்லை என்று பிடிவாதமாகக் கூறியதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான முயற்சியை எதிர்க்கத் துணிந்து நின்றனர்.

இந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினரும் ஆட்சிக்குள் பங்கெடுக்காமல் வெளியிலிருந்து ஆதரவு தருகின்றோம் என்று நழுவல் போக்கில் நின்று கொண்டதாலும், மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரின் ஆதரவினைப்பெற்று ஆட்சி அமைக்கப்பட்டால் தாம் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாக நாடாளுமன்றத்தில் செயற்படும் நிலைமை ஏற்படும் என்று தற்போது சுதந்திரக் கட்சியில் இருக்கும் பலர் கூறியதாலும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான முயற்சியில் சுதந்திரக் கட்சியினர் தோற்றுப்போனார்கள்.

இவ்விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக முன்னின்று ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான முயற்சிகளை எடுத்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் சில முக்கியஸ்தர்களும் அவர்களின் சகாக்களும் சேர்ந்து சுதந்திரக் கட்சியின் ஆட்சியமைக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்திருப்பார்கள்.

ஜனாதிபதிக்கு பிரதமர் சவால் விடுத்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் முன்வந்து புதிய அரசாங்கம் ஒன்றை ஒன்றிணைந்து ஏற்படுத்துவதற்கு முன்வந்திருந்தால் காரியம் இன்னும் இலகுவாக நிறைவேறியிருக்கும்.

இரண்டுக்கும் வாய்ப்பில்லாத நிலையில் ஜனாதிபதி நடுநிலைமையாளர்போல் இருந்து கொண்டு உங்களில் யார்? பெரும்பான்மையை நிரூபிக்கின்றீர்களோ அவர்கள் ஆட்சியமைக்கலாம் என்று கூறியதால் சுதந்திரக் கட்சியினரின் முயற்சி கைகூடவில்லை.

இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் ஒன்றைச் செய்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதியும், பிரதமரும் முன்னெடுத்ததன் விளைவாக அமைச்சரவையில் மாற்றம் தற்போது முதல் கட்டமாக செய்யப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை மாற்றமும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் திருப்தியானதாக அமையவில்லை. அமைச்சரவை மாற்றத்தில் முக்கியமாக மாற்றப்படுமென பெரும்பான்மை மக்களால் எதிர்பார்பக்கப்பட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சு மாற்றம் போன்ற முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

சட்டம் ஒழுங்கு, நிதி போன்ற அமைச்சுக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்பிலிருந்து ஜனாதிபதி தனக்குக் கீழே எடுத்துக்கொள்ளும் முயற்சியும் நிறைவேறவில்லை.

அதாவது அமைச்சரவை மாற்றம் அவசியமாக இருந்தாலும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் வசமிருக்கும் எந்த அமைச்சையும் மீள ஒப்படைக்க தாம் தயாராக இல்லை என்பதையும், தேவை ஏற்பட்டால் அந்த அமைச்சுக்களை ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கலாம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இம்மாதம் 25ஆம் திகதி (இன்று) நடைபெற்ற அமைச்சரவை மாற்றமானது ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே நடைபெற்றுள்ளதையும், அடுத்த இரண்டு வாரத்தில் நல்லாட்சியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருக்கிடையேயான அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கருத்துக்கூறும்போது கொழுக்கட்டையாக செய்யப்பட்டிருந்தது. இப்போது மோதகமாக செய்யப்பட்டுள்ளது என்று பரிகாசம் செய்யும் அளவுக்கே நிலைமை உள்ளது.

இதற்கிடையே மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் என்றவகையில் அவர் கையாண்ட யுக்தி சரியானதே என்ற கருத்தும் நல்லாட்சி அரசாங்கத் தலைமைகளால் தற்போது ஆலோசிக்கப்படுவதாகத் தெரியவருகின்றது.

தற்போதைய நல்லாட்சி அரசில் ஜனாதிபதியின் வெற்றிக்காகவும், சிறப்பாக கட்சி தாவல் செய்து திறமை காட்டியவர்களை திருப்திப்படுத்துவதற்காகவுமே அமைச்சரவை பங்கிடப்பட்டுள்ளது. ஆகையால்தான் அவர்கள் மக்களுக்கு பொறுப்புக் கூறாமல் தம் மனம் போன போக்கில் அதிகாரத்தை பிரயோகித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் உணரப்பட்டுள்ளது.

ஆகவேதான் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சரை நியமித்து வேலைகளை ஒப்படைப்பது என்ற ஆலோசனையையும், முன்னர் ஓரளவு சிறப்பாகவும் அனுபவத்துடனும் அமைச்சுப் பொறுப்புக்களை கொண்டு நடத்தியவர்களை அமைச்சரவையில் உள்ளீர்க்க வேண்டும் என்ற கருத்துக்களையும் ஜனாதிபதி நிராகரிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் தற்போதைய அமைச்சரவை மாற்றமும் ஜனாதிபதிக்கு திருப்தியானதாக அமையவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. அடுத்து இரண்டு வாரத்திற்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருக்குள் ஏற்படுத்தப்படவிருக்கும் அமைச்சரவை மாற்றங்களும் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முக்கியமான அமைச்சுக்களை ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து மீளப்பெற்றுக்கொள்ள முடியாமல் போன நிலையில் அடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றமானது, கஞ்சிப்பாணைக்குள் கையை விட்டு சுடுசோற்றைத் தேடிய கதையாகவும் போகலாம்.

இந்த அமைச்சரவை மாற்றங்களும் தனது கையை மீறிய செயற்பாட்டைக்கொண்டிருக்குமானால், மார்ச் மாதமானது மீண்டுமொரு ஆட்சிமாற்றத்திற்கான மாதமாக அமையக்கூடும். அத்தகைய சூழலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னின்று ஆட்சி மாற்றத்திற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் கட்டாயம் ஏற்படும்.

அது நடந்தே தீரும் என ஏன் எதிர்ப்பார்க்க முடிகின்றது என்றால், ஏஞ்சியிருக்க கூடிய குறுகிய காலத்திற்காவது, தனக்குப் பொருத்தமான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான புறச்சூழலை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிடுவதற்கு சாத்தியமுண்டு.

அத்தகைய சூழலில் ரணில் விக்கிரமசிங்க எதிர்போட்டியாளராக இருக்கக்கூடாது என்பதையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்பார்க்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று இடைநடுவில் நடைபெற்றுவிடக் கூடாது என்பதையும் சிந்திக்கும் அதேவேளை, குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதியாக மக்கள் மத்தியில் தன்னை நிறுத்தினால், அடுத்து ஒரு வாய்ப்பை மக்கள் தமக்கு வழங்குவார்கள் என்று ஜனாதிபதி தூர நோக்குடன் சிந்திக்கவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.

மீண்டும் சந்திக்கும்வரை நன்றி