Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

59 Views

இனவாதத் தீயை அணைக்க துணிச்சலான நடவடிக்கை அவசியம்

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்திலும் இனமோதல்களுக்கான நெருப்பு இப்போதும் எரிந்து கொண்டே இருக்கின்றது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ்மக்களை தோற்கடித்துவிட்டதான மனோ நிலையோடு சிங்கள இனவாத சக்திகள் கொண்டாட்டங்களை நடத்தின. பால் சோறு பொங்கி வீதி வீதியாக பகிர்ந்துண்டு வெற்றிக் களிப்பில் மிதந்தார்கள். “புலிகளின் தலைவர் பிரபாகரனையே அழித்துவிட்டோம் நீங்கள் எம்மாத்திரம்” என்றும் கூறினார்கள்.

அந்தக் காலகட்டத்தில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, முடிவுக்கு கொண்டுவரப்பட்டது பயங்கரவாதத்திற்கு எதிரான போராகும். ஆகவே அதைத் தமிழ் மக்களுக்கு எதிரான போர் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம் என்றும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியும், அதற்கு மேலாக விஷேட அதிகாரங்களை பகிர்ந்தும் தீர்வொன்றைக்கான வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதன் பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள இனவாதிகளின் மனோநிலை சற்று ஓய்வடைந்திருந்தாலும், இலங்கையில் அடுத்த சிறுபான்மை இனமான முஸ்லிம்களையும் ஒடுக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் வலிந்து இன முரண்பாடான பிரச்சினைகள் தலைதூக்கத் தொடங்கின.

அதில் ஹலால் பிரச்சினை, பொருளாதார பலத்தை சிதைப்பது, பள்ளிவாசல்களை உடைத்து தீவைப்பது என்று பல எரிச்சலூட்டும் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தலைதூக்கிய பின்னணியில் தமிழர்களின் வணக்கஸ்தலங்களையும் தாக்கி அழிக்கின்ற சம்பவங்களும் நடைபெறவே செய்தன.

இந்த வன்முறைகளின் பின்னணியில் இனவாத அமைப்புக்களான பொதுபல சேனா, இராவணா பலய, பல்வேறு உறுமயக்கள் என்று பல அமைப்புக்கள் செயற்பட்டன. அவற்றை மகிந்த ராஜபக்ஷ கட்டுப்படுத்தவோ, தடைசெய்து சிறுபான்மை இனங்களின் உரிமையைப் பாதுகாக்கவோ, பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ, ஒற்றுமையை ஏற்படுத்தவோ முயற்சிக்கவில்லை என்பதே அந்த ஆட்சியாளர்கள் மீது சிறுபான்மையினருக்கு ஏற்பட்டிருந்த கோபமாகும்.

அவ்வாறான இனவாத வன்முறையாளர்களை மகிந்தவின் சகோதரரான கோட்டபாய ராஜபக்ஷவே பின்னணியில் நின்று அல்லது வழிகாட்டி இயக்குகின்றார் என்ற சந்தேகங்களும் சிறுபான்மையினருக்கு இருக்கவே செய்தது.

முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் உணவருந்தக் கூடாது, பொருட்களை கொள்வனவு செய்யக்கூடாது, பணிபுரியக் கூடாது, அவர்களுக்கு சொத்துக்களை விற்பனை செய்யக்கூடாது என்றெல்லாம் பல்வேறு அறிவிப்புக்களையும் சிங்கள இனவாதிகள் வெளியிட்டார்கள்.

ஆனாலும் பெரும்பான்மையான சிங்கள மக்களிடையே இனவாத எண்ணம் இல்லை. அவர்கள் இனவாதச் செயற்பாடுகளை வெறுத்தார்கள். வெளிப்படையாகவே அதை விமர்சித்தார்கள்.

அநேகமான இனவாத அமைப்புக்கள் மொட்டைத் தலையுடன், காவி அணிந்த பௌத்த மத துறவிகளைப்போலவே தோன்றினார்கள். அதற்குக் காரணம் இலங்கையில் முன்னுரிமைக்குரிய பௌத்த மதத்துறவிகளே தமது பௌத்த இனத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தை நடத்துகின்றார்கள் என்ற தோற்றப்பாரட்டை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தவே அவ்வாறு செய்தார்கள்.

ஆனாலும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் அதை உணர்ந்து கொண்டு காவி அணிந்தும், மொட்டை போட்டுக்கொண்டும் சில வன்முறைச் சக்திகள் பௌத்த மதத்தின் புனிதத் தன்மைக்கும் கோட்பாட்டுக்கும் விரோதமாகச் செயற்படுகின்றார்கள் என்று பகிரங்கமாக விமர்சித்தார்கள். இதனால் இனவாதத்தை தோற்றுவிக்கும் இனவாதிகளின் எண்ணம் தோற்றுப்போனது.

பெரும்பான்மையான சிங்கள மக்கள் இன வன்முறையை ஆதரிக்காவிட்டாலும், சிறு சிறு குழுக்களாக இனவாதிகள் செயற்படவே செய்தார்கள். வெளிநாடுகளில் நிதியைப்பெற்று இன வன்முறையை தோற்றுவிக்கும் குழுக்களை கட்டமைப்பு ரீதியாக உருவாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட இனவாத கட்டமைப்பில் ஒரு அங்கமாகவே “மகாசோஹோன் பலகாய” எனும் அமைப்பின் உருவாக்கமாகும். இதுபோன்ற பல அமைப்புக்கள் பாதாள உலகக் கும்பல்களைப்போன்று செயற்படக்கூடும்.

இவ்வாறான அமைப்புக்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு ஆயுதப்பயிற்சி, மதபோதனை போன்ற பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்ற வாய்ப்பை மறுப்பதற்கில்லை.

இந்தக் குழுக்கள் முறையாக பௌத்த துறவியாக பயிலாதபோதும், தேவை ஏற்பட்டால் பௌத்த துறவிகளைப்போன்று தம்மை உருமாற்றிக்கொண்டும் இன வன்முறையில் ஈடுபடுவார்கள்.

அண்மையில் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான உணவுக் கடையில் கொத்துரொட்டி உண்டவர்கள், அந்த உணவில் கருத்தரிப்பை தடுக்கும் அதாவது மலமட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மாத்திரையைப் போட்டு வேறு இனத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது என்று ஒரு பிரச்சினையை ஏற்படுத்தினார்கள்.

அந்தப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து சிங்கள முஸ்லிம் இனவன்முறையாக தோற்றம்பெற்றது. அங்கும் முஸ்லிம்கள் மீது தாக்குதல், முஸ்லிம்களின் வர்த்த நிலையங்கள் மீது தாக்குதல், எரியூட்டல் என்று களேபரங்கள் நடந்தன.

அந்தப் பிரச்சினை அடங்குவதற்கு முன்னர் கண்டி திகனவில் நடைபெற்ற தற்செயலான வாகன விபத்தில் ஒருவர் இறந்துவிட்டார். வாகனத்தை செலுத்தி வந்தவரை நான்கு பேர் தாக்கி படுகொலை செய்கின்றனர்.

இதில் வாகனத்தை செலுத்தியவர் சிங்களவர், விபத்தில் இறந்தவர் முஸ்லிம் என்றும் ஆரம்பத்தில் கூறப்பட்டது. சாரதியை அடித்துக்கொண்டவர்கள் முஸ்லிம்கள் என்றும், அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் சிங்களவர் என்பதால் சிங்கள இளைஞர்கள் கொந்தளித்து முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தாக்கினார்கள் என்றும் தொடங்கிய வன்முறைகள் பாரிய இன வன்முறையை தோற்றுவித்து அங்கு நிலைமையை கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும், நாடு தழுவிய ரீதியில் அவசரகால சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவரவும், சமூக வலை தளங்களை அரசாங்கம் முடக்கி வைக்கவுமான பாரிய இன மோதலாக வெடித்தது.

சிங்கள மக்கள் மஞ்சள் கொடிகளை தமது இல்லங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் பறக்கவிடுங்கள் ஏனைய வீடுகளும், வர்த்தக நிலையங்களும் தாக்கப்படும், தீக்கிரையாக்கப்படும் என்றும் இனவாதிகள் அறைகூவல் விடுக்கின்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் வேளையிலும் இனவாதிகள் வன்முறையில் ஈடுபடுகின்ற அளவுக்கு இனவாதிகள் செயற்பட்டார்கள். இந்த வன்முறைகளை திட்டமிட்டு நடத்தியவர்கள் இந்த “மகாசோஹோன் பலகாய” எனும் அமைப்பு என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் சில பௌத்த வணக்கஸ்தளங்களும், வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டாலும், பெருமளவான தாக்குதல்களுக்கு இலக்காகி இருப்பது முஸ்லிம்களின் வணக்கஸ்தளங்களும், வர்த்தக நிலையங்களுமாகும். சில முஸ்லிம் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டபோதும், இனவாத அமைப்பினர் திட்டமிட்டு கட்டமைப்பு ரீதியாக வன்முறையில் ஈடுபட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

கண்டியில் நடைபெற்ற வன்முறைகள் ஒரு உந்துதலில் நடைபெறவில்லை. வேறு ஊர்களிலிருந்து அழைத்துவரப்பட்ட வன்முறைக் கும்பல்களாலேயே நடத்தப்பட்டுள்ளது. அந்த வன்முறைகளை தூண்டிவிடும் செயற்பாடுகளை சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி கொழும்பிலிருந்தும் சிலர் முன்னெடுத்திருக்கின்றார்கள்.

சட்டம் ஒழுங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படாததும், அதன் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்திருப்பதுமே ஆங்காங்கே சாதாரணமாக நிகழக்கூடிய சிறிய பிரச்சினைகள் கூட பாரிய இன வன்முறைகளாக நடைபெறுவதற்கான காரணமாக அமைந்துள்ளது என்றும், சட்டம் ஒழுங்கை அமுல்படுத்த வேண்டியவர்களே சார்பு மனோ நிலையோடு செயற்படுவதும் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் போவதற்கு காரணம் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கண்டியில் நடந்த சம்பவம் ஒன்று சட்டம் ஒழுங்கு எவ்வாறு செயற்பட்டுள்ளது என்பதை உணர்த்துகின்றது ஒரு வர்த்தக நிலையத்தை இனவாதக் கும்பல் தாக்கி எல்லாவற்றை உடைத்து நொறுக்கிவிட்டு அடுத்த கடையை உடைக்கும்போது அங்கு வந்த காவல் துறையினர் தாக்கியவர்களை கைது செய்யாமல் உடைக்கப்பட்ட கடையில் தலையில் கையை வைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்த கடை உரிமையாளரைக் கைது செய்ததாக வெளியான செய்திகளைக் கேட்டு சிறுபான்மையினர் அதிர்ந்து போய் இருந்தார்கள்.

கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறைகளோடு தொடர்புபட்ட 146 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மகாசோஹோன் அமைப்புக்கு வெளிநாட்டிலிருந்து பணம் கிடைக்கப்பெற்றுள்ளதா? என்பதையிட்டும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவசர காலச் சட்டம் அமுலில் இருப்பதால் சமூக வலை தளங்கள் மீதான தடை நீடிக்கும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதான் நல்லாட்சியின் கீழான இலங்கையின் தற்போதைய நிலைமையாகும்.

இலங்கையில் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளும், சமத்துவமான வாழ்வுக்கான அங்கீகாரமும் இன்னமும் கேள்விக்குரியாகவும், பாதுகாப்பற்றதாகவுமே இருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும், ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு தமிழ் மக்களை தள்ளவிடக் காரணமாக இருந்த அடிப்படைப்பிரச்சினைகள் அவ்வாறே இருக்கின்றன.

அந்தப் பிரச்சிகைளுக்கும் கோரிக்கைகளுக்கும் உரிய தீர்வையும், நியாயத்தையும் வழங்குவதற்கு இலங்கை அரசுகளும் சித்தமாக இருப்பதாகத் தெரியவில்லை. சிறுபான்மையினரை ஒடுக்கி ஆழ்வதற்கு விருப்பம் கொண்டிருக்கும் இனவாதிகளை தண்டித்து இன ஐக்கியத்தை ஏற்படுத்த போதுமான துணிச்சலும், பொறிமுறையும் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைப் பிரச்சனை எவ்வாறு நீருபூத்த நெருப்பாக கனன்று கொண்டு இருக்கின்றதோ, அதுபோல் சிறுபான்மை இனங்களை அழித்தும் ஒடுக்கியும் ஆழ நினைக்கும் இனவாதமும் திரை மறைவில் செயற்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் என்றும் அதற்காக கோடிக்கணக்கான நிதி செலவு செய்யப்படுவதும் மக்களை வென்றெடுக்கத் தவறிய வேலைத்திட்டங்களாகவே நடந்தேறுகின்றன.

தேசிய நல்லிணக்கமானது தனியே தமிழ் மக்களிடம் மட்டுமல்ல, அது சிங்கள மக்களிடமும், முஸ்லிம் மக்களிடமும் கொண்டு செல்லப்பட்டு மூவின மக்களிடமும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் இன ஒற்றுமைக்கான முயற்சிகளில் நாம் தோற்றுப்போய்க் கொண்டே இருப்போம்.